முழு அரசு மரியாதையுடன் சரோஜா தேவி உடல் அடக்கம்! – துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உருக்கம்!

Published On:

| By christopher

dk shivakumar confirmed respect for saroja devi

மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜாதேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் இன்று (ஜூலை 15) நல்லடக்கம் செய்யப்பட்டது. dk shivakumar confirmed respect for saroja devi

எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் நடித்து தமிழ் திரையுகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ’கன்னடத்துப் பைங்கிளி’ நடிகை சரோஜா தேவி.

தன் வாழ்நாளில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 87.

இதனையடுத்து அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உருக்கமுடன் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அவரது சொந்த ஊரான சென்னபட்னாவில் உள்ள தஷ்வாரா கிராமத்திற்கு அவரது உடல் இன்று கொண்டுவரப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது தாயாரின் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கண்கலங்க பங்கேற்ற துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “சரோஜா தேவி ஒரு பிரபலமான நடிகை. அவரை நான் சிறு வயதிலிருந்தே அறிவேன். நான் முதன்முதலில் அமைச்சரானபோது, அவர் என்னை அழைத்து, நீங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்.

மனித பிறப்பு தற்செயலானது, மரணம் தவிர்க்க முடியாதது. பிறப்பு இலவசம், மரணம் உறுதி. இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நாம் செய்யும் சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். சரோஜா தேவி மிக இளம் வயதிலேயே இந்திய அரசிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றார். அந்த நேரத்தில், அந்த வயதில் யாரும் அந்த விருதைப் பெறவில்லை” என்றார்.

மேலும் அவர், “கிராமப்புறத்தில் பிறந்த அவர், திரையுலகில் நிகழ்த்திய மகத்தான கலை சேவை ஈடு இணையற்றது. அவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கவில்லை. அனைத்து தரப்பு மக்களும் அவரை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் பார்த்தனர். மாநிலம் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டபோது, அவர் எங்களுடன் நின்று மாநில நலன்களைப் பாதுகாத்தார்.

அவரது பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும் வகையில் சாலைகளுக்கு அவரது பெயரை வைக்க ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ யோகேஷ்வர் வலியுறுத்தியுள்ளார். அவரது விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் விவாதித்து தெரிவிப்போம். சரோஜா தேவியின் பெயர் நிலைத்திருக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share