தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவப் படுகொலையை தொடர்ந்து பரிதாபங்கள் கோபி சுதாகர் டீம் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
நெல்லை கவின் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் ஜாதி ஆணவப்படுகொலை, ஜாதிய தலைவர்களின் குரு பூஜைகளின் போது நடக்கும் சம்பவங்கள் ஆகியவற்றை பகடி செய்து பரிதாபங்கள், கோபி, சுதாகர் டீம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 55 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வீடியோ சாதிய வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக கூறி கோவை முக்குலத்தோர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த கார்த்தி தனுஷ்கோடி கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் நேற்று முன்தினம் மனு அளித்தார்.

இந்நிலையில் இன்று திராவிடர் விடுதலை கழகம் சார்பில் ‘பரிதாபங்கள்’ கோபி சுதாகர் டீம்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “பரிதாபங்கள் யூடியூப் குழுவினர் கோபி, சுதாகர் இருவரும் பரிதாபங்கள் என்கிற youtube சேனல் மூலம் விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள். தற்போது society parithabangal episode மூலம் ஆணவக் கொலைகளுக்கு காரணமாக உள்ளவற்றை விளக்கி அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்தியும், கல்வி சார்ந்து முன்னேறுவோம் ஒற்றுமையாக இருப்போம் என்பதை வலியுறுத்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வெளியான நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் சவுத்ரி தேவர் என்பவர், கோபி சுதாகர் இருவரையும் மிரட்டும் விதமாக, ‘போன வருடம் குருபூஜை பற்றி பேசின சவுக்கு சங்கரின் நிலை தெரியுமா? காவல் துறையால் கை உடைக்கப்பட்டு குண்டாஸில் அடிக்கப்பட்டான். சித்தர் கிட்ட விளையாடாதே நீங்க எல்லாம் ஒரு ஆளே கிடையாது’ என்று வெளிப்படையாக வீடியோ வெளியிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மற்றும் இதே வீடியோவில் ஏற்கனவே தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் ஏரல் பகுதியில் சுர்ஜித் என்பவரால் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதால் சுர்ஜித்தை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த பதட்டமான சூழலில் சுர்ஜித்தின் ஆணவக்கொலையை ஆதரித்து பேசி மேலும் சமூகப் பதட்டத்தை உருவாக்கி வரும் சவுத்ரி தேவர் மீது உரிய சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து சமூக பதட்டத்தை தணிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.