தமிழ் திரையுலகில் சில நட்சத்திர ஜோடிகள் ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களில் ஒருவராக விளங்குவது சூர்யா – ஜோதிகா ஜோடி. இவர்களுக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள். இவர்களது பெயர்களின் முதலெழுத்தைக் கொண்டு ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பு நிறுவனத்தை இருவரும் நடத்தி வருவது பலரும் அறிந்த விஷயம்.
சமீபத்தில் பள்ளி படிப்பை தியா முடித்து பட்டம் பெற்ற நிலையில் தற்போது 2டி நிறுவனம் தயாரித்திருக்கிற ஒரு ‘ஆவண குறும்படம்’ மூலமாக இயக்குனராக உருவெடுத்திருக்கிறார் தியா.
காட்சி சித்தரிப்பும் ஆளுமைகளின் நேர்காணலும் அடங்கிய ‘டாகு ட்ராமா’ (docudrama) வகைமையில் உருவாக்கப்பட்டுள்ள ‘லீடிங் லைட்’ (Leading Light) எனும் படைப்பைத் தந்திருக்கிறார். சுமார் 13 நிமிடங்கள் ஓடுகிற இந்த ஆவணக் குறும்படமானது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜெல்ஸில் உள்ள ரீஜென்ஸி தியேட்டரில் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை திரையிடப்படுகிறது. ஆஸ்கர் தகுதிச் சுற்றில் இது இடம்பெற்றுள்ளது.

திரையுலகில் ‘லைட் ஆபிசர்ஸ்’ என்றழைக்கப்படுகிற லைட்மேன்கள் ஒரு திரைப்பட உருவாக்கத்தில் தூண்களாக கருதப்படுகின்றனர். ஆவணப்பட பாணியில் ‘லைவ் லொகேஷன்’களில் ஆக்கப்படுகிற படைப்புகளிலும் கூட இவர்களது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட பணியில் ஈடுபடுகிற பெண்கள் மூவரது அனுபவங்களைச் சொல்கிற விதமாக இந்த ‘லீடிங் லைட்ஸ்’ உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தில் ஹெதல் தேதியா, பிரியங்கா சிங், லீனா கங்குர்தே ஆகிய மூன்று ‘லைட் வுமன்’களை காட்டியிருக்கிறார் தியா. இது நிச்சயம் சிவகுமார் குடும்பத்தினரைப் பெருமிதத்தில் ஆழ்த்துகிற விஷயமாக இருக்கும்.
’அடுத்தது என்ன, சினிமா டைரக்ஷன் தானே’ என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தியா சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்..!