புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அம்மமாநில அரசு இன்று (செப்டம்பர் 26) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது. இந்தாண்டு வரும் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் இப்போதே கடை வீதிகள் களைகட்ட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
இதில், 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சமையல் எண்னெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவா, 500 கிராம் மைதா ஆகிய பொருட்கள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழகத்திலும் அடுத்த சில நாட்களில் தீபாவளி சிறப்பு தொகுப்பை அரசு அறிவிக்கும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கடந்தாண்டு ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்பு தொகுப்பினை கூட்டுறவு துறையின் மூலம் தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.