ADVERTISEMENT

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு – எவ்வளவு தெரியுமா?

Published On:

| By Kavi

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இப்பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசு சார்பில் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 20 சதவிகித போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (அக்டோபர் 6) வெளியிட்ட அறிவிப்பில், ‘பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2024–25 ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015 படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பை தளர்த்தி, அனைத்து ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்:

இலாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ADVERTISEMENT

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் “C” மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ3,000/- கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400/- மற்றும் அதிகபட்சம் ரூ.16800/- வரை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,69,439 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.376.01 கோடி மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இது தவிர, பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

அரசின் இந்த நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share