19 வயதில் உலக செஸ் சாம்பியன்… இந்தியாவின் 4வது பெண் கிராண்ட் மாஸ்டர்… யார் இந்த திவ்யா தேஷ்முக்!

Published On:

| By christopher

divya deshmukh win fide worldcup champion 2025

தன்னை விட அனுபவத்தில் பலசாலியான கோனேரு ஹம்பியை தோற்கடித்து மகளிர் செஸ் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார் 19 வயதான திவ்யா தேஷ்முக்.

ஜார்ஜியாவின் படுமி நகரில் கடந்த 5ஆம் தேதி முதல் மகளிர் செஸ் உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த முதல் கிராண்ட் மாஸ்டரும், உலகின் 5ஆம் நிலை வீராங்கனையுமான கோனேரு ஹம்பியும், 18ஆம் நிலையில் உள்ள இளம் வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கும் தகுதி பெற்றனர்.

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் மோதியது இதுவே முதல்முறை.

அதன்படி கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முதல் இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. அதனையௌத்து இன்று வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் ஹம்பி சற்று தடுமாறிய நிலையில், 1-0 என்ற கணக்கில் வென்று 19 வயதில் FIDE மகளிர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 4வது பெண் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.

பொதுவாக கிராண்ட்மாஸ்டராக வெல்வதற்கு மூன்று விதிமுறைகள் உள்ளன. ஆனால் அவை எதையும் அவர் பூர்த்தி செய்யாத நிலையில், தற்போது உலகக்கோப்பை சாம்பியன் ஆனதன் மூலம் நேரடியாக கிராண்ட் மாஸ்டர் தகுதியை பெற்றுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டுதான் பெண்கள் பிரிவில் திவ்யா உலக ஜூனியர் சாம்பியனாக முடிசூட்டப்பட்டார். அடுத்த 13 மாதங்களில் தற்போது 19 வயதான மகளிர் செஸ் போட்டியில் தனது 2வது மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு புடாபெஸ்டில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றதற்குப் பின்னால் திவ்யாவும் முக்கிய காரணமாக இருந்தார். அங்கு அவர் ஒரு தனிநபர் தங்க பதக்கத்தையும் வென்றிருந்தார்.

தற்போது உலக சாம்பியன் பட்டத்தை வென்றதும், நேராக அவரது தாயைக் கட்டிபிடித்து கண்ணீர் வடித்த காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “போட்டிக்கு முன்பு நான் இங்கே ஒரு கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற முடியும் என்று நினைத்தேன். இறுதியில், கிராண்ட்மாஸ்டர் ஆனேன். வரும் காலங்களில் நான் நிச்சயமாக எண்ட்கேம்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது நிறைய அர்த்தம் தருகிறது. ஆனால் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இது ஒரு ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

திவ்யாவின் இந்த சாதனையைத் தொடர்ந்து அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பத்தொன்பது வயதில் மிக இளம் வயதில் FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற திவ்யா தேஷ்முக்கிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கோனேரு ஹம்பி இரண்டாம் இடத்தைப் பிடித்ததால், சதுரங்க உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமை கிடைத்துள்ளது. இது நம் நாட்டில், குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகுதியான திறமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும் சிறந்து விளங்கியதற்காக கோனேரு ஹம்பிக்கு எனது ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு பெண் சாம்பியன்களும் தொடர்ந்து அதிக பெருமைகளைக் கொண்டு வந்து நமது இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.


திங்களன்று, முதல் ஆட்டம் டிராவில் முடிந்த பிறகு, ஹம்பியின் தவறுக்கு நன்றி, திவ்யா இரண்டாவது டைபிரேக் ஆட்டத்தை வென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share