திராவிட இயக்கம் மீதான திரிபுவாதம்!

Published On:

| By Minnambalam Desk

இக்லாஸ் உசேன்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஜெ.பாலசுப்ரமணியம், ‘பாபாசாகிப் அம்பேத்கரின் இதழ்களும், அம்பேத்கரிய இதழ்களும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை விகடன் குழுமம் வெளியிட்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

அதில் அம்பேத்கர் நடத்திய இதழ்கள் பற்றியும் அவரின் இதழியல் பணி பற்றியும் தகவலை பதிவு செய்ததோடு தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்களாக இயங்கிய, இதழ்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்கிறார். அதில் தமிழகத்தில் அம்பேத்கரின் குரலாய் ‘உரிமை’ என்ற இதழ் இயங்கியதாக இந்த கட்டுரையாசிரியர் பதிவு செய்துள்ளார்.

அம்பேத்கரை பற்றி பெரியார் என்ற தலைப்பில் ‘உரிமை’ இதழில் வந்த தகவலில் விடுதலையில் வெளிவந்த தலையங்கம் ஒன்றை உரிமை இதழ் பதிவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
  • ” காங்கிரஸில் சேராதீர்கள், காங்கிரஸை பலப்படுத்தாதீர்கள், காங்கிரஸ் மணல் வீடுபோல் சரிந்துகொண்டு வருகிறது” என்று செட்யூல் வகுப்பு மக்களுக்கு சொல்லியிருக்கிறார். அவர் (டாக்டர் அம்பேத்கர்) மற்ற ஐந்தாம்படை கருங்காலிகள்போல் உங்களை (செட்யூல் வகுப்பாரை) காட்டிக்கொடுத்து பதவி பெற்றவரல்ல. காங்கிரஸ் சர்க்காரால் கெஞ்சி அழைக்கப்பட்டவர். உங்களுக்குச் சிறிதாவது யோசனை இருந்தால் நீங்கள் டாக்டர் அம்பேத்கர் சொன்னதை கவனிப்பதா அல்லது கூலி ஐந்தாம்படை  –  உங்களைக் காட்டிக்கொடுப்பவர்கள் சொல்லுகிறபடி குரங்குபோல் ஆடுவதா என்று கேட்கிறேன்.” (உரிமை இதழ் – 15.10.1948). 

என்ற செய்தியும் அடுத்து மீனாம்பாள் சிவராஜ் அறிக்கை ஒன்றை அதில் பதிவு செய்துள்ளார்.

1948-ல் நடந்த சென்னை கார்ப்பரேஷன் மேயர் தேர்தலில் மீனாம்பாள் போட்டியிட்டதாகவும் அவரை திராவிடர்கள் (பெரியார் உட்பட) அனைவரும் திட்டமிட்டு தோற்கடித்ததாகவும் அதை கண்டித்து உரிமை இதழில் மீனாம்பாள் சிவராஜ் எழுதிய ஆதங்கத்தை அம்பேத்ரிய இதழியல் செய்தியாக   பதிவு செய்துள்ளார் இந்தக் கட்டுரையாளர்.

ADVERTISEMENT
  • மீனாம்பாள் சிவராஜ் இந்த அறிக்கையில் திராவிடக் கொள்கை பேசிக்கொண்டு, ஆனால் சாதியைப் பின்பற்றுகிறவர்களைக் கடுமையாகச் சாடுகிறார். இது மீனாம்பாள் சிவராஜ் தேர்தலில் தோற்றதினால் தனிப்பட்ட பகைமைகொண்டு விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இது கொள்கை நடைமுறையின் தோல்வியால் உருவான விமர்சனம். அதாவது, சாதி ஏற்றத்தாழ்வை தோற்றுவித்த ஆரியத்தை எதிர்க்கும் திராவிடர்கள், தலித்துகள் மீது மட்டும் சாதியப் பாகுபாட்டை காட்டுவது ஏன் என்று அம்பேத்கரியர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அன்று மட்டுமல்ல, இன்றும் இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டே வருகிறது. ( எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூலில் பக்கம் 656 )” 

என்று திராவிட இயக்கம் சாதிய நோக்கத்தோடு அன்று தொட்டு இன்று வரை இயங்கி வருகிறது என்று பொத்தாம் பொதுவான அதே நேரத்தில் மிக மோசமான இழிவான ஒரு குற்றச்சாட்டை பாலசுப்பிரமணியம் முன் வைக்கிறார்.

அவர் அம்பேத்கரை பற்றியோ அல்லது உரிமை இதழில் வந்த தகவலை அப்படியே கட், காப்பி பேஸ்ட், வடிவில் எடுத்துப் பயன்படுத்தி இருந்தால் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் வராது. அது அந்த காலகட்டத்தில் வந்த தகவல் என்ற அளவில் முடிந்து போயிருக்கும்.

ஆனால் கட்டுரையாளர் அந்த காலகட்டத்தில் வந்த செய்தியை எடுத்து அதில் மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் விமர்சனத்தை இணைத்துள்ளார். அதை நேர்மையாக பயன்படுத்தி இருந்தால் அதை விமர்சனமாக நம் கருதி இருக்கலாம். ஆனால் மீனாம்பாள் சிவராஜ் வெளியிட்ட கண்டன அறிக்கையை காலத்தை சுத்தமாக மறைத்து விட்டு முன் பின் நடந்த அரசியலை வெட்டி ஒட்டியது போல் ஒரு கட்டுரையை உருவாக்கி அதன் மூலம் திராவிட இயக்கம் தலித்களுக்கு எதிரானது என்பதை நிறுவ முயன்றுள்ளார்.

பெரியார் 1948இல் காங்கிரஸ் காரர்களை பார்த்து விமர்சனம் செய்தபோது “காங்கிரஸில் சேராதீர்கள், காங்கிரஸை பலப்படுத்தாதீர்கள், காங்கிரஸ் மணல் வீடுபோல் சரிந்துகொண்டு வருகிறது” என்ற கருத்துக்கு அடுத்து நீங்கள் மட்டும் சரியா? என்று கேட்பது போலவே பாலசுப்ரமணியம் அந்த கட்டுரையை வடிவமைத்துள்ளார். 

உரிமை இதழில் ஒரு தகவல் வருகிறது. அது எந்த காலகட்டத்தில் வருகிறது அந்த காலகட்ட அரசியல் சூழல் என்ன என்று எதையும் ஆராய்ச்சி செய்யாமல் ஒரு துக்ளக் வாசகர் போல் ஒரு மேலோட்டமான தகவலை மையமாக வைத்து கட்டுரையாளர் திராவிட இயக்கத்தின் மீது விமர்சனம் வைத்துள்ளார்.

1945/46 இல் சென்னை கார்ப்பரேஷன் மேயராக தந்தை சிவராஜ் இருந்தார். 1948இல் அன்னை மீனாம்பாள் சிவராஜ் போட்டியிட்டதாகவும் அதில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் தோற்கடித்ததாகவும் இந்த கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.

சென்னை மாநகராட்சிக்கு முதல் பெண் மேயர் என்பது 1971 இல் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன் 40 ஆண்டுகள் ஆண்கள் தான் மேயர். 1948 இல் நடந்த மேயர் தேர்தல் என்பது இரண்டு ஆண் கோடீஸ்வரர்கள் இடையே நடந்தது. அதில் மீனாம்பாள் சிவராஜ் போட்டியிடவே இல்லை.  

பிறகு மீனாம்பாள் சிவராஜ் அறிக்கை என்பது  ‘ஆல்டர்வுமன்’ தேர்தல் பற்றியது. அது சென்னை நகர சபையில் பெண்களுக்கான கௌரவ பொறுப்பு போல, அதில் தொடக்கத்தில் முத்துலட்சுமி ரெட்டி அந்தப் பதவியை வகித்தார். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண் அந்த பதவிக்கு வரலாம். அந்த அடிப்படையில் தான் இந்திராணி பாலசுப்பிரமணியமும் மீனாம்பாள் சிவராஜ் அவர்களும்  ஆல்டர்வுமன் தேர்தலில் போட்டியிட்டார்கள். அது 1948 இல் அல்ல அது 1946ஆம் அல்லது 1947ஆம் ஆண்டாக இருக்கலாம்.

இந்தக் கட்டுரையாளர் சென்னை அடையாறில் உள்ள எம்.ஐ.டி.எஸ் ஆய்வகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்; ஒரு ஆய்வு கட்டுரை எழுதும் போது அதன் முன் பின் தரவுகள் அடிப்படையில் தான் எழுத வேண்டும் என்ற குறைந்தபட்ச நேர்மை கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த கட்டுரையாளர் தன்னுடைய திராவிட இயக்க ஒவ்வாமைக்கு ஆதாரமாக மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் அறிக்கையை பயன்படுத்தி உள்ளார். 

மீனாம்பாள் சிவராஜ் அறிக்கை என்பது எப்போது வந்தது, அது எந்த தேதியில் வந்தது என்பதை பார்த்து இருந்தாலே அது 1948இல் நடந்த மேயர் தேர்தலுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சாதாரண கூகுள் மூலமாகவே தெரிந்து கொண்டிருக்கலாம் .

ஜாதி இந்து கவுன்சிலர்கள் அதாவது திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீனாம்பாள் சிவராஜிற்கு வாக்களிக்காததால் தான் அவர் தோற்றார் என்பது மீனாம்பாள் அவர்களின் குற்றச்சாட்டு.. அதையே பாலசுப்பிரமணியமும் திரும்ப பதிவு செய்கிறார். 

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மேயரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற அடிப்படையில் தான் தேர்தல் நடப்பதாக கட்டுரையாளர் மேலோட்டமாக சொல்கிறார் ஆனால் அதை சற்று விரிவாக பார்ப்போம்;

மேயர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை பார்த்தோமானால் 

1932இல் தாழ்த்தப்பட்டோர்களை கவுன்சிலர்களாக நியமிக்க ஒரு திருத்தம் சென்னை கார்ப்பரேஷனில் நீதிக்கட்சி சார்பாக கொண்டு வரப்பட்டது. அதன்மூலம் தாழ்த்தப்பட்ட  சமூகத்தைச் சேர்ந்த ஜ.சிவண்முகம் பிள்ளை எம்.ஏ., கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு பாராட்டு கூட்டம் சென்னை எழும்பூரில் ஸ்பர்டாங் சாலையில் நடந்தது.

அதில் சிவசண்முகம் பிள்ளையை பாராட்டி நீதிக்கட்சி தலைவர்களான சர் கே.வி. ரெட்டி தலைமையில் திவான் பகதூர் ராமசாமி முதலியார் பேசுகையில்

  •  “ஜ.சிவசண்முகம் பிள்ளை கார்ப்பரேஷன் அங்கத்தினராக நியமனம் செய்யப்பட்டதற்கு நான் சந்தோஷம் அடைகிறேன். அவர் நியமனம் செய்யப்பட்டது ஜஸ்டிஸ் கட்சியின் ஆதரவினாலே என்பதை உங்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.  நாங்களும் ஐரோப்பியர்களும் சேர்ந்து கார்ப்பரேஷன் தலைவர் வகுப்பு விதிமுறையில் பிரதி தேர்தலில் மாற்றம் வேண்டும் என ஒரு ஏற்பாடு செய்தும் அந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு பிரிவினரும் ஒரு காலத்தில் நகரசபை தலைவர் ஸ்தானம் பெற உரிமை இருக்கிறது. இந்த உரிமையால் தாழ்த்தப்பட்டோரும் நகரசபை தலைவர் பதவியை பெறுவர் என்பது உறுதியாகும். எனவே இன்னும் இரண்டு வருடங்களில் உங்கள் தலைவர் ஒருவர் நமது நகர சபை தலைவராக நியமிக்கப்படுவார் என்பதை நீங்கள் உணர வேண்டும். உண்மைத்  தொண்டாற்றும் சிறந்தவர்களே இந்த ஸ்தாபனத்திற்கு வர வேண்டும் என்பது எமது அவாவாகும் (31.7.1932 குடிஅரசு)

அதாவது ஒவ்வொரு வருடமும் ஒரு மேயர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதில் பிற்படுத்தப்பட்டவர், முஸ்லிம், கிறிஸ்தவர், தலித், பார்ப்பனர் என்று ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒருவரை தேர்ந்தெடுக்க  நீதிக்கட்சி ஆட்சி காலகட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அப்படி 1935/36 இல் சிவசண்முகம் பிள்ளை காங்கிரஸில் சேர்ந்தததால் அவர் மேயராக ஆகவில்லை, அதற்கு பதில் எம்.எல்.ஏ போன்று பல பொறுப்புகளை அவர் காங்கிரஸ் சார்பாக வகித்தார். 

இப்படித்தான் மேயர் தேர்தலில் அனைவருக்குமான வாய்ப்பாக உருவாக்கப்பட்டது. அதற்கு நீதிக்கட்சியின் பங்கு மிகப் பெரியது. 

1948இல் நடந்த மேயர் தேர்தல் பற்றி பெரியார் தொடர்ந்து தனது விடுதலை இதழில் பதிவு செய்துள்ளார். 

‘உரிமை’  இதழில் அம்பேத்கர் பற்றி பெரியார் சொன்னது என்ற கருத்தே வெட்டி எடுக்கப்பட்ட சிறு பகுதி தான் அது. அந்தத் தகவல் 28.9.1948 இல் வெளியான விடுதலை தலையங்கத்தில் ’தேர்தலும் செட்யூல் முஸ்லிம் சமூக கடமையும்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு நடக்கும் தேர்தல் அத்துடன் மாநில எல்லை பிரிவினை என்ற அரசியல் தலை எடுத்த காலகட்டம், எல்லைப் பிரச்சினையை மையப்படுத்தி தனியாகவே ஒரு குழு தேர்தலை சந்தித்தது. அதையும் காங்கிரஸ் மறைமுகமாக ஆதரித்தது இந்த சூழலில் தான். 

முஸ்லிம்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை பற்றி அந்தக் தலையங்கம் பேசியது. 

அதாவது தலித்களும் முஸ்லிம்களும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அவர்களின் முதலாளிகளுக்கு, கள்ள மார்க்கெட் காரர்களுக்கும் ஓட்டு போடுவது மனிதத் தன்மையற்ற தற்கொலையாகும் என்ற பெரியார் இறுதியாக.

டாக்டர் அம்பேத்கர் தன்னை காங்கிரசுக்கு எதிரி என்று சொல்லிக்கொள்ளுவதில் சிறிதும் வெட்கமோ, பயமோ அடையாதவர்..”

  • செட்யூல் வகுப்பு உண்மைத் தலைவரான டாக்டர் அம்பேத்கர் “காங்கிரஸில் சேராதீர்கள், காங்கிரஸை பலப்படுத்தாதீர்கள், காங்கிரஸ் மணல் வீடுபோல் சரிந்துகொண்டு வருகிறது” என்று செட்யூல் வகுப்பு மக்களுக்கு சொல்லியிருக்கிறார். அவர் (டாக்டர் அம்பேத்கர்) மற்ற ஐந்தாம்படை கருங்காலிகள்போல் உங்களை (செட்யூல் வகுப்பாரை) காட்டிக்கொடுத்து பதவி பெற்றவரல்ல. காங்கிரஸ் சர்க்காரால் கெஞ்சி அழைக்கப்பட்டவர். உங்களுக்குச் சிறிதாவது யோசனை இருந்தால் நீங்கள் டாக்டர் அம்பேத்கர் சொன்னதை கவனிப்பதா அல்லது கூலி ஐந்தாம்படை கருங்காலிகள் உங்களைக் காட்டிக்கொடுப்பவர்கள் சொல்லுகிறபடி ஆடுவதா என்று கேட்கிறேன்.
  • ஆகவே முஸ்லிம்,  செட்யூல் வகுப்பு ஆகிய  இரு சமுதாயத்தாரும் ஏமாந்து போகக்கூடாது என்றும் சீர்தூக்கி ஓட்டுக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் யோசனை கூறுகிறேன் (28.9.1948. விடுதலை)“ 

அதாவது அந்த காலகட்டத்தில் இந்தியா முழுக்க காங்கிரஸ் ஆட்சி தான். அண்ணல் அம்பேத்கர் கூட காங்கிரஸ் மந்திரி சபையில் தான் அமைச்சராக இருந்தார். இன்றைக்கு ஒரு பழங்குடியின பெண்  ஜனாதிபதியாக இருக்கிறார். அதனால் எங்களுக்கு பழங்குடிகள் வாக்களியுங்கள் என்று பிஜேபிக்காரர்கள் பேசுவது போல் அன்று அம்பேத்கர் காங்கிரஸில் இருப்பதாலே காங்கிரஸுக்கு எல்லாம் தலித்துகளும் வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முறியடிக்கவே அந்த தலையங்கம் பெரியாரால் எழுதப்பட்டுள்ளது. 

இந்த தலையங்கத்தின் ஒரு பகுதியை எடுத்து பயன்படுத்திவிட்டு அடுத்த பகுதி அப்படியே மீனாம்பாள் சிவராஜ் பற்றியும் அவர் தேர்தலில் நின்றது பற்றியும் ஏதாவது விடுதலையில் செய்தி இருக்கிறதா என்று தேடிய போது இன்னொரு செய்தி விடுதலையில் கிடைத்தது.

1948இல் மேயர் தேர்தல் முடிந்து மறுநாள் வெற்றி தோல்வி அறிவிப்பு வந்த பின் 05.10.1948 இல் சென்னை மாநகராட்சி முழுக்க நடந்த தேர்தலில் யார் யார் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மையப்படுத்தி அந்தத் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் எல்லைப் பிரச்சினை மையப்படுத்தி தேர்தலில் நின்றவர்களுக்கு குறைவான வாக்குகள் கிடைத்ததையும் அதேபோல்  தனித் தொகுதிகள் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 5 வார்டுகள் ஒதுக்கப்பட்டதாகவும் ஆனால் ஏழு வார்டுகளில் அவர்கள் வெற்றி பெற்றதாகவும் பெரியார் மகிழ்ச்சி அடைந்துள்ளார் . அதேபோல் 

  • ஷெட்யூல் வகுப்பு தோழர்களின் வெற்றியானது எல்லாவற்றிலும் சிறப்பானதும் நமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியும் பெருமையும் தரக் கூடியதாகும்.
  • பழங்குடி மக்களை திராவிட கழகத்திலிருந்து பிரித்து இரண்டொரு பழந்தலைவர்கள் தங்கள் சுயநல வேட்டைக்காக பயன்படுத்த எண்ணி வரும் இந்த நாளில்,  திராவிட பொதுமக்கள் இத்தகைய கோடாரி காம்புகளுக்கு – செவி சாய்க்காமல் நல்ல பாடம் கற்பித்து விட்டனர். எப்படி எனில் இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் 6 தான்.. ஆனால் ஒதுக்கப்படாத பொது இடங்களில் மூன்று தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

 அவர்கள்- 

  • 1, மணவாளன்
  • 2, ராமலிங்கம் 
  • 3, மூர்த்தி
  • ஆகிய தோழர்கள் இவர்களோடு மற்ற திராவிடர்கள் போட்டியிட்டும் கூட ஆங்காங்குள்ள திராவிட வோட்டர்கள் இவர்களை தேர்ந்தெடுப்பதானது நமது கழகத்திற்கு எதிராக தோழியர் மீனாம்பாள் போன்ற இரண்டொருவர் செய்து வரும் விஷம பிரச்சாரத்திற்கு நல்ல படிப்பினையாகும். திராவிடர்களை இரண்டாகப் பிரித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க கருதும்  சில சுயநலக்காரர்கள் மனம் திரும்பும் படியாக இம்மூவரையும் பொதுத் தொகுதியில் தேர்ந்தெடுத்த திராவிட வோட்டர்களை  மனமாற பாராட்டுகிறோம். திராவிட – இனத்திற்குள் ஜாதி வேற்றுமை போதாது என்பதை இவ்வோட்டர்கள் தங்கள் செய்கை மூலம் வலியுறுத்தி காட்டிவிட்டனர்.

வெற்றி பெற்ற எட்டு ஷெட்யூல் வகுப்பு தோழர்களும் இதர திராவிட தோழர்களுடன் இரண்டற கலந்து நகரவாசிகளுக்கு வேண்டிய நன்மைகளை கவனிப்பார்கள் என்பதில் நமக்கு சிறிதும் ஐயமில்லை (05.10.1948, விடுதலை)” 

அதாவது 1948ஆம் ஆண்டு சென்னை நகர சபை தேர்தலுக்கு முன்பே மீனாம்பாள் சிவராஜ் அவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் விமர்சனம் இருந்துள்ளது என்பதை நகர சபை தேர்தல் வெற்றியை பற்றி வெளிவந்த தலையங்கத்தின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. 

பிறகு ஏன் மீனாம்பாள் சிவராஜ் எப்போது போட்டியிட்டார் என்ற தகவல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை ஆனால் ஒரு இடத்தில் பெரியார் அதை பற்றி குறிப்பிடுகிறார். அதாவது  அக்டோபரில் நகரசபை தேர்தல் முடிந்தாலும் மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நவம்பர் மாதம் 23ஆம் தேதி தான் நடந்தது.

இன்றைக்கு உள்ளாட்சித் தேர்தலில் எப்படி பணம் விளையாடுகிறது அதேபோன்றுதான் 1948 ஆம் ஆண்டிலும் இரண்டு பணக்காரர்கள் மேயர் பதவிக்காக மோதிக்கொண்டார்கள். அதில் தங்கள் மேயர் ஆவதற்காக ஒவ்வொருவரும் 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை ஒரு வார்டு கவுன்சிலருக்கு கொடுக்கும் அளவுக்கு பணம் விளையாடியது. அதாவது 7000 ரூபாய் இருந்தால் ஒரு பெரிய வீட்டையே கட்டிவிடலாம். அவ்வளவு பணம் விளையாடிய தேர்தல், அது சாதாரண நபர்கள் போட்டியிடவே முடியாது என்ற நிலையில் அந்த தேர்தல் நடந்தது.

23.11.1948இல் மேயர் தேர்தல் முடிந்தபின் 24 ஆம் தேதி வெளிவந்த விடுதலை  தலையங்கத்தில் துணை மேயர் தேர்ந்தெடுக்கும் போது நடந்த அநீதிகளை பற்றி தலையங்கம் பேசியது. அதில் துணை மேயர் தேர்தலில் தோழியர் திரிபுரசுந்தரியம்மாள் என்பவர் நிற்கிறார் அவர் சார்ந்து இருக்கும் கட்சியில் மொத்தம் 34 பேர் இருக்கின்றனர். ஆனால் 19 வாக்குகளே பெற்று தோல்வி அடைகிறார்.

இதைப்பற்றி பெரியார் குறிப்பிடும் போது “கடந்த  ஆல்டர்வுமன் தேர்தலின் போது தோழியர். இந்திராணி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு போட்டியாக நின்ற தோழியர் மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் கதி என்னவாயிற்று அதே கதித்தான் இந்த தோழியர் விஷயத்திலும் காண்கிறோம்” என்கிறார் பெரியார்.

திரிபுரசுந்தரியம்மாளுக்கு நேர்ந்த துரோகம் தான் மீனாம்பாள் சிவராஜ் அவர்களுக்கும் நடந்தது என்பதே பெரியாரின் கருத்து. ஆனால் உரிமை இதழில் மீனாம்பாள் சிவராஜ் பெரியார் ஆதரிக்காததால் தான் தோற்றேன் என்கிறார்.

1947க்கு முந்தைய காலகட்டத்தில் பெரியார் ’திராவிட நாடு தனிநாடு’ அரசியலை மையப்படுத்தி இயங்கிக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் அவர் தேர்தல் அரசியலை முழுமையாக புறக்கணித்தவராக இருந்தார். அடுத்து அந்த காலகட்டத்தில் ஒரு பரப்புரை முக்கியமாக முன்னெடுக்கப்பட்டது அதாவது திராவிடர்கள் என்ற அடையாளத்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அதாவது சாதி இந்துக்கள் அதாவது பார்ப்பனர் அல்லாத தலித் அல்லாத அனைவரையும் திராவிடர்கள் என்று அடையாளத்துடன் அழைக்கும் வழக்கம் திராவிடர் கழகத்தால் உருவாக்கப்பட்டது. அதனாலயே சாதி இந்துக்கள் என்கிற அடையாளத்தோடு தமிழர்கள் என்கிற அடையாளமில்லாமல் திராவிடர்கள் என்று அடையாளம் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 

திராவிடர்கள் என்பது முழுக்க முழுக்க தந்தை பெரியாரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள் கிடையாது.அது பார்ப்பனர் அல்லாதவரை குறிக்கும் சொல்லாகத்தான் அந்த காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் பெரியாரே சொல்கிறார் சென்னை நகர சபைக்கு கவுன்சிலர்கள் ஏழு எட்டு பேர் தான் திராவிட கழகத்தின் ஆதரவாளர் அதுவும் அவர்கள் மிக ஏழைகள் அவர்களால் மேயர் தேர்தலில் பெரிய அளவில் செலவு செய்வதற்கோ இயலாதவர்கள் என்கிறார்.

இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு எதிராக மீனாம்பாள் சிவராஜ் தோற்றத்திற்கு பெரியார் தான் காரணம் என்று  அந்தக் கால  சூழலிலை ஆராயாமல் மேம்போக்காக எல்லாத்துக்கும் காரணம் திராவிட இயக்கமும் பெரியார் தான் என்று ஒரு பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு பாலசுப்பிரமணியம் முன்வைத்துள்ளார்.

அதுவும் 1948இல் மேயர்  தேர்தலில் போட்டியே போடாத மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் அறிக்கையின் தேதியை வேண்டுமென்றே திட்டமிட்டு மறைத்தது  அதாவது இயக்கத்தின் மீதும் தந்தை பெரியாரின் மீதும் தனக்கு இருக்கும் ஒவ்வாமையை வெளிப்படுத்துவதற்காக  அம்பேத்கர் பெயரில் வந்த கட்டுரையை பயன்படுத்தி இருக்கிறார். இந்தக் கட்டுரை விகடன் இதழில் மட்டுமல்லாமல் நீலம் இணையதளத்திலும் வேறு தலைப்பில் இதே கருத்தை எழுதியுள்ளார்.

திராவிட இயக்கம் சார்ந்து பல மேடைகளின் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் பேசி இருக்கிறார். அதேபோல விமர்சனமும் வைத்திருக்கிறார். ஆனால் அவர் இறுதி காலத்தில் திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் அவர் என்ன நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை தெரிந்துகொள்ள திராவிடர் கழகம் வெளியிட்ட நீதிக்கட்சி பவளவிழா மலரில் மீனாம்பாள் சிவராஜ் பேட்டி இடம்பெற்றுள்ளது. 1990 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பேட்டி… அதில் :-

“கேள்வி: தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள்.

மீனாம்பாள் சிவராஜ் பதில்: நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்துகொண்ட திருமணங்களிலும் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன்.

சென்னை பெரம்பூரில் என் தலைமையிலும், பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி… ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச்சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிட வில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப் போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார்.” 

பெரியார் எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்க மாட்டார் என்று மீனம்பாள் சிவராஜ் தன் இறுதி காலத்தில் சொன்னது‌‌. அதுவும் சேறும் சகதியுமாக இருக்கும் ஒரு தலித் வீட்டில் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களால் சாப்பிட முடியவில்லை. ஆனால் பெரியார் அது பற்றி சற்றும் கவலையில்லாமல் நடந்துகொண்டதாக சொல்கிறார்.

பெரியார் திராவிடம், திராவிட  இயக்கத்தை, திராவிட மக்கள் என்று அரசியல் பேசினாரோ அதைவிட ஒரு பங்கு அதிகமாக திராவிடத்தை தலித் மக்கள் பேசுவதற்கு தகுதி படைத்தவர்கள், மீனாம்பாள் சிவராஜ் பாட்டனார் ‘மதுரைப்பிள்ளை’ என்பர்.

1920ஆண்டு காலகட்டத்திலே சென்னை நகரில் திராவிடப் பள்ளி என்ற பெயரில் ஒரு பள்ளியை நடத்தி உள்ளார். அங்கு  இலவச மதிய உணவும்  வழங்கப்பட்டுள்ளது என்று ஏ.பி.வள்ளிநாயகம் தலித்முரசு இதழில் பதிவு செய்கிறார். 

திராவிடம் என்பது பார்ப்பனர் அல்லாதவருக்கான கேடயம் போலவே இருபதாம் நூற்றாண்டு முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த திராவிடத்தின் மூலம் ஏற்றத்தாழ்வை எப்படி  ஒழிப்பது என்பன திராவிட அரசியல் அதை விட்டுவிட்டு தலித் அரசியலுக்கு எதிராக திராவிட இயக்கத்தை எதிர்நிலை வைப்பது ஒரு மடத்தனமான அரசியல்.

இதுநாள் வரை நாம் பெற்ற உரிமையை விட, பெற வேண்டிய உரிமைகள் ஏராளமாக இருக்கிறது. அதை நோக்கி தான் நமது அரசியல் இயங்க வேண்டும். கடந்த கால வரலாறுகளில் நமக்கு ஆக்கபூர்வமான கருத்து செயல்பாடு இருந்தால் அதை நம் தலையில் ஏற்றுக் கொண்டு நாம் அதை பின்பற்ற வேண்டும் அதை விடுத்து கடந்தகால தேவையில்லாத சச்சரவுகளையும் குப்பைகளையும் ஆராய்ச்சி செய்வது சாதியையும் சனாதனத்தையும் தூக்கிப்பிடிக்கும் கூட்டத்திற்கு துணைபுரிவதற்கு சமமாக பேராசிரியர் பாலசுப்பிரமணியனின் விகடன் கட்டுரை அமைந்துள்ளது.

கட்டுரையாளர் குறிப்பு

இக்லாஸ் உசேன் பதிப்பாசிரியர் – கருஞ்சட்டைப் பதிப்பகம்

கருப்பும் நீலமும், பார்ப்பனியச் சூழ்ச்சியில் காந்தியார் படுகொலை,
பெரியாரின் இரங்கல் உரை, பெரியாரின் வேலைத்திட்டம் போன்ற நூல்களின் ஆசிரியர்

வெங்காயம் மற்றும் இனி பதிப்பகங்களை நடத்தி வருகிறார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share