வாக்காளர் பட்டியலில் மோசடி செய்து வாக்குகள் திருட்டு மூலம் அமைந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கூறியதாவது: டெல்லியில் போராட்டம் நடத்திய இந்தியா கூட்டணி எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் அமைதி வழியில் போராடிய பெண் எம்பிக்கள் உள்ளிட்டோரை டெல்லி போலீஸ் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.
டெல்லி போலீசின் இத்தகைய அணுகுமுறை, தேர்தல் ஆணையம் அச்சத்தில் இருக்கிறது என்பதையே காட்டுகிறது. வாக்கு திருட்டு விவகாரத்தில் இந்தியா கூட்டணி எழுப்புகிற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் கிடையாது. உங்களிடம் பதில் இருந்தால் எங்களுக்கு விளக்கம் தர வேண்டியதுதானே? குஜராத்திலும் மேற்கு வங்கத்திலும் ஒரே நபர் ஒரே வாக்காளர் அடையாள அட்டையை வைத்து எப்படி வாக்களிக்க முடியும்? ஒரே வாக்காளர், வேறு வாக்குச் சாவடிகளில் வேறு பெயர்களில் எப்படி வாக்களிக்க முடிந்தது?
இத்தகைய முறைகேடான வாக்காளர்களால்தான் நாட்டின் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்திருந்தால் முதலில் மக்களவையை கலைத்துவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக மக்களவையைக் கலைக்க வேண்டும். வாக்கு மோசடிகளால் உருவான மத்திய அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் மோசம் என்கிறது தேர்தல் ஆணையம்; ஆனால் குஜராத் வாக்காளர் பட்டியல் சரி என்கிறது.. இதை எப்படி ஏற்பது? வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பதை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.. அதற்கு முன் மத்திய அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இவ்வாறு அபிஷேக் பானர்ஜி கூறினார்.