மலையாளத் திரையுலகை எதிர்பார்ப்பில் ஆழ்த்துகிற மிகச்சில இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்கிறார் மகேஷ் நாராயணன். ’விஸ்வரூபம்’ படத்தின் எடிட்டரான இவர் தற்போது மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாராவைக் கொண்டு ‘பேட்ரியாட்’ படத்தை இயக்கி வருகிறார். ஆனால், இதுவரை இப்படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் ஒரு மலையாள இணையதளத்திற்குப் பேட்டியளித்த மகேஷ் நாராயணன், அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முடிவடையவிருப்பதாகக் கூறியிருக்கிறார். சுமார் 60% படம்பிடிக்கப்பட்டிருப்பதாகவும், தான் நினைத்ததைவிடப் பெரிய படமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
’டேக் ஆஃப்’, ‘அறியிப்பு’ படங்களைத் தொடர்ந்து ‘பேட்ரியாட்’டை இயக்கிவரும் மகேஷ் நாராயணன், தற்போது ‘தலவாரா’ என்ற படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகக் களமிறங்கியிருக்கிறார். அர்ஜுன் அசோகன், ரேவதி நடித்திருக்கும் இப்படம் இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகிறது. இதன் டீசர் தற்போது வந்திருக்கிறது.
போலவே, படக்குழுவினரும் பல ஊடகங்களில் பேட்டியளித்து வருகின்றனர். அந்த வகையில்தான், இந்த பேட்டியையும் மகேஷ் நாராயணன் அளித்திருக்கிறார்.
தியேட்டர்களில் வெற்றி பெறாத சில திரைப்படங்கள் ஓடிடியில் பெரிய கவனிப்பைப் பெறுகிறதே என்ற கேள்விக்கு அப்பேட்டியில் பதிலளித்துள்ள அவர், படங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் அதற்கொரு காரணம் என்று கூறியிருக்கிறார்.
“2005இல் எடிட்டிங்கில் நான் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது, மலையாளத்தில் ஆண்டுக்கு 100 படங்கள் வந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 200 ஆகியிருக்கிறது. ஆனால், தியேட்டர்கள் அப்போதிருப்பதை விட இப்போது குறைந்திருக்கின்றன. அதனால், குறுகிய காலத்தில் எவ்வளவு நல்ல படமானாலும் தியேட்டரில் இருந்து விடைபெற்றுவிடுகின்றன” என்று தெரிவித்திருக்கிறார் மகேஷ் நாராயணன்.
அதாகப்பட்டது, போதுமான அளவில் தியேட்டர்கள் அதிகரித்தால் அப்பிரச்சனைக்கு ஓரளவுக்கு முடிவு கட்ட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்த கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியிலும் மகேஷ் நாராயணன் ஈடுபட்டு வருகிறார்.
அது பற்றிய கேள்விக்கு, “ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் அதற்கான உரிமை இருந்தது. அவங்கதான் என்னை அணுகினாங்க. அந்தப் படத்தோட முன்தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளா நடந்துட்டு இருக்குது. திரைக்கதை எழுதும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்த அப்டேட்களை வரும் நாட்களில் சொல்கிறேன்” என்று கூறியிருக்கிறார் மகேஷ் நாராயணன்.
இவையனைத்துக்கும் நடுவே, சல்மான் கான் நடிப்பில் ஒரு ‘பீரியட் ஆக்ஷன் த்ரில்லர்’ படத்தையும் உருவாக்கி வருகிறார்.
’இவரோட லைன் அப் பார்த்தா ஒரே ‘பான் இந்தியா’ படமா இருக்கே” என்று நம்மூர் இயக்குனர்கள் புலம்பாமல் இருந்தால் சரி.