கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் இன்று (அக்டோபர் 27) சந்தித்து ஆறுதல் கூறியது குறித்து இயக்குநர் சேரன் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து இபாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய் விரைவில் அவர்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார்.
கரூர் செல்வதற்காக தவெக தரப்பில் கடும் முயற்சிகள் நடந்தது. அது நடைபெறவில்லை. இந்த நிலையில் கரூரில் உயிரிழந்தவர்களில் 37 குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரத்தில் பிரபல நட்சத்திர ஓட்டலில் விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
விஜய் கரூர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கடந்த ஒரு மாதமாக நேரில் சென்று பார்க்காத நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களில் இயக்குநர் சேரனும் ஒருவர்.
இந்த நிலையில் மாமல்லபுரத்தில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்ததை தொடர்ந்து, இயக்குநர் சேரன் விஜய்யின் செயலை மனம் திறந்து தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அதில், “வெல்டன் விஜய், நானும் நீங்கள் கரூர் சென்றிருக்க வேண்டும் என வலியுறுத்தியவன் தான். ஆனால் அனைவரின் கருத்துக்களையும் மீறி அவர்களை அழைத்து வந்து அவர்களோடு அமர்ந்து எந்த இடைஞ்சலும் கவனச்சிதறலும் இல்லாமல் துயரத்திற்கு நிம்மதியான ஆறுதலை வார்த்தைகளாகவும் நம்பிக்கையாகவும் கொடுத்திருக்கும் விஜய் அவர்களை பாராட்டுகிறேன்.
கரூர் சென்றிருந்தால் கூட இத்தனை நெருக்கத்தில் மனம் விட்டு பேசி அமைதி கண்டிருப்பார்களா என்பது சந்தேகமே.. நீங்கள் செய்ய நினைத்ததை சரியாக செய்திருக்கிறீர்கள். இனி இதை இந்த உலகம் உற்று கவனிக்கும்.
நீங்கள் உருவாக்கும் குழு என்றும் தவறிவிட்டு விடக்கூடாது. அதில்தான் உங்கள் அரசியல் வளர்ச்சி உள்ளது.. உங்கள் தொண்டர்களை ஒழுங்கு செய்யுங்கள். கட்டமைப்பை வலுப்படுத்துங்கள்.. எல்லாம் இதுவரை உங்களை ரசித்தவர்கள்.. இனி அவர்களை சமூக பாதுகாவலர்களாக மாற்றும் கடமை உங்களது.. உங்கள் கையசவுக்கும் கண்ணசைவுக்கும் கட்டுப்படுத்த தயார் செய்யுங்கள்.
நடந்த நிகழ்வும் அதன் கறைகளும் முற்றுமாக அகற்றப்படவில்லை.. அவையெல்லாம் மாறுவதென்பது தொடர்ந்து உங்கள் கட்சி தொண்டர்கள் நடத்தையில் இருக்கிறது. மக்களுடன் இறங்கி, பழகி இலகுவாகுங்கள். உங்கள் இலக்கு 2026 ஆக அல்லாமல் 2031 ஆக குறிவைத்து களம் ஆடுங்கள். முடியும்.” என சேரன் தெரிவித்துள்ளார்.
