ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸஸ் என்பது எட்டு முதல் பன்னிரண்டு அணிகளைக் கொண்ட மோங் கோக்கின் கவுலூன் கிரிக்கெட் கிளப் மற்றும் மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெறும் ஒரு அணிக்கு ஆறு பேர் மற்றும் 6 ஓவர்கள் கொண்ட சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
ஹாங்காங் கிரிக்கெட்டால் ஏற்பாடு செய்யப்படும் இந்த தொடர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான விதிகள் மற்றும் ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் அதிக ஸ்கோரிங் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ஒரு இடம். ஒவ்வொரு வீரரும் (விக்கெட் கீப்பர் தவிர) ஒரு ஓவர் வீச வேண்டியிருப்பதால், இந்த வடிவம் ஆல்ரவுண்டர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ள ஹாங்காங் சிக்ஸஸ் 2025 தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார் தினேஷ் கார்த்திக். இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த தினேஷ் கார்த்திக், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவர் பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே ஆர்சிபி அணி முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. 40 வயதான அவர், சர்வதேச லீக் டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஐசிசி அங்கீகாரம் பெற்ற சர்வதேச தொடரில் இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ஹாங்காங் கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
அதில், “2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். அவரது நீண்ட கால சர்வதேச அனுபவம், கூர்மையான தலைமை பண்புகள் மற்றும் அதிரடியான பேட்டிங் இந்த தொடருக்கு உத்வேகத்தையும், தீவிரத்தையும் கொண்டு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், “இவ்வளவு பெரிய வரலாறு மற்றும் உலகளாவிய அங்கீகாரம் கொண்ட ஒரு தொடரில், இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த முழுமையான மரியாதை. நம்பமுடியாத சாதனைகளை படைத்த வீரர்களை வழிநடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் இணைந்து, ரசிகர்களுக்கு அச்சமற்ற மற்றும் பொழுதுபோக்கு கிரிக்கெட்டை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
தினேஷ் கார்த்திக்குடன், சக தமிழக வீரரும் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானுமான ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்த தொடரில் விளையாட உள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அஸ்வின் பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.
இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 2005ல் ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. கடந்தஆண்டு, ராபின் உத்தப்பா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, அனைத்து லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்து, முதல் சுற்றிலேயே வெளியேறியது.
இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.