‘எந்தெந்த கட்சிப்பா.. கொஞ்சம் எழுதி கொடுங்க’ – கூட்டணி கட்சிகளின் பெயரை மறந்து திண்டாடிய திண்டுக்கல் சீனிவாசன்

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் அலுவலகத்தை அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி வேட்பாளருமான திண்டுக்கல் சி. சீனிவாசன் இன்று (மார்ச் 30) திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது,“அதிமுகவின் வெற்றி 234 தொகுதிகளிலும் எழுதப்பட்ட ஒன்று. ஏற்கனவே அதிமுக சார்பாக பொதுச்செயலாளர் எடப்பாடியார் சொல்லியபடி, 210 தொகுதிகளில் நிச்சயமாக அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடியார் ஏற்று, அவர் தலைமையிலே ஆட்சி நடக்கும்.

ADVERTISEMENT

திண்டுக்கல்லில் அதிமுக வெற்றி எழுதப்பட்ட ஒன்று. எடப்பாடியார் அவர்களின் தேர்தல் அறிக்கை மக்களிடம் சிறப்பாகச் சென்றடைந்துள்ளது. மக்கள் வாயார வாழ்த்துகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் குடும்பத் தலைவிகளுக்கு தருவதாகச் சொல்லியிருக்கிறார். அரிசி அட்டைக்கு இரண்டாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார். கல்விக்கடன் ரத்து என என்னென்ன சொல்லியிருக்கிறாரோ அதைச் சொல்லி நிறைவேற்றுகிறவர் எடப்பாடியார். எனவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது” என்றார்.

திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்து திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி மகன் ஐபி செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு,“என்னை எதிர்த்து நிற்பவர்கள் யாராக இருந்தாலும் கவலையில்லை. ஐந்து தடவை எம்.பி.யாகப் போட்டியிட்டு நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். இரண்டு முறை எம்.எல்.ஏ., அமைச்சர் என இத்தனை அனுபவங்களோடு மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் நிற்கிறேன். கடந்த முறையைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்.

ADVERTISEMENT

திமுக எப்பொழுதுமே எங்களுக்கு எதிரிதான். அவர்கள் நேராக வந்தாலும் சரி, வளைந்து வந்தாலும் சரி, அவர்களது கூட்டணியில் யார் வந்தாலும் அது திமுகதான். எங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோரின் ஆசியுடன் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி.தேர்தல் ஆணையத்தின் விதிகளை அதிமுக தொண்டர்கள் முழுமையாக மதிப்பார்கள். சட்டத்திற்கு உட்பட்டு நடப்போம்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. அவர்கள் என்னதான் சொன்னாலும் மக்கள் அதை நம்பப் போவதில்லை. நாங்கள் பத்தாயிரம் ரூபாய் தருவோம் என்று சொல்லியிருக்கிறோம். அவர்கள் எட்டாயிரம் என்கிறார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், ‘அத்தைக்கு மீசை வைத்து சித்தப்பா என்று கூப்பிடுற மாதிரி’ இருக்கு. மக்கள் எதை நம்ப வேண்டுமோ அதைத்தான் நம்புவார்கள். தவெக வேட்பாளர் அறிவிப்பு பற்றி நான் பார்க்கவில்லை. பார்த்தால்தான் அதைப் பற்றி பேச முடியும்” என்றார்.

ADVERTISEMENT

திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ என மு.க. ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு,“ஒரிஜினல் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமி மற்றும் எங்களுடைய கூட்டணியில் டாக்டர் அன்புமணி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன் என அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து எங்களது வெற்றிக்கு பாடுபடுவார்கள்” என்றார்.

அதேசமயம் அவர் கூட்டணி கட்சிகளின் பெயரையும், அதன் தலைவர்களின் பெயரையும் மறந்துவிட்டார். அருகில் இருந்த மற்றவர்களிடம் கேட்டார். அப்பொழுது அவர்களும் மறந்த நிலையில் பெரிதும் தடுமாறினர்.

வேட்புமனு தாக்கல் எப்போது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜோசியரைப் பிடித்துள்ளேன். வேட்புமனு ரகசியமாக தாக்கல் செய்ய முடியாது. நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share