உடுமலைப்பேட்டை குடிமங்கலம் எஸ்ஐ சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரால் தேடப்பட்ட மணிகண்டன், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது மணிகண்டன் உடலை சொந்த ஊரான, திண்டுக்கல் நாயக்கனூர் கிராமத்துக்குள் அனுமதிக்க அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மடத்துகுளம் அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தது மூர்த்தி என்பவரது குடும்பம். மூர்த்தியின் பூர்வீகம் திருச்சி அருகே உள்ள துவாக்குடி. அவர் திருமணம் செய்து கொண்டது திண்டுக்கல் மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள எரியோடு போலீஸ் சரகத்துக்குட்பட்ட நாயக்கனூர் கிராமத்தில். இதனால் திருமணத்துக்கு பின்னர் நாயக்கனூர் கிராமத்திலேயே குடியேறிவிட்டார் மூர்த்தி.
கடந்த 8 ஆண்டுகளுக்கு மூர்த்தி அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் நாயக்கனூரை விட்டு வெளியேறி திருப்பூர் பக்கம் சென்றனர். அப்படித்தான் மடத்துகுளம் எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இடையே மதுபோதையில் ஏற்பட்ட தகராறை விலக்கச் சென்ற போது குடிமங்கலம் எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூர்த்தி குடும்பத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே எஸ்.ஐ சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூர்த்தியும் அவரது மகன் தங்கபாண்டியும் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய மணிகண்டன், போலீசாரால் இன்று அதிகாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது திருப்பூர் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மணிகண்டன் உடலை நாயக்கனூருக்கு கொண்டு செல்ல அவரது தாயார் ஏற்பாடுகள் செய்தார். ஆனால் நாயக்கனூர் பொதுமக்களோ, மணிகண்டன் உடலை ஊருக்குள் அனுமதிக்க முடியாது; அப்படியே ஊருக்கு வெளியே உள்ள மயானத்துக்கு கொண்டு சென்று புதைத்துவிட வேண்டும் என முதலில் கூறினர்.
இதன் பின்னர் நாயக்கனூர் ஊர் மக்கள் ஒன்று கூடி, மணிகண்டன் உடல் வந்து சேர நள்ளிரவு ஆகிவிடும்.. அதனால் ஊர்க்காரர்கள் சிலர் திருப்பூர் சென்று அங்கே மயானத்தில் மணிகண்டன் உடலை அடக்கம் செய்துவிடலாம் என முடிவெடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் மணிகண்டன் உடலை எங்கே அடக்கம் செய்வது என்கிற குழப்பம் நீடித்தாலும் அடுத்த சில மணிநேரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.