வைஃபை ஆன் செய்ததும், ”கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா.. ” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. எல்லா கூட்டணியிலும்தானே கண்ணாமூச்சி.. நீர் எதை சொல்லப் போறீரு?
இப்ப திமுக கூட்டணியில நடக்குறதை சொல்றேன்.. திமுக கூட்டணியில ஒருவழியாக காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் கொடுத்து பிரச்சனை முடிஞ்சதுன்னு நினைச்சாங்க..
ஆனால் சிபிஎம் ரொம்ப உறுதியான நிலையில இருக்கிறதால இழுபறி நீடிச்சுகிட்டு இருக்கு.
திமுகவைப் பொறுத்தவரைக்கும் போன முறை 6-ல் போட்டியிட்டீங்க.. இந்த டைம் 5 வாங்கிக்குங்க என்கிறது.. இதுதான் சிஎம் ஸ்டாலின் ஸ்டேண்ட்.
சிபிஎம்.. இதை ஏத்துக்க முடியாது.. அட்லீஸ்ட் போன டைம் போட்டியிட்ட 6 சீட்டாவது வேணும்னு கேட்குது..
சரிய்யா.. பேபி வந்தாராம்.. வைகோ போனாராம்.. என்னய்யா விவகாரம்?
ஆமாய்யா.. சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி சென்னைக்கு வந்திருக்காரு.. சிபிஎம்-ன் அவசர மாநில செயற்குழு கூட்டம் இன்னைக்கு நடக்குறதால பேபி வந்திருக்காரு..
இதை பத்தி சிபிஎம் தோழர்கள்கிட்ட பேசுனப்ப, “எங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேணும்னு முதல்ல கேட்டோம்.. இப்ப குறைந்தது போன டைம் கொடுத்த 6 சீட்டாவது ஒதுக்குங்கன்னு சொல்றோம்.. இதுல உறுதியாகத்தான் இருக்கிறோம்.. இதுக்குதான் 23-ந் தேதி நடக்க இருந்த அவசர செயற்குழு இன்னைக்கு கூடியிருக்கு..
ஆனா பொதுச்செயலாளர் பேபி என்ன சொல்றாருன்னா, “சிபிஐக்கு 5 சீட் கொடுத்திருக்காங்க.. திமுக சொல்ற மாதிரி நாமும் 5 சீட் வாங்கிக்கலாம்.. எல்லா இடத்துலேயும் ஜெயிக்கிறதுக்கு நாங்க பொறுப்புன்னு திமுக சொல்லுது.. நாம எதுக்கு இப்படி நெருக்கடி கொடுத்து இழுத்தடிக்கனும்.. நம்ம இடதுசாரிகளுக்கு பார்லிமெண்ட்டுல 4 எம்.பிக்களை கொடுத்ததே திமுக கூட்டணிதான்.. நம்மால கூட்டணியில சங்கடங்கள் எதுக்கு?”ன்னு சொல்றாரு..
ஆனா சண்முகம் ,”எங்களுக்கு நம்பர்ஸ் அப்படிங்கிறது பிரச்சனையே இல்லை.. போன டைம் 6 சீட் கொடுக்கும் போது அடுத்த முறை பார்த்துக்கலாம்னு சொன்னாங்க.. இப்ப போன டைம் கொடுத்ததைவிட குறைக்கனும்னு சொல்றாங்க..
நாம பல இடங்களில் வலுவாகவே இருக்கிறோம்.. இப்படி குறைவான சீட்டுகளை வாங்குனா நம்ம கட்சியைப் பத்துன பார்வை என்னாகும்? குறைவான சீட்டுகளுக்கு ஒப்பு கொண்டா நாம பலவீனமான தலைமைன்னு தோழர்கள் நினைக்காமாட்டாங்களா?”ன்னு அவரோட நியாயத்தை சொல்லி இருக்காரு…

இதுக்கு இடையிலதான் சிபிஎம் ஆபீசுக்கு திடீர்னு வைகோ வந்தாரு.. வைகோ, பேபியை சந்திச்சு பேசுனாரு.. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள்கிட்டேயும் பேசுனாரு வைகோ..
பிரஸ் மீட்டுல, “அரசியல் பேசவே மாட்டேன்.. பேபியும் நானும் பழைய சினிமா பாட்டுகளை கேட்டோம்.. நான் செம்மீன் படத்துல வர்ற பாட்டை போட சொன்னேன்”ன்னு சிரிக்காமலேயே சீரியசாக சொன்னாரு வைகோ..
ஆனா வைகோ என்ன பேசுனாருன்னு விசாரிச்சப்ப, “சிபிஎம் கட்சி நிலைப்பாட்டுல உறுதியா இருக்கிறீங்க.. ஆனா கூட்டணியில சலசலப்பு வர்ற மாதிரி முடிவு எடுக்க வேண்டாம்.. அதுவே பாஜகவுக்கு சாதகமாக போயிடும்.. அதனால பார்த்து முடிவு எடுங்க”ன்னு சொன்னாரு என்கின்றனர்.
பேபி, வைகோன்னு எல்லாருமே சமாதானப்படுத்திகிட்டு இருக்கிறதால சிபிஎம் இறங்கி வர்றதுக்கு சாத்தியமும் இருக்குதுன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
