வைஃபை ஆன் செய்ததும், ”ஆடும் வரை ஆட்டம்”னு ஆட முடிவு செஞ்சுட்டாங்க போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா.. எந்த கட்சி விவகாரமாம்?
அதிமுகதான்.. அதிமுகவுல ரொம்பவே சீனியர் தம்பிதுரை.. ராஜ்யசபா எம்.பியா இருக்காரு..
கொஞ்ச நாளாவே தம்பிதுரை பேச்சு எல்லாமே பாஜக மேலிடத்தை ரொம்பவே சீண்டி காயப்படுத்திகிட்டு இருக்குன்னு டெல்லியில ஒரே பொறுமல்யா..
அப்படி என்ன பேசுனாரு தம்பிதுரை?
ராஜ்யசபாவுல, மணிப்பூரில் ஜிஎஸ்டி அமல்படுத்துவது பற்றிய விவாத்துல பேசுன தம்பிதுரை, முந்தைய காங்கிரஸ் ஆட்சியில முதன் முதலா ஜிஎஸ்டி கொண்டு வந்தாங்க.. அதை குஜராத் முதல்வரா இருந்த மோடி எதிர்த்தாரு.. மோடி ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டியை நாட்டு வளர்ச்சிக்காக கொண்டு வந்தாரு.. நாங்க ஆதரிச்சோம்னு பேசுனாரு..
பாஜக எம்.பிக்களோ, டென்ஷனாகிட்டாங்க.. மோடி குஜராத் முதல்வராக இருந்து ஜிஎஸ்டியை எதிர்த்தாருன்னு இப்ப எதுக்கு கூட்டணி கட்சி எம்பி தம்பிதுரை பேசனும்னு? பார்லிமெண்ட்டுக்குள்ளேயே கடுப்படிச்சாங்க பாஜக எம்பிக்கள்.
அதே மாதிரி, வேங்கைவயல் பிரச்சனை பற்றி ராஜ்யசபாவில் தம்பிதுரை பேசப் போய், திமுக எம்பிக்கள் ரொம்பவே எதிர்த்தாங்க.. அப்ப ராஜ்யசபா தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, அதை எல்லாம் இங்க பேசக் கூடாதுன்னு கடுப்பான குரலில் சொன்னார்.. சிபிஆர் சொன்ன டோனே, பாஜகவோட ரியாக்சனை மொத்தமா காட்டுச்சு..
தம்பிதுரையும் சும்மா இல்ல.. டெல்லியில் காற்று மாசுபாடு பற்றி பேசும் போதும், “என்னதான் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினாலும் தடுக்கத்தான் முடியலை.. மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்கனும்னு தம்பிதுரை பேசுனாரு..
டெல்லியில ஆளும் பாஜக அரசை விமர்சிச்சு பேசுரு தம்பிதுரை அதிமுகவுலதான இருக்காருன்னு? பாஜக லீடர்ஸ்க்கே சந்தேகம் வந்துருச்சு..
இப்படி பார்லிமெண்ட்டுல மட்டுமில்ல, சில நாட்களுக்கு முன்னாடி கூட “அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும்; ஆட்சியில் மற்றவர்களுக்கு பங்கு எதுவும் கிடையாது”ன்னு பட்டுன்னு சொல்லி இருந்தாரு.. தமிழ்நாட்டுல தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்போம்னு அமித்ஷா சொல்றாரு.. ஆனா தம்பிதுரையோ அதுக்கு எதிராகவே பேசுறாரு..
சரிய்யா.. தம்பிதுரை பேசுன லிஸ்ட்டை சொல்லிட்ட.. அவரோட இந்த பேச்சுக்கு பின்னால இருக்கிற சீக்ரெட்டை சொல்லிடும்..
சொல்றேன்யா.. தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களோட பீரியட் முடியப் போகுது.. இதனால மார்ச் மாசம் ராஜ்யசபா எலக்ஷன் நடக்குது…
திமுகவுல திருச்சி சிவா, என்ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு; அதிமுகவுல தம்பிதுரை, அதிமுக கோட்டாவுல போன ஜிகே வாசன்னு 6 பேரோட பீரியட் முடியுது..
ஒரு ராஜ்யசபா எம்பிக்கு 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.. அதிமுக கூட்டணிக்கு 2 எம்.பி சீட் கன்பார்ம்.. ஆனா இந்த 2 சீட்டு யாருக்கு? அப்படிங்கிறதுதான் பொலிட்டிக்கல் கேம்.
என்னய்யா செம்ம ஆட்டம் போல?
ராஜ்யசபா தேர்தலுக்கு முன்னாடியே சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சும் நடக்குறதால ஒவ்வொரு கட்சியும் ‘கிடைச்சவரைக்கும் லாபம்’னு பார்க்கிறாங்க.. இதை பத்தி அதிமுக மூத்த தலைவர்கள்கிட்ட பேசுனப்ப, “எங்ககிட்ட இருக்குது 2 ராஜ்யசபா சீட்தான்.. தம்பிதுரைக்கு போன முறையே பொதுச்செயலாளர் (இபிஎஸ்) சீட் கொடுத்தப்ப ரொம்பவே எதிர்பார்த்தாரு… ஆக குறைஞ்சது கட்சிக்கு ஃபண்டாவது கொடுப்பாருன்னு நினைச்சாரு.. ஆனா சீட் வாங்கிட்டு போனவருதான்.. அதனால மறுபடியும் அவருக்கே ஏன் சீட் கொடுக்கனும்?னு பொதுச்செயலாளர் யோசிக்கிறாரு..
இன்னொரு சீட்டை எப்படியும் கூட்டணி கட்சிக்குதான் கொடுக்கப் போறோம்.. அது வாசனா? தேமுதிகவான்னா? குழப்பமா இருக்கு.. வாசனுக்கே மறுபடியும் கொடுக்க சொல்லும் டெல்லி.. இன்னொரு பக்கத்துல இந்த ராஜ்யசபா சீட் விவகாரத்துலதான எங்களோடு தேமுதிக முறைச்சுகிட்டு நிக்குது.. அவங்களுக்கு கொடுத்து கூட்டணிக்குள்ள கொண்டு வரவும் சான்ஸ் இருக்கு..
ஆனா 2 ராஜ்யசபா எம்பி சீட்டையும் கூட்டணிக்கே கொடுத்துட்டா, கட்சிக்குள்ள அதிருப்தி வந்து பெரிய சிக்கலாகிடும்.. இது எல்லாம் தம்பிதுரைக்கு தெரியாம இல்லை.. அவரு மறுபடியும் எம்பியாக முடியாதுன்னு கூட நினைச்சு அந்த கோபத்துல இப்படி பார்லிமெண்ட்டுல டென்ஷனாகி இருக்கலாம்” என்கின்றனர்.
ஓஹோ.. திமுகவோட 4 சீட்டு பத்தி ஒன்னும் சொல்லலையே?
திமுகவோட 4 சீட்டுல எப்படியும் ஒன்னு கூட்டணிக்குதான் போகும்னு அறிவாலய தரப்புல சொல்றாங்க.. ”டெல்லியில கார்கேவை சபரீசன் சந்திச்சு பேசுனாரு.. அப்ப கூட கார்கே, ஒரு ராஜ்யசபா சீட் கேட்டிருக்கிறாரு.. திமுக கூட்டணியில எங்க கட்சியில ப.சிதம்பரம், ராஜ்யசபா எம்பியா இருக்காரு.. அவரோட பதவிகாலம் அடுத்த வருஷம் ஜூனில்தான் முடியுது.. அவருக்காகவும் கார்கே பேசியிருக்கலாம்..
ஒருவேளை மார்ச் எலக்ஷனுல திமுகவே நிக்கலாம்.. அல்லது வேறு ஒரு கூட்டணி கட்சிக்கு கூட தரலாம்..
ஒருவேளை தேமுதிகவுக்கு கூட ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து திமுக கூட்டணிக்குள்ள கொண்டுவரவும் சான்ஸ் இருக்குது” என காங்கிரஸ் சோர்ஸ்கள் சொல்வதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப் லைன்னுக்கு போனது வாட்ஸ் அப்.
