வைஃபை ஆன் செய்ததும், ‘அடங்கா காளை ஒன்னு’ என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
அடங்காத காளையா? யாரைய்யா சொல்றீர்?
அதை சொல்லனும்னா சென்னை ஐடிசி ஹோட்டல் மீட்டிங்கில் இருந்து ஆரம்பிக்கனும்..
ஐடிசி ஹோட்டலில் அப்படி என்ன நடந்துச்சாம்?
சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் காலை பிரேக் ஃபாஸ்ட் முடித்த கையோடு பாஜக மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்டங்களின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் நிர்மலா சீதாராமன். இதில் மொத்தம் 50 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் தமக்கு பாதுகாப்பாக பின்னால் நின்றிருந்த தமிழக அரசின் காவல்துறை அதிகாரியை அழைத்து, “இங்க இருந்து நீங்க ரிப்போர்ட் அனுப்பாதீங்க.. வெளியே இருந்து உங்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை ரிப்போர்ட்டா ஸ்டேட் கவர்மென்ட்டுக்கு அனுப்பிக்கங்க” என வெளியே அனுப்பிவிட்டார்.
ஏன் அப்படி அனுப்பினாராம்?
தமிழக அரசுக்கு லைவ்வாக ரிப்போர்ட் போகக் கூடாது என்பதால் இப்படி சொன்னாராம் நிர்மலா சீதாராமன்.
அதேபோல கூட்ட அரங்குக்குள் வாட்டர் பாட்டில் உள்ளிட்டவைகளை வைத்து கொண்டிருந்த ஹோட்டல் பணியாளர்கள் 3 பேரையும் கூட அங்கிருந்து அனுப்ப சொல்லிவிட்டார் மினிஸ்டர் நிர்மலா சீதாராமன்.
இதன் பின்னர் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், “பார்லிமெண்ட் எலக்ஷனில் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செஞ்சோம்… தமிழ்நாடு தலைமை கேட்டது எல்லாத்தையுமே செஞ்சு கொடுத்தோம்.. ஆனால் ஒரு சீட் கூட ஜெயிக்கலைங்கிறது ரொம்ப வருத்தத்துக்குரிய விஷயம்.. இதுக்கு யார் காரணம் என்றெல்லாம் குறிப்பிட்டு குறை சொல்ல விரும்பலை. தமிழ்நாட்டுல நம்ம கட்சியோட வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.. உங்களுக்கு என்ன என்ன தேவையோ அதை தலைமை தாராளமாக செய்யும்” என அழுத்தமாக சொன்னார்.
அத்துடன், “எலக்ஷன்ல நாம ஏன் தோல்வி அடைஞ்சோம்னு யோசிச்சு பார்க்கனும்.. இங்க உங்க கருத்துகளை தாராளமாக தயக்கம் இல்லாம சொல்லலாம்” என நிர்வாகிகளை அழைத்தார் நிர்மலா சீதாராமன்.
அப்போது நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல முன்வராமல் தயங்கினர். இதனால் நிர்மலா சீதாராமனே, “அமெரிக்காவோட 50% வரி விதிப்பால நம்ம தமிழ்நாட்டுல திருப்பூருக்கு ரொம்பவே பாதிப்புதான்… இந்த பாதிப்புகளை சரி செய்யுற மாதிரி பெரிய பேக்கேஜ் ஒன்றை அறிவிப்பது பற்றி டெல்லியில் ஆலோசனை செய்துகிட்டு இருக்கிறோம்” என சொல்ல அடுத்து அடுத்து பேசத் தொடங்கினர் நிர்வாகிகள்.
“தங்கம் விலையில் ஏற்றம் இறக்கம் இருக்கிறது.. இது பொதுமக்களை கடுமையாக பாதிக்குதே” என ஒருவர் சொல்ல, “தங்கம் விலைங்கிறது இம்போர்ட்- எக்ஸ்போர்ட்டில் ஏற்படுகிற இம்ப்ரூவ்மென்ட்டை பொறுத்தது” என பதில் சொன்னார் நிர்மலா சீதாராமன்.

இன்னொரு நிர்வாகி, “தமிழ்நாட்டுக்கான 100 நாட்கள் வேலைக்கான நிதியை தரலைன்னா அதிருப்தி வரும்தானே” என சொல்ல இடைமறித்த நிர்மலா சீதாராமன், “இது ரொம்ப முக்கியமான விஷயம்தான்… தமிழ்நாடு எல்லாதுறையில அப்படி வளர்ந்துருச்சு.. இப்படி வளர்ச்சியடையுதுன்னு ஒரு பக்கம் அரசு சார்பாக சொல்றாங்க.. இன்னொரு பக்கம், அய்யா 100 நாள் திட்டத்துக்கு நிதி தரலைன்னும் சொல்றாங்க.. வளர்ச்சி அடைந்த மாநிலத்தில் 100 நாட்கள் திட்டத்துக்கான தேவை என்ன அப்படிங்கிற கேள்வி வரலையா? மினிஸ்டர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்பி எல்லாம் என்னை சந்திச்சப்பவும் நான் இதைத்தான் சொன்னேன்” என விளக்கினார்.
பாஜக மாநில செயலாளர்களில் ஒருவரான கராத்தே தியாகராஜன் எழுந்து, “மேடம் நான் சொல்றதை தப்பா எடுத்துக்காதீங்க” என பீடிகையுடன் பேச எல்லோரது கண்களும் அவரை நோக்கி திரும்பின.

கராத்தே தியாகராஜன் பேசும் போது, “ஜிஎஸ்டியில் SGGST-யை மாநில கமர்ஷியல் டேக்ஸ் அதிகாரிகள் வசூலிக்கிறாங்க.. பல நிறுவனங்களை மிரட்டிதான் இவங்க வசூலிக்கிறாங்க.. அதேபோல சென்ட்ரல் கவர்மென்ட் CGGST-ஐ வசூலிக்கிற அதிகாரிகளும் லட்சக்கணக்கில் மிரட்டி பணம் வாங்குறாங்க.. இது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது..இதை தவிர்க்கனும்” என சொல்ல அப்போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், “இதை யார் சொல்றது? அப்படி சொல்ற அசோசியேசன் பீப்பிளை வந்து பார்க்க சொல்லுங்க” என்றார்.
இந்தக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய கராத்தே தியாகராஜன், “பிரதமர் மோடிக்கு ரொம்ப நெருக்கமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிச்ச கூலி படத்துக்கு A சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கு சென்சார் போர்டு.. இந்த படத்தை தியேட்டரில் போய் குழந்தைங்க பார்க்க முடியலை.. A சர்ட்டிபிகேட் கொடுத்ததால டிவியிலும் அவங்களால போட முடியலை.. இதுக்காக அவங்க நீதிமன்றத்துக்கு போய் U/A சர்ட்டிபிகேட் கேட்டா, சென்சார் சார்பாக ஆஜரான நம்ம மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் கடுமையாக இதை எதிர்க்கிறார்.. நம்ம பிஎம் மோடிக்கு வேண்டிய ரஜினி படத்துக்கு இப்படி கெடுபிடி காட்டுறாங்க..
ஆனா ‘மனுஷி’ என்ற திரைப்படம் நமக்கு எதிரானது.. லெப்ட்டிஸ்ட் டைரக்டர் வெற்றிமாறனுடையது. அந்த படத்துக்கும் சிக்கல் வந்தது.. அவங்க கோர்ட்டுக்குப் போய் சாதகமான ஆர்டரை வாங்கிட்டாங்க.. நாம கடுமையாக கோர்ட்டில் எதிர்க்கலையே..வாதாடலையே” என விவரித்ததை உன்னிப்பாக கேட்டார் நிர்மலா சீதாராமன்.
அப்போது பாஜக நிர்வாகிகள் சிலர், “மத்திய அமைச்சர் எல்.முருகனைத்தான் ‘தியாகு’ மறைமுகமாக சொல்றாரு’ என கிசுகிசுத்தனர்.
இதன் பின்னர், “திமுக அரசு ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் 26 திட்டங்களை அரசு அதிகாரிகளை வைத்து முகாம் நடத்துது.. அதேபோல நாமும் பிரதமர் மோடி படத்தை வைத்து மத்திய அரசின் திட்டங்கள் பற்றி மத்திய அரசு அதிகாரிகள் மூலம் தமிழக மக்களிடம் சொல்லக் கூடிய முகாம்களை நடத்தனும் மேடம்” என்று சொன்ன கையோடு அடுத்ததாக அஸ்திரம் ஒன்றை வீசினார் கராத்தே.
அதாவது, “தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சரியாக செயல்படலைங்க.. அவங்க இன்னும் ரொம்ப தீவிரமாக நடவடிக்கை எடுக்கனும்தான் எல்லோருமே எதிர்பார்க்கிறோம்” என சொல்ல, ரொம்ப அமைதியாக கேட்டுக் கொண்டார் மினிஸ்டர்.

கராத்தே தியாகராஜனைத் தொடர்ந்து அண்ணாமலை ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி எழுந்து, “மத்திய அரசோட ஸ்கீம்ஸை மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறதுக்கு மேடம் guide பண்ணுங்க” என சொன்னார்.
அப்போது நிர்மலா சீதாராமன் அதை ரசிக்காதவராக, “இப்படித்தான் கோவையில் முகாம் போட்டு loan எல்லாம் ஏற்பாடு செஞ்சு கொடுத்தோம்.. அப்பதான் ஹோட்டல் அதிபர் ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னுடன் பேசிய அந்த வீடியோ வைரலாக்கப்பட்டது. அந்த பிரச்சனையில் நாங்க யாரும் மன்னிப்பு எல்லாம் கேட்கலை.. ஆனா தமிழக பாஜக தலைமைதான் (அண்ணாமலை) மன்னிப்பு கேட்டது” என்று சொல்லிவிட்டு “கராத்தே தியாகராஜன் சொன்னதைப் போல இதை நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ” என கடுப்படித்துவிட்டார் மினிஸ்டர் நிர்மலா சீதாராமன்.
“அண்ணாமலை மீதான கோபத்தை அமர் பிரசாத் ரெட்டி பேசியதால இதுதான் சான்ஸுன்னு கொட்டிவிட்டார் மினிஸ்டர்’ என பாஜக நிர்வாகிகள் அப்போது பேசிக் கொண்டனர்.
நிர்மலா சீதாராமன் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெயரை குறிப்பிடாமல் கராத்தே தியாகராஜன் முன்வைத்த புகார்களும், அமர் பிரசாத் ரெட்டியால் அண்ணாமலை மீதான அதிருப்தியை நிர்மலா சீதாராமன் கொட்டியதும்தான் இப்போது பாஜக வட்டாரங்களில் ஹைலைட் பேச்சு..
ஓஹோ…
அண்ணாமலை மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து பேச தொடங்கி இருப்பதும் கூட இதன் தொடர்ச்சிதான்..
அப்படி என்ன பேசினார் அண்ணாமலை?
கோவை பிரஸ் மீட்டில், “எடப்பாடி பழனிசாமி தற்குறி.. அவர் முதல்வர் ஆவதற்கு தகுதி இல்லை என்ற விமர்சித்த நீங்கள் இப்போது அவருடன் கூட்டணி வைத்துள்ளீர்களே ” என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, “எல்லாரிடத்திலும் எனக்கு அன்பு , பண்பு, பாசம் இருக்கிறது. உங்களுக்கு தெரியும்.. எனக்கு தனிப்பட்ட முறையில் கோபம், ஆற்றாமை இருக்கிறது” என மறைமுகமாக எடப்பாடி மீதான கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இனி வரும் நாட்களில் அண்ணாமலை வடிவத்தில் என்னவெல்லாம் பிரச்சனை வெடிக்குமோ என கமலாலயத்தில் காய்ச்சல் அடிக்கிறது.

நிர்மலா சீதாராமன் விசிட்டில் ஒன்றை கவனிச்சீங்களா?
ஜிகே மூப்பனார் நினைவிடத்துக்கு போய்விட்டு இல. கணேசன் வீட்டுக்கு போய் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்தார்.. அத்துடன் இல்லாமல், வழக்கத்துக்கு மாறாக, கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்துக்கு போய் மரியாதை செலுத்தினார்; காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்தார் நிர்மலா சீதாராமன்.
ஓஹோ..
சென்னை வரும் போது காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா, ராகுல் காந்தி கூட காமராஜர் நினைவிடத்துக்குப் போகாத நிலையில் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமராஜர் நினைவிடத்துக்கு போய் மரியாதை செலுத்தியது ரொம்ப முக்கியமாச்சே..என
டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.