வைஃபை ஆன் செய்ததும் விறுவிறுவென டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Nikitha Ajithkumar
திருப்புவனம் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் வீட்டுக்கு ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்று கொண்டே இருக்கின்றனர்.
அஜித்குமார் விவகாரத்தில் தமிழக அரசு ஆற்ற வேண்டிய கடமைகள் அனைத்தையும் அடுத்தடுத்து செய்து வரும் நிலையில், அஜித்குமார் மரணத்துக்கு காரணமான புகார்தாரர் நிகிதாவுக்கு உதவிய ‘அதிகாரி’ யார் என்ற கேள்வி பூதாகரமாக சுழன்று கொண்டே இருக்கிறது.
சென்னையில் இருக்கிற ஐபிஎஸ் அதிகாரி, கோட்டையில இருக்கிற ஐஏஸ்அதிகாரி, டெல்லியில் இருக்கிற ஐஏஎஸ் அதிகாரி என நாலாபக்கமும் பலரையும் கை நீட்டுகிறார்கள்.. இதில் கடுப்பாகிப் போன ஒரு ஐபிஎஸ் அதிகாரி, “என் பெயரைத்தானே அதிகமாக சொல்கிறார்கள்.. பிரச்சனை இல்லை சார்.. நானே ஒரு புகார் தருகிறேன்.. அதனடிப்படையில் விசாரித்து ‘அந்த அதிகாரி’ யார் என கண்டுபிடித்துவிடலாம்” என மேலதிகாரியிடம் சொல்லி இருக்கிறார்.
இதனையடுத்து பார்மாலிட்டிக்காக ஒரு புகார் கடிதத்தையும் அந்த ‘தலை உருட்டப்படும்’ அதிகாரியிடம் வாங்கிக் கொண்ட மேலதிகாரி விசாரணையை கமுக்கமாகவும் விரைவாகவும் நடத்தி முடித்துள்ளார். இப்போது இந்த விசாரணை அறிக்கை முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கப்பட்டதாம்.
அந்த அறிக்கையில் என்னதான் இடம் பெற்றுள்ளனவாம்?
கோவிலுக்கு போன நிகிதாவின் நகைகள் தொலைந்தது உண்மைதானாம். இந்த நகை திருட்டு தொடர்பாக காவலாளி அஜித்குமார் மீதுதான் நிகிதாவுக்கு முழு சந்தேகம் இருந்துள்ளது. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன நிகிதா, அங்கேயே சில மணிநேரம் அமர்ந்திருந்தும் போலீஸ் தரப்பில் இருந்து எந்த திருப்தியான பதிலும் வரவில்லையாம். அப்போதுதான், நான் மீடியாவுக்கு போறேன்.. சோசியல் மீடியாவுக்கு போறேன் என்றெல்லாம் ஆவேசப்பட்ட கையோடு சில மீடியாக்களையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்தும் விட்டாராம் நிகிதா.
இதனால் திருப்புவனம் இன்ஸ்பெக்டர், மேலதிகாரியான டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லி இருக்கிறார்.
இதனையடுத்தே, டிஎஸ்பி சண்முக சுந்தரம், இன்ஸ்பெக்டரிடம், “சரி இதை நானே என் டீமை வைத்து பார்த்து கொள்கிறேன்” என கூறியிருக்கிறார்.
அத்துடன் தமது சிறப்பு தனிப்படை போலீசாரை வைத்து அஜித்குமாரை விசாரிக்க சொல்லி இருக்கிறார் டிஎஸ்பி சண்முக சுந்தரம். இந்த டீமும் அஜித்குமாரை விசாரித்திருக்கிறது.. ஒரு கட்டத்தில் நகை இருப்பதாக சொல்லப்பட்ட இடத்துக்கும் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அங்கே நகை இல்லை. இதனால் டென்ஷனாகிப் போன போலீசார் அஜித்தை தாறுமாறாகத் தாக்க அவர் உயிரிழந்துவிட்டார் .. இதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு போயிருக்கும் காவல்துறையின் அறிக்கையில் இருக்கிறதாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.