வைஃபை ஆன் செய்ததும், ‘அடேங்கப்பா புதிய டிஜிபி நியமனத்தில் இத்தனை விவகாரமா?’ என சலித்துக் கொண்டே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
டிஜிபி நியமன விவகாரத்தில் என்னதான் நடக்கிறதய்யா?
மாநிலத்தில் பதவியில் உள்ள டிஜிபி ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே புதிய டிஜிபியை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிடும்.
புதிய டிஜிபிக்களாக இவர்களை எல்லாம் நியமிக்கலாம் என ஒரு பட்டியலை 3 மாதங்களுக்கு முன்னரே மாநில அரசுகள், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். இந்த பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பரிசீலனை செய்யும். இதன் அடிப்படையில் புதிய டிஜிபிக்களாக 3 பேரில் ஒருவரை நியமிக்கலாம் என மத்திய அரசு பரிந்துரைக்கும். அதன் பின்னர் புதிய டிஜிபி அறிவிக்கப்படுவார்.
சரி இது எல்லா அரசும் பின்பற்றுகிற நடைமுறைதானே?
அப்படித்தான் செய்ய வேண்டும்.. ஆனால் திமுக அரசு, புதிய டிஜிபி தேர்வுக்கான நடைமுறையை தொடங்கவே இல்லை என நீதிமன்றத்தில் வழக்கே தொடரப்பட்டு அது டிஸ்மிஸ் ஆனது. அப்போது, டிஜிபி நியமன விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டால் தலையிடுவோம் என உயர்நீதிமன்றமும் கூறியிருந்தது.
ஆமாம்..
இப்படி எல்லோரது கண்களும் மத்திய அரசுக்கு புதிய டிஜிபி நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலை மாநில அரசு அனுப்பியதா? இல்லையா? என கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டே இருக்கின்றன.
தற்போது மத்திய அரசுக்கு புதிய டிஜிபிக்கான பட்டியல் போய்விட்டது என்றும், இல்லை.. மாநில அரசு பட்டியலை அனுப்பாமல் இருக்கிறது என்றும் இருவேறு கருத்துகள் கோட்டை வட்டாரங்களில் பரபரக்கின்றன.
மத்திய அரசுக்கு மாநில அரசு பட்டியல் அனுப்பியதாக சொல்கிற சோர்ஸ்கள், புதிய டிஜிபிக்களாக சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் ஆகியோரது பெயர்களை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது என்கின்றன.
இன்னமும் டிஜிபிக்கள் பட்டியலை டெல்லிக்கு தமிழக அரசு அனுப்பவில்லை என்கிற சோர்ஸ்கள் வேறு சில விஷயங்களை விவரிக்கின்றன.
அதாவது டிஜிபி விஷயத்தில் 3 நிகழ்வுகள்தான் நடக்க முடியும். ஒன்று, மாநில அரசு பட்டியல் அனுப்பிவிட்டால் அதில் 3 பேரை தேர்வு செய்து ,மத்திய அரசு அனுப்பி விடும். மற்றொன்று மாநில அரசு பட்டியல் அனுப்பாத நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படக் கூடும். மூன்றாவது, தற்போதைய டிஜிபிக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம்.
இந்த மூன்றில் டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதை உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடுமையாக நிராகரித்திருக்கிறது. அப்படி டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராகிவிடும்; சட்ட சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பது மிக முக்கியமானது.
டிஜிபி நியமன நடைமுறைகள் 3 மாதங்களுக்கு முன்னர் தொடங்க வேண்டும் என்றாலும் மாநில அரசு பட்டியலை அனுப்பிவிட்டால் அதில் இருந்து 3 பேரை மத்திய அரசு தேர்வு செய்து மாநில அரசுக்கு அனுப்பும்- காலம் தாழ்த்தாது; இதன் பின்னர் மாநில அரசு நியமன அறிவிப்பு வெளியிடும் என்றும் சொல்கின்றனர்.
அப்படி இல்லாத சூழ்நிலையில் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படலாம் என்கின்றன கோட்டை தகவல்கள்.
ஆக தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு இல்லை என்பது உறுதி எனில் பொறுப்பு டிஜிபியாக யாரை நியமிக்க வாய்ப்பு இருக்கிறது?
பொறுப்பு டிஜிபியை நியமிப்பது என மாநில அரசு முடிவெடுத்துவிட்டால் விஜிலென்ஸ் டைரக்டர் அபய்குமார் சிங், அட்மினில் இருக்கும் வெங்கட்ராமன் ஆகிய இருவரில் ஒருவருக்கு சான்ஸ் இருக்கிறது என்கின்றன சோர்ஸ்கள் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.