வைஃபை ஆன் செய்ததும், ”எலக்ஷனே முடிஞ்சாலும் முடிவு மட்டும் வராது போல” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா சொல்றீரு.. புரியலையே..
தேர்தல் தேதியே அறிவிக்க போறாங்க.. ஓபிஎஸ் எந்தப் பக்கம் போறேன்னு அறிவிக்கலையேன்னு சொல்ல வந்தேன்…
ஓ.. ஓபிஎஸ் என்னதான் முடிவு எடுத்திருக்கிறாராம்?
ஓபிஎஸ் கூட நட்பாக இருந்த செங்கோட்டையன் திடீர்னு விஜய் கட்சிக்கு போய்ட்டாரு.. டிடிவி தினகரன் மீண்டும் பாஜக கூட்டணிக்கே போய்ட்டாரு..
ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் எல்லாம் திமுகவுல சேர்ந்துட்டாங்க.. இப்போதைக்கு ஓபிஎஸ்ஸும் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும்தான் அவரு அணியில இருக்காங்க..
அடுத்து என்னதான் செய்யுறதுன்னு தேனி செட்டியபட்டியில ஆதரவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி உட்பட 30 பேருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துனாரு..
அந்த கூட்டத்துல பேசுன ஓபிஎஸ், பாஜக கூட்டணியில யாரை சேர்க்கலாம்னு அவங்க எடப்பாடியை கேட்டுதான் முடிவெடுக்கிறாங்க..
எடப்பாடியோ, டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில சேர்க்க ஓகே சொல்லிட்டாரு.. சசிகலாவை, நம்மை எல்லாம் சேர்க்கவே முடியாதுன்னு சொல்லிட்டாரு… பாஜகவும் அவருக்கு பிரஷர் கொடுக்கலை..
குருமூர்த்திகிட்டேயும் பேசிப் பார்த்தேன்.. அவரோ, “எவ்வளவோ சொல்லி பார்த்தும் எடப்பாடி கேட்கலையே”ன்னு கையை விரிச்சுட்டாரு..
இப்ப நம்ம கிட்ட இருக்கிறது ரெண்டு ஆப்ஷன்ஸ்.. ஒன்னு திமுக, இன்னொன்னு விஜய் கூட்டணி
திமுக கூட்டணிக்கு இப்ப இருக்கிற உரிமை மீட்பு கழகம் பெயரிலேயே போய் சேரலாம்.. நானும் ஐயப்பனும் 2 எம்.எல்.ஏக்கள் இருக்கிறதால கூடுதலா 1 சீட்டுன்னு மொத்தம் 3 சீட் தருவாங்க..
இன்னொன்னு விஜய் கட்சி கூட்டணியில்ல சேர்றது.. செங்கோட்டையன்கிட்ட விஜய் கூட்டணிக்கு போறதைப் பத்தி பேசுனேன்… விஜய்கிட்ட போனால் அதிகமா சீட் கிடைக்கும்தான்.. ஆனா ஜெயிப்போமான்னுதான் தெரியலையே? அதனால என்ன செய்யலாம்னு சொல்லுங்க” என பேசியிருந்தார்.
அந்த கூட்டத்துல இருந்தவங்க, “அண்ணே.. நீங்க முதல்வரா இருந்தவரு.. நீங்க போய் விஜய்யை முதல்வராக்குவோம்னு பிரசாரம் செஞ்சா எப்படிங்கண்ணே நல்லா இருக்கும்? மக்கள் அதை எப்படி பார்ப்பாங்க? ஏத்துக்குவாங்களா?”ன்னு சொன்னாங்க.. அதனால ஓபிஎஸ் ரொம்பவே தீவிரமா யோசிச்சுகிட்டே இருக்கிறாராம் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
