வைஃபை ஆன் செய்ததும் “இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே” என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
யாரப்பா ‘இன்றைக்கு ஆனந்தமாக இருப்பது’
இன்றைக்கு ஆனந்தமாக மட்டுமல்ல.. அளவு கடந்த நெகிழ்ச்சியுடனும் இருப்பது தவெக தலைவர் நடிகர் விஜய்தான்.
மதுரை மாநாடு எபெக்ட்டா?
ஆமாம்.. மதுரை மாநாட்டில் ஆவேசமாக பேசி முடித்த பின்னர், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், ஜான் ஆரோக்கியசாமி என உடனிருந்தவர்களை அப்படியே ஆனந்தத்தில் கட்டிப் பிட்டித்து மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார் விஜய்.

அப்போது கண்கள் கலங்கியபடியே, “மாநாடு ரொம்ப பெரிய சக்சஸாகிடுச்சு.. எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லாம சொந்த காசை செலவு செஞ்சுட்டு இத்தனை லட்சம் பேர் நம்மை தேடி வந்திருக்காங்களே.. இவங்களுக்கு நாம என்னதான் செய்ய போறோம்.. அத்தனை பேரும் ரொம்ப பாதுகாப்பாக வீட்டுக்குப் போகனும்… அதுல கவனமாக இருக்கனும்” என அக்கறையோடும் சொல்லி இருக்கிறார் விஜய்.
அங்கிருந்து உடனேயே சாலை மார்க்கமாகவே சென்னைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.
சென்னைக்கு காரில் வரும் போதே, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரிடம் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணம் பற்றி ரொம்ப சீரியசாக பேசிகிட்டே வந்தாராம் விஜய். “செப்டம்பர் மாதத்தில் இருந்து டூர் கிளம்பனும்… அதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்க.. கூட்டணிக்கு வர்றவங்க வரட்டும்.. அதை எல்லாம் பார்த்துக்கலாம்.. கண்டிப்பா நாமதான் ஜெயிக்கப் போறோம்..
எனக்கு இருக்கிற பயமே.. டூர் போகும் போது இப்படி கூட்டம் வந்தா எப்படி சமாளிக்கிறது? மாநாட்டுல பவுன்சர்களாலேயே கன்ட்ரோல் பண்ணவே முடியாத நிலைமை ஆகிடுச்சு.. மாநாட்டுக்கு வராம வீட்டுல இருக்கிற பெண்கள் எல்லாம் நாம டூர் போகும் போது அதிகமாக வருவாங்களே.. அந்த கூட்டத்தை எல்லாம் எப்படி சமாளிக்கப் போறோம்?” என சீரியசாக பேசினாராம் விஜய்.

விஜய் மதுரை மாநாடு பற்றி அரசியல் கட்சிகளோட ரியாக்ஷன் எப்படி?
அதிமுகதான் இடைவிடாமல் அட்டாக் செஞ்சுகிட்டே இருக்கு.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி 2,3-ம் கட்ட தலைவர்கள், சோசியல் மீடியா என எல்லா பக்கமும் காட்டமாக விஜய்யை விமர்சிக்கிறாங்க..
திமுக சைடுல இருந்து பெரிசா ரியாக்ஷன் இல்லையே?
அப்படித்தான் நிலவரம் இருக்கு.. திமுக ஐடிவிங் கூட ரொம்ப பெரிதாக அலட்டவில்லை. சிஎம் ஸ்டாலினை ‘Uncle’ என விஜய் விமர்சித்ததை ஒரு சில திமுகவினர்தான் ட்ரோல் செய்றாங்க.. ஆனால், “சின்ன வயசில் இருந்தே ஸ்டாலினை பார்த்தால் ‘Uncle’ என்றுதான் விஜய் கூப்பிடுவார்.. அதனால் சிஎம் சைடில் இதை பெரிதாக எடுத்துக்கலை.. இதை புரிந்து கொண்ட சீனியர்ஸும் கேசுவலாகவே விஜய் மாநாட்டை சோசியல் மீடியாவில, பொதுவெளியில லைட்டாக கடந்து போறாங்க..” என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
அதே நேரத்தில், விஜய் மதுரை மாநாட்டுக்கு கூடிய கூட்டம் திமுகவுக்குள் சீரியசான பேசுபொருளாக இருக்கிறது. தமக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசிய சிஎம் ஸ்டாலின், “மதுரை மாநாட்டுக்கு விஜய் தரப்பில் எந்த செலவுமே செய்யலைன்னு எல்லோரும் சொல்றீங்க.. ஆனால் செலவே செய்யாமல் எவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கு.. அதிலும் இளைஞர்கள் கூட்டம்தான் ரொம்பவே அதிகமாக இருக்கு..” என பிரம்மிப்பாக சொன்னாராம் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைனுக்குள் போனது வாட்ஸ் அப்.