வைஃபை ஆன் செய்ததும், ” வெடி வெடிக்கிற காலம் உண்டாச்சு”என்கிற பாடல் வரிகளை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
என்னய்யா ஒரே ‘வெற்றி’ மோடில் இருக்கிறீர்?
அப்படி ஒரு குதூகலம் விஜய் கட்சியில இருக்குன்னு சொல்ல வந்தேன்யா..
என்னப்பா.. அவங்களே ரொம்ப துயரத்துல இருந்து மெல்ல மீண்டுகிட்டு இருக்காங்க..
உண்மைதான்.. கரூர் துயரத்துல இருந்து தவெக மட்டுமல்ல விஜய்யும் இப்பதான் ‘மீண்டு’ வந்திருக்காரு..
விஜய் மீண்டு வந்ததில் ஏதாவது அதிரடி மாற்றங்கள்?
ஏதாவது அதிரடி மாற்றமா.. அய்யோ..அம்மா அலறல்தான் அதிகமாக கேட்குதாம்.. அப்படி ‘கில்லி’ ஆடுகிறாராம் விஜய்…
அப்ப பெருசா ஏதோ நடந்துருக்கு.. விளக்கமாகவே சொல்லுமய்யா..
விஜய்யைப் பொறுத்தவரை தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், வெங்கட்ராமன் சொல்றதுக்கு அப்பால் ரொம்பவே நம்பிக்கையாக விஜய் அட்வைஸ் வாங்கிகிட்டு இருந்தது ஜான்கிட்ட இருந்துதான்.. அப்படி ஒரு ‘பாண்டிங்’ இருவருக்கும் இருக்கு..
கரூர் சம்பவத்துக்கு பின்னால சோசியல் மீடியாவுல புஸ்ஸி ஆனந்த், ஜான் கோஷ்டிகள் ரொம்பவே நாரசமா அடிச்சுகிட்டாங்க.. இந்த சண்டையில ஜான் பற்றியும் புஸ்ஸி பற்றியும் ஏகப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டிருந்தது..
இப்படி சோசியல் மீடியாவுல நடக்குற சண்டை அத்தனையையும் விஜய் பார்வைக்கு ஒருவர் கச்சிதமாக கொண்டு சேர்த்திருக்கிறார்.. பொதுவாக விஜய்க்கு இப்படி ஒரு அக்கப்போர் சோசியல் மீடியாவுல நடக்கிறதே தெரியாமத்தான் இருந்துச்சு.. முதல் முறையாக சோசியல் மீடியாவுல கட்சியை பற்றி கட்சிக்காரங்களே இப்படி ‘லாரி லாரியாக’ கொட்டியிருப்பதை பார்த்துட்டு ரொம்பவே அதிர்ச்சியாகிட்டாராம் விஜய்.
இதுபற்றி நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள், “சோசியல் மீடியா சண்டக்குப் பிறகு ஜான் ஆரோக்கியசாமியை கூப்பிட்டு விஜய் ரொம்ப நேரம் பேசுனாரு.. பேசுனாருன்னு சொல்றது கூட சரி இல்லை.. ஜானை கூப்பிட்டு, “விளாசி இருக்கிறாரு விஜய்”ன்னுதான் சொல்லனும்..
“கரூரில் இருந்து என்னை கிளம்ப சொன்னதும் நீங்கதான்.. கரூருக்கு திரும்ப போனா அட்டாக் நடக்கும்னு சொன்னதும் நீங்கதான்.. எந்த ரிப்போர்ட்டை வெச்சு அப்படி சொன்னீங்க.. நீங்க சொல்றபடி எல்லாம் கேட்டுத்தான் இப்படி கட்சியே ஒன்னுமில்லாத நிலைக்கு தள்ளிட்டீங்க.. “என ரொம்ப ரொம்ப கடுமையாகவே ஜானை லெப்ட் ரைட் வாங்கினார் விஜய்.” என்றனர்.
விஜய்யின் அந்த ‘ஆக்ஷன்’ மோடை கொஞ்சமும் எதிர்பார்க்காமல் ரொம்பவே அதிர்ச்சியாகிட்டாராம் ஜான்,
ஓஹோ..
ஜான் விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள், “தவெகவில் எந்த பொறுப்பில் இல்லாதவர் ஜான்.. விஜய்ய்க்கு அட்வைசர்.. தேர்தல் வியூக வகுப்பாளர் அவ்வளவுதான்.. ஆனால் கட்சியோ தன்னுடையதுன்னு.. விஜய்யே தன்னுடைய கண்ட்ரோல்தான்னு ரொம்பவே ‘கையை ஓங்கிகிட்டு’ இருந்தாரு ஜான்.. இப்பதான் ஜானுக்கு விளாசல் கிடைச்சிருக்கு” என்கின்றனர்.
ஜானுக்கு மட்டும்தானா இந்த மாதிரி ‘கிடைச்சது’?
அதான் இல்லை. ஜானை விளாசியது போலவே இதுவரை இல்லாத அளவுக்கு புஸ்ஸி ஆனந்தையும் போட்டு வெளு வெளுவென வெளுத்துட்டாராம் விஜய்..
“கரூரில் இருந்து நான்தான் வந்துட்டேன்.. நீங்க எங்கே போனீங்க? ஒரு மாசமாக கட்சியை என்ன செஞ்சு வெச்சிருக்கீங்க? கட்சியையே புதைச்சது மட்டுமில்லாம என்னையையும் படுத்த படுக்கையாக்கிட்டீங்களே.. இதுதான் நீங்க கட்சியை நடத்துற லட்சணமா? உங்களை கரூருக்கு போக வேண்டாம்.. பாதிக்கப்பட்டவங்களை சந்திக்க வேண்டாம்னு யாருங்க தடுத்தது? நீங்க ஏன் கரூருக்கு போகாம தலைமறைவாக போனீங்க? எதையுமே சந்திக்க முடியாதுன்னா கட்சியை எப்படி நடத்துறது? கட்சியோட நிலைமையை எப்படி கொண்டு வந்து விட்டிருக்கீங்க?” என மூச்சுவிடாமல் புஸ்ஸி ஆனந்துக்கும் சரமாரியாக ‘விழுந்தது” என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
இதுபற்றி புஸ்ஸி ஆனந்த் தமது சகாக்களிடம் ரொம்பவே கலங்கி இருக்கிறார். அத்துடன், “இத்தனை வருஷத்துல இவ்வளவு மோசமாக என்னை சார் திட்டுனதே இல்லை.. ரொம்ப ரொம்பவே கோபமா திட்டிட்டாரு.. முன்னதான் ஜான் சொல்லித்தான் திட்டுறாருன்னு ஆறுதலா இருந்துச்சு.. இப்ப ஜானையும் சேர்த்து விளாசினாரு.. இவ்வளவு பிரச்சனைகளை தெளிவாக யாரோ அவருக்கு சொல்லி இருக்காங்க.. அதான் இப்படி நடக்குது.. ” என புலம்பிவிட்டாராம் புஸ்ஸி ஆனந்த்.

ஓஹோ அதான் பனையூர் கட்சி ஆபீஸ் ஒரே பரபரப்பாக இருக்குதா?
ஆமாய்யா.. தவெக நிர்வாகிகள் குழு அறிவிப்பு, நவம்பர் 5-ல் பொதுக்குழு என அடுத்தடுத்த அறிவிப்பு வந்துச்சு.. நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டம், வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டம், தொண்டர் அணி ஆலோசனை கூட்டம்னு ஒரேயடியா டாப் கியரில் பறந்துகிட்டு இருக்கு தவெக ஆபீஸ்..
வழக்கறிஞர்கள் அணி ஆலோசனை கூட்டத்துல என்ன விஷேசமாம்?
தவெக வழக்கறிஞர்கள் அணி கூட்டத்துக்கு 30 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவங்கதான் அதிகமாக வந்திருந்தாங்க.. தவெக வழக்குகளை நடத்துற அறிவழகன்தான் ஒருங்கிணைச்சிருந்தாரு.. ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் ஒரு தவெக வக்கீல் அணி உருவாக்கப் போறாங்களாம்..
இந்த கூட்டத்துல பேசுன ஆதவ் அர்ஜூனா, “இவ்வளவு வலிமையாக நாம இருக்கிறப்ப பார்கவுன்சில் எலக்ஷனிலும் போட்டியிட்டு ஜெயிக்கனும்” என சொல்லி இருக்கிறார்..
புஸ்ஸி ஆனந்த் பேசும் போது, “நம்ம கட்சியோட மா.செக்களை விட வலிமையானவங்களாக வழக்கறிஞர்கள் அணி இருக்கனும்.. நீங்க இப்பவே லட்சம் லட்சமாக கட்சிக்காக செலவு செஞ்சுகிட்டுதான் இருக்கீங்க.. நிச்சயம் உங்களுக்கு தேர்தல் நேரத்துல சரியான உதவி வந்து சேரும்..” என நம்பிக்கை கொடுத்திருக்காரு…
தவெகவில் ஒரு தொகுதிக்கு 10 வக்கீல்கள், மாவட்டத்துக்கு 2 பொறுப்பாளர்கள், ஒரு வேட்பாளருக்கு ஒரு வக்கீல்னு ரொம்பவே பலமாக சட்டத்துறையை கட்டமைக்க போறாங்களாம்..
ஓஹோ…
தவெக வழக்கறிஞர்கள் அணி கூட்டத்துல ஒரு சுவாரசியமும் நடந்துச்சு.. திமுக வழக்கறிஞர்கள் சிலரும் இந்த் கூட்டத்துல கலந்துகிட்டு பாக முகவர்களுக்கு கிளாஸ் எடுக்கிற மாதிரி சில விஷயங்களை ஷேர் செஞ்சிருக்காங்க…
அடடே.. சுவாரசியம்தான்.. தொண்டர் அணி கூட்டத்துல என்ன நடந்துச்சு?
தவெகவுல ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது தொண்டர் அணிதான்.. கரூர் சம்பவத்துக்கு காரணமே “கட்சியில தொண்டர் அணி இல்லை. கட்சியை ஒழுங்குபடுத்த ஆளே இல்லை” என்கிற குற்றச்சாட்டு கடுமையாக வெச்சாங்க..
அதனால தொண்டர் அணியை ஸ்டிராங்கா, மத்த கட்சிகளில் இருந்து வேறுபடுத்தி காட்டனும்னு சீரியசாக கூட்டத்தை நடத்தினாங்க..
தவெக தொண்டர் அணி கூட்டத்துல, மாஜி ஐஜி ரவிக்குமார், மாஜி டிஎஸ்பிக்கள் சிவலிங்கம், சஃபியுல்லா, மாஜி டிசி அசோகன் என ஓய்வு பெற்ற அதிகாரிகளும் கலந்துகிட்டாங்க.. இப்படி ரிட்டையர்ட் போலீஸ் ஆபீசர்ஸ் 15 பேர் கொண்ட குழுவை தொண்டர் அணிக்கான ஆலோசகர் டீமாக போட்டிருக்காங்க..
234 தொகுதிகளில் இருந்தும் தொகுதிக்கு 2 பேர் தொண்டர் அணியில பொறுப்பாளராக இருப்பாங்க.. 2,500 பேர் வரை தொண்டர் அணி உறுப்பினர்கள் இருப்பாங்களாம்.. மகளிர் தொண்டர் அணியில 1,500 பேரை சேர்க்கிறாங்களாம்..
ஒட்டுமொத்த தொண்டர் அணியையும் மாஜி போலீஸ் அதிகாரிகள்தான் குழுதான் வழிநடத்துமாம்..
பனையூர் கூட்டத்துல கூட, மாஜி போலீஸ் அதிகாரிகள்தான் கூட்டங்களை எப்படி ஒழுங்குபடுத்துறது; பொதுமக்களையும் தொண்டர்களையும் எப்படி கையாளனும்னு கிளாஸ் எடுத்தாங்களாம்..
தவெகவின் இந்த அட்வைசர் டீமில் இருக்கும் மாஜி ஐஜி ரவிக்குமார், பேராசிரியராகவே இருந்து போலீஸ் பணிக்கு வந்தவர்; இந்த கூட்டத்துல பேசும் போது, ” தொண்டர் அணியினருக்கு உடல் ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம்.. நல்லா உடல் பயிற்சி செய்யனும்; அதேபோல மனப் பயிற்சியும் ரொம்ப அவசியம்.. நம்ம தொண்டர்கள் வேகமாக இருக்கக் கூடியவங்க.. நாம ஹெல்த்தியாக இருந்தாதான் தொண்டர்களை ஈஸியாக ஹேண்டில் செய்ய முடியும்” என வகுப்பெடுத்திருக்கிறார்.
மாஜி டிஎஸ்பி சஃபியுல்லா ஏற்கனவே தவெகவுடன் இணைந்து பணியாற்றுகிறவர்; கரூரில் விஜய் கூட்டம் நடந்த செப்டம்பர் 27-ந் தேதி கூட அங்கு போய் சில ஏற்பாடுகளை செய்து தந்தாராம்.. அதனால தவெக தொண்டர் அணி தனித்துவமாக இருக்கும்னு நம்பிக்கையா இருக்காங்களாம்..
அதெல்லாம் சரி.. கிரீஸ் தடவினாலே அதை துடைச்சுவிட்டு ஏறி ஆட்டம் காட்டுகிற தொண்டர்களை இந்த போலீஸ் டீம் கண்ட்ரோல் செஞ்சுடுமா?ங்கிற கேள்விக்கு எல்லாம் விடை இருக்கான்னு தெரியலையே என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டி விட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.
