வைஃபை ஆன் செய்ததும், ”தேர்தல் திருவிழான்னு வந்துட்டாலே அதிரிபுதிரி அறிவிப்புதான்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. கூட்டணி எல்லாம் முடிவாகலை.. அறிவிப்பு லெவலா?
எலக்ஷன்னாலே எல்லாமும்தானே.. நம்ம விருப்பத்துக்கும் அவசரத்துக்கும் எல்லாம் நடக்குமாய்யா.. பேச்சுவார்த்தை குழுவை 2 மாசத்துக்கு முன்னாடியே காங்கிரஸ் அறிவிச்சது.. திமுகவோ என்ன அவசரம்னு கேட்குது..
ஆமாய்யா.. 2021 எலக்ஷனில எப்ப பேச்சுவார்த்தை குழு போட்டது திமுக? ப்ளாஷ்பேக்கை சொல்லும்
போன எலக்ஷனில இந்த மாதிரி அவசரமெல்லாம் காட்டலையே.. 2021-ல் எலக்ஷன் டேட்ஸ் பிப்ரவரி 26-ந் தேதி அறிவிச்சாங்க.. அதே நாளில்லதான் திமுகவோட பேச்சுவார்த்தை குழுவும் அறிவிச்சாங்க. மார்ச் 7-ந் தேதிதான் காங்கிரஸுக்கு 25 தொகுதின்னு முடிவு செஞ்சு அறிவிக்கப்பட்டது.. ஏப்ரல் 6-ல் எலக்ஷன்; மே 2-ல் கவுண்ட்டிங்.. அதே பார்முலா மோடில்தான் திமுக இப்பவும் இருக்கு..
அதெல்லாம் சரி.. திமுக பேச்சுவார்த்தை குழுவுல யாரெல்லாம் இருக்க போறாங்களாம்?
2021-ல் திமுகவோட பேச்சுவார்த்தை குழு, டிஆர் பாலு தலைமையில போட்டிருந்தாங்க.. அதுல, கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன் , ஆர்.எஸ். பாரதி, எ.வ. வேலு இருந்தாங்க..
இந்த டைமும் இதே குழு சின்ன மாற்றத்துடன் இருக்குமாம்.. சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியில் இல்லாததால அந்த இடத்துல கனிமொழி இருப்பாங்களாம்.. இப்ப திமுகவோட தேர்தல் அறிக்கை குழுவும் கனிமொழி தலைமையிலதானே அமைச்சிருக்காங்க.. அதோட பேச்சுவார்த்தை குழுவிலும் இடம் கிடைக்கும்”ன்னு சொல்லுது அறிவாலயம்.
சரி.. ஏதோ அறிவிப்புன்னு சொன்னீரே?
ஆமாய்யா.. ஒரு மாநிலத்துக்கு எலக்ஷன் வந்துட்டாலே பிஎம் மோடி விடாம அந்த மாநிலத்துக்கு டூர் போறது, திட்டங்களை அறிவிக்கிறதை வழக்கமா வெச்சிருக்காரு.. அதுல ரொம்பவே ஒர்க் அவுட் ஆனதுதான் பீகார் பார்முலா..
பீகாரில்ல போன வருஷம் நவம்பர் 6,11-ன்னு ரெண்டு கட்டமா எலக்ஷன் நடந்துச்சு.. ஆனால் தேர்தலுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி, ”முக்யமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா- பிரதமர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்”னு ஒன்னை செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கி வைச்சாரு மோடி… அதுதான் பீகாரோட அரசியலையே தலைகீழா புரட்டி போட்டுச்சு..
அதாவது சுமார் 1.1 கோடி பெண்களுக்கு ரூ10,000 கடனாக தரும் திட்டம்தான் அது.. நேரடியாக பெண்களோட பேங்க் அக்கவுண்ட்டுல பணத்தை டெபாசிட் பண்ணிட்டாங்க..
எலக்ஷனுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி தொடங்கி வெச்ச திட்டம்னால ரொம்பவே எபகெட்டா இருந்துச்சு.. எலக்ஷன் நேரத்துல, உங்ககிட்ட கொடுத்த ரூ10,000-த்தை திருப்பி தரவும் வேணாம்னு நிதிஷ் ஆட்கள் பிரசாரம் செய்ய பெண்கள், ஓட்டுகளை அள்ளி பாஜக கூட்டணிக்கு போட்டுட்டாங்க..
அதே பார்முலாவைத்தான் தமிழ்நாட்டுக்கும் மோடி அப்ளை செய்ய போறாராம்..
ஓஹோ.. எப்ப மோடி வர்றாராம்?
மார்ச் 1-ந் தேதி மதுரைக்கு வர்றாரு மோடி.. இதை பத்தி பாஜக தரப்புல விசாரிச்சப்ப, “மதுராந்தகத்துக்கு ஜனவரி 23-ந் தேதி மோடிஜி வந்தப்ப கூட்டணி லீடர்ஸை ஆர்கனைஸ் செஞ்சிருந்தோம்.. இப்ப பார்ட்டியில ‘பட்டி டிங்கரிங்’ வேலை நடந்துகிட்டு இருக்கு.. மதுரைக்கு மோடிஜி மார்ச் 1-ந் தேதி வர்றாரு.. அன்னைக்கு பாருங்க.. எப்படி எல்லாம் அறிவிப்பு வரும்னு” என்கின்றனர்.
அப்படி என்ன மோடி அறிவிக்கப் போறாருன்னு விசாரிச்சப்பதான், “பீகாரில்ல பெண்களுக்கு ரூ10,000 கொடுத்த மாதிரி ”மோடி பணம் ரூ10,000” உங்க அக்கவுண்ட்டுக்கு வரும்னு அதே திட்டத்தை இங்கேயும் அறிவிக்க இருக்கிறார்” என்கின்றனர் பாஜக சீனியர்ஸ்.
இந்த தகவல் சிஎம் ஸ்டாலினுக்கும் போனதால மோடிக்கு செக் வைக்க செம்ம ஸ்கெட்ச் போட்டிருக்கிறாருன்னு செக்கரெட்டரியேட் ஆபீசர்ஸ் சொல்றாங்கப்பா..
அடடே.. நல்லா இருக்கே.. சிஎம் என்ன அறிவிக்க போறாராம்?
இதை பத்தி மூத்த அமைச்சர்கள்கிட்ட நாம பேசுனப்ப, ”சட்டசபையில இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17-ந் தேதி தாக்கலாகுது.. அதுல மாவட்ட வாரியா பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம்.. ஆனாலும் ரொம்ப முக்கியமா, பெண்களுக்கு ரூ.5,000 கடன் வழங்குற திட்டம் பத்தின அறிவிப்பும் இருக்கும்.. ஏற்கனவே பெண்களுக்கு இலவச பேருந்து, மாசம் ரூ1,000 திட்டம் எல்லாம் ரொம்பவே ஒர்க் அவுட் ஆகியிருக்குது.. இப்ப இந்த ரூ5,000 கடன் திட்டம் பெரிய அளவுல எலக்ஷனில எங்களுக்கு கை கொடுக்க போகுது”ன்னு நம்பிக்கையா சொல்றாங்கன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
