வைஃபை ஆன் செய்ததும், “பொறுமைக்கும் எல்லை உண்டுதானே” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
யாரோட பொறுமையை யாரு சோதிக்கிறதாம்?
ரொம்பவே ஆர்வமா இருக்கிறீரு.. திமுக- காங்கிரஸ் பத்திதான்.. இந்தியா டுடே மீட்டிங்குல பேசுன சிஎம் ஸ்டாலின், ”தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் (காங்கிரஸுக்கும்) தெரியும். அது இடையில் சில பேர் கிளப்பிவிடும் பிரச்சினை. கூட்டணியில் ஏதேனும் முறிவு ஏற்படுமா.. என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை. அவரும் (ராகுல் காந்தி) கவலைப்படவில்லை” என சொல்லி இருந்தார்.
அதே மாதிரி, “ராகுலைப் பொறுத்தவரைக்கும் அரசியலைத் தாண்டி, ஒரு மூத்த சகோதரராக என்னைப் பார்க்கிறார். நானும் அவரை சகோதரராகத்தான் பார்க்கிறேன். அரசியலைத் தாண்டி சொல்கிறேன். குடும்பத்தில் ஒருவர் போன்று என்னை அவர் கருதுகிறார். நானும் அப்படிதான் கருதுகிறேன்”ன்னும் ராகுல் காந்தியை பத்தி நெகிழ்ச்சியாக சொல்லி இருந்தார் சிஎம் ஸ்டாலின்.
காங்கிரஸ் வைச்ச ’ஆட்சியில பங்கு’ டிமாண்டை வெளிப்படையாக ஏத்துக்கலைன்னு சிஎம் அறிவிச்சுட்டாரு.. அதே நேரத்துல ராகுல் காந்தியை பற்றி ரொம்பவே பாசிட்டிவ்வாவும் சென்டிமெண்ட்டாவும் பேசியிருந்தாரு.. சிஎம் பேசுனதை கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் பாராட்டி இருந்தாங்க..
காங்கிரஸ் சீனியர்ஸ் சிலரு, ஸ்டாலின் என்ன சொன்னாருன்னு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராகுல் காந்திக்கும் கார்கேவுக்கும் அனுப்பியும் வைச்சாங்க..
இதனால திமுக- காங்கிரஸ் ரிலேஷன்ல சுமூகமான நிலைமை வர்ற மாதிரி இருந்துச்சு..
அப்ப யாருய்யா குறுக்குசால் ஓட்டிவிட்டது?
குறுக்குசால் மட்டுமா ஓட்டுனாங்க.. குழிதோண்டி புதைச்சுட்டாங்கன்னுதான் காங்கிரஸிலேயே சீனியர்ஸ் கோபமா இருக்காங்க.. வேறு யாருமில்லை.. மாணிக்கம் தாகூர்தான், ஆட்சியில பங்கு என்பது ஒத்துவராதுன்னு சிஎம் பேசி முடிச்ச உடனேயே “மக்கள் முடிவு செய்வார்கள் . கூட்டணி ஆட்சியா்? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை 2006யில் மக்கள் தீர்பை செயல்படுத்தாதது நம் @INCTamilNadu தவறு” -ன்னு ட்வீட் போட்டிருந்தாரு..
அதாவது, ஒரு கட்சி ஆட்சி வரவிடாம உள்ளடி வேலை பார்த்துடுவோம்னு மிரட்டுற மாதிரி மாணிக்கம் தாகூர் ட்வீட்டோட டோன் இருந்துச்சு..
அதே மாதிரி பிரவீன் சக்கரவர்த்தியும் “ மற்ற மாநிலங்கள் மாதிரியே தமிழக மக்களும் கூட்டணி ஆட்சியைத்தான் விரும்புறாங்க.”ன்னு சொன்னதோடு, “போலியான தனித்துவம் அப்படிங்கிற பேருல ஏன் ஒளியனும்?”னு கேட்டு திமுகவை ரொம்பவே சீண்டிவிட்டாரு…
ஓ.. இப்ப திமுகவோட ரியாக்ஷன் என்னவாம்?
அதான் மேட்டரே.. கேளுமய்யா.. சிஎம் பேசுன ”ஆட்சியில பங்கு இல்லை; ராகுல் பிரதர்”னு பேசுன ரெண்டு விஷயத்துக்குமே காங்கிரஸ் மேலிடத்துல இருந்து ஒரு ரியாக்ஷனும் வரலை..
அதே மாதிரி சிஎம் பேசுனத்துக்கு கவுண்ட்டர் கொடுத்துகிட்டே குழப்படி வேலை செஞ்ச ரெண்டு பேரையும் காங்கிரஸ் மேலிடம் கண்டிக்கவும் இல்லை…
இதுதான் இப்ப சிஎம் ஸ்டாலினை ரொம்பவே கோபப்பட வெச்சிருக்கு…” என்கின்றனர் திமுக சீனியர்ஸ்.
அத்துடன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கூப்பிட்டு சிஎம் ஸ்டாலின் கடுமையாக பேசிட்டாராம்.. இதை பத்தி திமுக சீனியர்ஸ்கிட்ட கேட்டப்ப, “செல்வப்பெருந்தகைகிட்ட கோபமாகவே சிஎம் பேசுனாரு.. அவர்கிட்ட “என்ன இப்படி பண்றீங்க? உங்க ஆளுக இவ்வளவு பேசிகிட்டு இருக்காங்க.. அகில இந்திய தலைமை இதுவரைக்கும் அவங்களை கூப்பிட்டு கண்டிக்கவும் இல்லையே? உங்க முடிவுதான் என்னான்னு வெளிப்படையாகவே சொல்லிடுங்க..”ன்னும் சிஎம் சொன்னாரு” என்றனர்.
அத்துடன் தமக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய சிஎம், “சரி.. அவங்க (காங்கிரஸ்) என்ன முடிவும் எடுக்கட்டும்.. காங்கிரஸ் வெளியே போனா நாம என்ன செய்யலாம்னு பிளான் பண்ணனும்.. 2011-ல் 63 சீட்டை வாங்கிட்டுப் போனது காங்கிரஸ்.. அப்ப 5-ல்தான் ஜெயிச்சாங்க.. அதுல முக்கியமான விஷயமே.. காங்கிரஸ் அடம்பிடிச்சு கேட்டு வாங்குன 63-ல் 55 தொகுதிகளில்ல அதிமுகதான் ஜெயிச்சது.. அந்த எலக்ஷனில்ல ஜெயலலிதாவுக்கு 80 அல்லது 85 சீட்தான் கிடைக்கும்னே எல்லா சர்வே ரிப்போர்ட்டும் சொல்லிகிட்டு இருந்துச்சு.. காங்கிரஸ் 63 சீட் வாங்கினதுக்கு அப்புறமா காங்கிரஸ் தொகுதிகளாப் பார்த்து ஜெயலலிதா ஏடிஎம்கே கேண்டிடேஸ் போட்டு ஈஸியாக ஜெயிச்சுட்டாங்க..
காங்கிரஸ் நம்ம கூட வந்தாலும் நாம ரொம்ப கேர்புல்லாதான் இருக்கனுங்கிறதும்தான் ரொம்ப முக்கியம்னு” சொல்லி இருக்காரு.
காங்கிரஸில் இருந்து ஏதாவது ரிப்ளை வந்திருக்காய்யா?
ம்ஹூம்.. காங்கிரஸ் மேலிடம் எதுவுமே பேசாமதான் இருக்கு.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் போன்ற பல சீனியர்ஸுமே திமுக கூட்டணியிலதான் காங்கிரஸ் தொடரும்னு நினைக்கிறாங்க.. ராகுலை சுத்தி இருக்கிறவங்கதான் சீண்டிவிட்டுகிட்டு இருக்காங்க..
திமுகவுக்கு இவ்வளவு குடைச்சல் கொடுக்கிற் பிரவீன் சக்கரவர்த்தியை ராகுல் காந்தி நேத்துகூட அழைச்சு பேசியிருக்காரு.. சோனியா காந்தி வீட்டுல இருக்கிற ஆபீஸ்ல்தான் பிரவீனை கூப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருக்காரு..
சரிய்யா.. திமுக அடுத்ததாக என்ன செய்ய போகுதாம்?
திமுக சீனியர் எம்.பிகள்கிட்ட பேசுனப்ப, ”கோபமாகவே இருக்கும் சிஎம், தெளிவான முடிவை காங்கிரஸ் மேலிடத்துகிட்ட இருந்து தெரிஞ்சுக்க ராகுல் காந்தி கிட்ட மறுபடியும் பேசுங்கன்னு கனிமொழி எம்.பி.கிட்ட சொல்லி அனுப்பி இருக்காரு..
ராகுல் காந்திகிட்ட இந்த டைம் பேசும் போது, ”ஆட்சியில பங்கு இல்லை’ங்கிறதுல உறுதியாக இருக்கிறோம்னு சொல்லனும்; அதே மாதிரி காங்கிரஸுக்கு 28 முதல் 30 சீட்தான் அதிகபட்சமா தர முடியும்னு சொல்லிடனும்.. இதுதான் எங்க ஸ்டேண்ட்.. உங்க ஸ்டேண்ட் என்னான்னு கேட்டு கிளியரான பதிலை வாங்கிடனும்”னு கனிமொழி எம்.பி.கிட்ட சிஎம் ஸ்டாலின் சொல்லி அனுப்பி இருக்காரு..” என்கின்றனர்.
ஆக இப்ப திமுக- காங்கிரஸ் கூட்டணியை முடிவு செய்யுற பந்து ராகுல் காந்தி கிட்ட இருக்குது.. ராகுல் காந்தி- கனிமொழி சந்திப்புக்குப் பின்னாடிதான் தமிழக எலக்ஷன் களத்துல என்னவெல்லாம் நடக்கப் போகுதுன்னு கிளியர் பிக்சர் கிடைக்கும்..அதுவரைக்கும் திக்.. திக். திக்தான்யா.. என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
