டிஜிட்டல் திண்ணை: ‘சின்னய்யா’ கெட் அவுட்.. இனி எல்லாமே ‘பெரிய அக்கா’.. ராமதாஸ் வீட்டில் வலுவான அதிகார மையம்!

Published On:

| By vanangamudi

digital thinnai sri gandhi take power instead of anbumani

வைஃபை ஆன் செய்ததும், “மாம்பழ தோட்டத்துல புயல் ஓயவே இல்லையப்பா” என சொல்லியபடி டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

பாமகவில் அடுத்த பஞ்சாயத்தா?

ADVERTISEMENT

பஞ்சாயத்து என்பதைவிட புதிய அதிகார மையம் வலுவாக நிலை கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லனும்..

ஓஹோ..

ADVERTISEMENT

பாமகவில் அப்பா ராமதாஸ்- மகன் அன்புமணி இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ரொம்பவே தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ராமதாஸ் மூத்த மகள் ஶ்ரீ காந்தி. இவரது மகன்களில் ஒருவரான ப்ரீத்தீவன், அன்புமணியின் மருமகன். மற்றொரு மகன் முகுந்தனைத்தான் பாமக இளைஞரணித் தலைவராக்கினார் ராமதாஸ். அதுதான் பிரளயத்துக்கே பிள்ளையார் சுழி போட்டது. இன்னொருவர் பெயர் சுகந்தன்.

தைலாபுரம் தோட்டத்திலும் பாமகவிலும் ராமதாஸுக்கு அடுத்து என்ற இடத்தில் இருந்தவர் ‘சின்னய்யா’ அன்புமணிதான். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே மோதல் வெடித்து, பஞ்சாயத்து பேச்சுவார்த்தை எதுவும் கை கொடுக்காமல் போய், பிளவு ‘நிரந்தரமானது’ என்ற நிலைமை உருவாகிவிட்டது..

ADVERTISEMENT

இந்த தருணத்தில் பாமகவின் புதிய அதிகார சக்தியாக மையம் கொள்ள தொடங்கினார் ஶ்ரீகாந்தி.

ஒரு மாதத்துக்கு முன்பாக பாமகவின் செயற்குழு கூட்டத்தைக் கூட்டினார் ராமதாஸ். அப்போது அன்புமணியுடனான மோதல் உச்சத்தில் இருந்தது. இந்த செயற்குழுவுக்கு ஶ்ரீகாந்தியும் வந்திருந்தார். மேடையில் கீழே அமர்ந்திருந்த காந்தி, வலுக்கட்டாயமாக மேடையில் அமரவைக்கப்பட்டார். அப்போது, “அய்யாதான் வர சொல்றார்..வாங்க அக்கா” என பாமக நிர்வாகிகள் சொல்ல, “இல்ல இங்கேயே இருக்கேன்” என காந்தி சொல்ல கடைசியாக ஒருவழியாக பாமகவின் மேடையேறினார்.

அப்போதிருந்தே ராமதாஸை சந்திக்க தைலாபுரம் தோட்டத்துக்கு செல்லும் பாமக நிர்வாகிகள், மறக்காமல் ‘அக்கா’ காந்தியையும் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

இதன் பின்னர் பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் பெருவிழாவில், காந்திதான் முதல் தீர்மானத்தையே வாசித்தார். இதனால் காந்திக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகிறோம் என்பதை ராமதாஸ் கட்சியினருக்கு தெள்ள தெளிவாகவே உணர்த்தினார்.

அடுத்த கட்டமாக பாமகவின் மிக முக்கியமான பொதுக்குழு ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், பாமகவில் நிர்வாக ரீதியாக எந்த பதவியிலும் இல்லாத காந்தி, மேடையில் அமர வைக்கப்பட்டார். இதை மனம் குளிர தந்தை ராமதாஸ் ரசித்துக் கொண்டிருந்தார்.

‘தாத்தா’ ராமதாஸுடன் ஒருகட்டம் வரை காந்தியின் மகன் முகுந்தன் நெருக்கம் காட்டினார்.. அன்புமணி கோபத்தை கொட்டிவிட்ட பின்னர், ஆளைவிட்டால் போதும் என ஒதுங்கிக் கொண்டார்..

இப்போது மகள் காந்தியை மேடையேற்றிய ராமதாஸ், இன்னொரு பேரனான காந்தியின் மகன் சுகந்தனையும் பாமகவில் முன்னிறுத்த விரும்புகிறாராம்.

பாமக பொதுக்குழுவின் போது சுகந்தனையும் ‘தாத்தா’ ராமதாஸ் மேடைக்கு அழைத்தார். சுகந்தனோ, ‘நீங்க மேடையில் இருக்கும் போது நானும் இருந்தா நல்லா இருக்காது” என அம்மா காந்தியின் காதில் கிசுகிசுத்து விட்டு கீழே இறங்கிவிட்டார்..

தைலாபுரத்தில் ‘சின்னய்யா’ அன்புமணிக்கு பதில் ‘அக்கா’ காந்தியை சம்பிராதயமாக சந்திக்க தொடங்கிய பாமக நிர்வாகிகள், இனி புதிய அதிகார மையம் ‘அக்கா’தான் என நம்புகின்றனர்..

“நம்ம கூட பேசிகிட்டே இருந்துட்டு இப்ப நம்ம இடத்தையே ஆக்கிரமிக்கிறாங்களா?” என ‘அக்கா’ காந்தி மீது அன்புமணி தரப்பு செம்ம கடுப்பாம்..

சரி.. அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை என்றெல்லாம் சொல்லப்படுகிறதே?

ராமதாஸ் நடத்திய பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில், 8 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் விசாரிக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறியது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள்,முன்னாள் வந்தவாசி எம்பி துரை, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், நிர்வாக குழு உறுப்பினர் நெடுங்கீரன், ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ம.க.ஸ்டாலின், சேலம் ‘ஸ்டீல்’ சதாசிவம், மாநில துணை செயலாளர் திருமலை குமாரசாமி யாதவ், பானுமதி சத்யமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுதான் இன்று கூடி ஆலோசனை நடத்தியது. அன்புமணி பதிலளிக்கவும் இந்த குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதுபற்றி அன்புமணி தரப்பில் நாம் பேசிய போது, “ராமதாஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு நோட்டீஸும் எங்களுக்கு வரவில்லை. அப்படி வந்தால் சட்டப்படி சந்திப்போம்.. அதில் எல்லாம் தயக்கம் இல்லை.

இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அடுத்த ஆண்டு வரை அன்புமணிதான் பாமக தலைவர். அப்படி இருக்கும் போது, பாமகவில் இருந்து தலைவர் அன்புமணியால் நீக்கப்பட்ட சேலம் அருளையும் உள்ளடக்கிய குழு ஒரு நோட்டீஸ் அனுப்பும் என்றால் அது எப்படி செல்லுபடியாகும்? இதை எப்படி ஏற்க முடியும்? எல்லாவற்றையும் சட்டப்படி சந்திப்போம்” என சவால்விடுக்கின்றனர் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share