வைஃபை ஆன் செய்ததுமே, “போக.. போக.. தெரியும்..” என டாக்டர் ராமதாஸ் போலவே பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். digital thinnai ramadoss filed case against anbumani
‘அலைகள் ஓய்வதில்லை’ என்பது அப்பா- மகன் மோதலுக்குதான் பொருத்தம் போல..
ஆமாம்.. ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாஜகவின் அதிகார மையமான துக்ளக் குருமூர்த்தியும் மூத்த அரசியல் தலைவர் சைதை துரைசாமியும் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அந்த முயற்சிகள்தான் பலன்தரவில்லை.
இதன் பின்னரும் அப்பா- மகன் இடையேயான பஞ்சாயத்து இடைவிடாமல் முட்டி மோதிக் கொண்டே இருக்கிறது..
இந்த சூழ்நிலையில் பாமக மூத்த தலைவர் ஏகே மூர்த்தி இல்ல திருமண விழாவுக்காக ராமதாஸும் அவரது மனைவி சரஸ்வதி அம்மையாரும் ஒரே காரில்தான் சென்னை வந்தனர்.
டாக்டர் ராமதாஸ் மகள் வீட்டுக்கும், சரஸ்வதி அம்மையார் மகன் அன்புமணியின் பனையூர் பங்களாவுக்கும் விசிட் அடித்தனர். பையனூர் பங்களாவில் சரஸ்வதி அம்மையார் காரில் இருந்து இறங்கியது முதல் வீட்டை விட்டு புறப்பட்டு காரில் ஏறும் வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து ‘நெகிழ்ச்சி’ காட்சிகளுடன் ரிலீஸ் செய்தது அன்புமணி தரப்பு.

ஏகே மூர்த்தி இல்ல திருமண நிகழ்ச்சியிலும் கூட பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணியை மட்டும் சந்தித்து பேசிய அன்புமணி, ராமதாஸை நேருக்கு நேராக சந்திப்பதை தவிர்த்துவிட்டார்.
இப்போது மீண்டும் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பஞ்சாயத்தை எப்படியாவது முடித்து வைத்துவிடுவது என விடாப்பிடியாக தீவிரம் காட்டுகிறதாம் பாஜக தரப்பு.
ராமதாஸைப் பொறுத்தவரையில், பாமகவின் ‘செயல் தலைவர்’ பதவியை ஒப்புக் கொண்டு அன்புமணி தைலாபுரத்துக்கு வரட்டும்.. எல்லாவற்றையும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அன்புமணி குடும்பமோ, “அதெல்லாம் முடியாது.. பாமக தலைவர் பதவியை விட்டுத் தரவே முடியாது” என பிடிவாதம் காட்டுகிறதாம்.
இப்படி அடம் பிடிக்காமல், “செயல் தலைவர் பதவியை இப்போதைக்கு ஏற்றுக் கொண்டு சமாதனாமாகப் போய்விட்டால் அடுத்த ஓரிரு மாதங்களிலேயே ராமதாஸ் இறங்கி வந்துவிடுவார்.. எல்லாமே சுமூகமாக போய்விடும்தானே” என ராமதாஸ் குடும்பத்தின் நலன் விரும்பிகள், அன்புமணி குடும்பத்துக்கு அட்வைஸ் செய்துள்ளனர்.
“எந்த ஒரு சமாதானத்தையுமே ஏற்க முடியாது” என்பதில் அன்புமணி குடும்பம் உடும்புப் பிடியாக இருப்பதால் ராமதாஸ் அதிரடி அஸ்திரங்களை ஏவி வருகிறார்.
அப்படி எல்லாம் அன்புமணி அடம்பிடித்து கொண்டிருந்தால், “பேசாமல் அன்புமணி தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளட்டும்.. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்” என வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லி விட்டாராம் ராமதாஸ்.
அடுத்ததாக ராமதாஸ் ஏவியிருக்கும் இன்னொரு அஸ்திரம்தான் அன்புமணியை ஆடிப் போக வைத்துவிட்டதாம்.

அப்படி என்ன அஸ்திரத்தை ஏவி இருக்கிறாராம்?
இது பற்றி பாமக வட்டாரங்களில் நாம் பேசிய போது, “பாமகவின் தலைமை நிலையச் செயலாளர் எம் அன்பழகன் பெயரில் விழுப்புரம் எஸ்பி சரவணன் ஐபிஎஸ் மற்றும் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோரிடம் புகார் மனு தரப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், பாமக நிறுவனர்- தலைவர் டாக்டர் ராமதாஸின் அலுவலக இல்லத்தில் கடந்த ஜூலை 9-ந் தேதி இரவு 6.30 மணியளவில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததை அலுவலகப் பணியாளர்களும் உறவினர்களும் கண்டுபிடித்தனர். அலுவலக நாற்காலிகளை சுத்தம் செய்த போது இந்த ஒட்டு கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி எனக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து எங்களது கட்சி தொண்டர்கள் அங்கு சென்று பார்த்த போது, பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கமாக அமரும் இருக்கையில் (சோபா) அந்த கருவி பொருத்தப்பட்டிருந்ததை உறுதி செய்தனர்.
இதனால் எங்கள் கட்சி நிறுவனர்- தலைவர் இல்லத்தில் முழுமையாக சோதனை நடத்தி, வேறு இடங்களில் இத்தகைய ஒட்டுக் கேட்பு கருவிகளை சமூக விரோதிகள் ரகசியமாக பொருத்தி இருக்கின்றனரா? என்பதை கண்டுபிடித்து தர வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டப்பூர்வமான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள வேண்டும்; மேலும் பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என அன்பழகன் குறிப்பிட்டுளார் என்கின்றனர்.
தமது வீட்டில் பத்திரிகையாளர்கள்தான் ஒட்டு கேட்பு கருவியை வைத்திருக்கலாம் என்று கூட ராமதாஸ் கூறியிருந்தார். தற்போது போலீசில் புகார் கொடுத்து விவகாரத்தை ரொம்பவே சீரியஸாக்கிவிட்டார் ராமதாஸ்.
ராமதாஸ் தரப்பில் இருந்து இப்படி புகார் கொடுக்கப்பட்ட தகவல் கிடைத்ததுதான் தாமதம்.. உடனே அன்புமணி தரப்பில் இருந்து தாயார் சரஸ்வதி அம்மையாருக்கு இடைவிடாத போன் அழைப்புகளாம். “இப்ப எதுக்கு போலீஸுக்கு போகனும்.. பேசிக்கலாம்” என ரொம்பவே பதற்றப்பட்டு பேசுகிறதாம் அன்புமணி குடும்பம்.

சரி.. போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
ராமதாஸ் வீட்டில் சோதனையிடுங்க சார் என்ற இந்த புகார் காவல்துறை வட்டாரங்களிலும் திகைப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திவிட்டதாம்.
இதுபற்றி காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவிகள் இருக்கிறதா என சோதனையிடுங்க என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மிக மூத்த அரசியல் தலைவர் வீட்டில் எப்படி சோதனை நடத்த முடியும்? அதனால் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு காவல்துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இந்த புகாரில் என்னவெல்லாம் கூறப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை முழுமையாக கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், “ஒட்டு கேட்கும் கருவியை யார் வைத்தது என ராமதாஸ் தரப்பு சொல்கிறது?” என்றும் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு, “உள்ளூர் போலீசார் நடத்திய விசாரணையில், தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி குடும்பம்தான் ஒட்டு கேட்பு கருவியை வைத்ததாக தெரியவந்துள்ளது” என விவரித்திருக்கின்றனர்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. யோசித்துவிட்டு சொல்கிறேன்” என கூறியிருக்கிறார் என்கின்றன.
பாமகவின் நிறுவனர் ராமதாஸ்- மகன் அன்புமணி இடையேயான மோதலில் தாமாகவே பஞ்சாயத்து செய்ய நுழைந்தது பாஜக. காலம்தான் விசித்திரமானது.. இப்போது, அப்பா- மகன் இடையேயான உச்சகட்ட மோதலின் க்ளைமாக்ஸ் முதல்வர் ஸ்டாலின் கைகளுக்கு தானாகவே போய் இருக்கிறது… இதில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கப் போகும் முடிவு என்ன? என்பதுதான் அரசியல் களத்தை மட்டுமல்ல.. அன்புமணி வட்டாரங்களையும் ‘கிலி’பிடிக்க வைத்துள்ளது..
ஆமாம்.. ஆமாம்.. எல்லாம் போக போக தெரியும் என மீண்டும் ராமதாஸ் பாணியில் பாடியபடியே டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.