வைஃபை ஆன் செய்ததும், ”தென்னாடுடைய சிவனே போற்றி” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. ஏதோ மஹா சிவராத்திரி ஸ்பெஷல் மாதிரி இருக்கே..
அதேதான்.. கோவை ஈஷா யோகா மையத்துல மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிமுக எஸ்பி வேலுமணி, தேமுதிக பிரேமலதா..ன்னு எல்லாரும் சங்கமமாகி இருந்தாங்க.. அதனால “பாஜக-அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது கன்ஃபார்ம்”னு பேசுறாங்க..

ஓஹோ.. அதிமுக- தேமுதிக பேச்சுவார்த்தை முடிஞ்சிருச்சா ?
கோவை ஈஷா மையத்துல என்ன நடந்ததுன்னு நாம விசாரிச்ச ஷேர் செய்யுறேன்.. காதை தீட்டி வெச்சுக்கோய்யா..

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேத்து ஈஷா மையத்துல தங்கி இருந்த ப்ளாக்லதான் பிரேமலதாவும் இருந்தாங்க..
ஆனா பிரேமலதா உள்ளே வரும் போது சாயங்காலம் 4.15 மணி.. அப்ப ராஜ்நாத் சிங் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்ச்சிக்கு கிளம்பி போனாரு..

பிரேமலதாவைப் பொறுத்தவரைக்கும் இப்ப மட்டும் ஈஷாவுக்கு வர்றவங்க இல்லை.. கடந்த 2 வருஷமாக ஈஷா மையத்துக்கு சிவராத்தி நாளில் வர்றது வழக்கம்.. இடையிலதான் ஒரு வருஷம் அவங்க வரலை..
நைட்டுல டின்னர் அப்ப ராஜ்நாத் சிங், எஸ்பி வேலுமணி, பிரேமலதா எல்லாம் ஒன்னாதான் சாப்பிட்டாங்க.. சர்க்கரை பொங்கலும் சாம்பார் சாதமும் டின்னரா கொடுத்திருத்தாங்க..
அதே மாதிரி ஜக்கிவாசுதேவ் மாலை, சால்வை அணிவிக்கிறப்ப எஸ்பி வேலுமணி பக்கத்துல பிரேமலதா இருந்தாங்க.. சில நியூஸ்கார்டுகளை எஸ்பி வேலுமணிகிட்ட காண்பிச்சு பிரேமலதா சிரிச்சும் பேசிகிட்டு இருந்தாங்க.. ரொம்ப இயல்பாத்தான் பேசிகிட்டு இருந்தாங்க..
இப்படி சூழ்நிலை இருந்தும் அங்கே யாரும் ஒன் டூ ஒன்னா எதுவுமே பேசிக்கலைங்கிறாங்க..
இன்னொன்னு ராஜ்நாத் சிங், இந்த கூட்டணி விவகாரங்கள் எல்லாம் பேசுறவரு இல்லை.. அதெல்லாம் அமித்ஷா டிபார்ட்மெண்ட்ன்னும் சொல்றாங்க..
அதே இடத்துல பொள்ளாச்சி திமுக எம்பி ஈஸ்வரமூர்த்தி இருந்தாரு.. கோவை திமுக மா.செ. ரவி இருந்தாரு..

ஓ… விஜய் அம்மா கூட அங்க வந்திருந்தாங்களாமே?
ஆமாய்யா.. விஜய் அம்மா ஷோபா, ஈஷாவுக்கு வந்து 30,40 நாட்களாகப் போகுது.. ஷோபாவுக்கும் ஈஷாவுக்குமான பந்தம் 30 வருஷத்துக்கும் மேல நீடிக்குது.. இந்த ஒரு மாசத்துல அவசரம்னு ரெண்டு நாள்தான் ஷோபா சென்னைக்கு போனாங்களாம்.. அதுக்கு அப்புறமா ஈஷாவுக்கே ரிட்டர்ன் ஆயிட்டாங்க..
இன்னைக்கு சாயங்காலம் 5 மணி வரைக்கும் பிரேமலதா ஈஷாவுலதான் இருந்தாங்க.. அங்கே லிங்க பைரவிக்கு நடந்த சிறப்பு பூஜைகளில்ல கலந்துகிட்டாங்க..
தியானலிங்கத்துக்கு முன்னாடியும் உட்கார்ந்து தியானம் செஞ்சும் வழிபட்டாங்க..
ஆதி யோகி சிலை முன்னாடி அமர்ந்து ரொம்ப நேரமாக தீவிரமாக தியானத்துல இருந்துட்டுதான் பிரேமலதா கிளம்புனாங்க.. அதாவது “கூட்டணி” பற்றி ஒரு முடிவு எடுத்த மாதிரிதான் ஈஷாவில் இருந்தே பிரேமலதா புறப்பட்ட மாதிரி இருந்துச்சு..அதனால வர்ற நாட்களில் பரபரப்பான செய்திகளை பிரேமலதா அறிவிக்கலாம்னு டைப் செய்துவிட்டு சென்பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
