வைஃபை ஆன் செய்ததும், “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே” என்ற பாடலை ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. பெருமூச்சுவிட்டு பாடுற மாதிரி இருக்கே..
நமக்கு எதுக்குய்யா பெருமூச்சு.. இன்னைக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணியில கிளைமாக்ஸ் பேச்சுவார்த்தை நடக்கப் போகுதே… அங்கதான் பெருமூச்சு சப்தம் கேட்கும்..
ஓஹோ.. ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்திச்சு பேசுனத்துக்கு அப்புறம் புது தகவல் இருக்குதா?
நிறையவே இருக்கே.. செல்வப்பெருந்தகை மகளோட திருமண நிச்சயதார்த்தம் நேத்து நைட் நடந்துச்சு.. இதை வெச்சுகிட்டுதான் ப.சிதம்பரத்துடன் ஸ்டாலினை சந்திக்கிறதுல பகல் முழுக்க பிஸியா இருந்தாரு செல்வப்பெருந்தகைன்னு கூட சோசசியல் மீடியாவுல எழுதி இருந்தாங்க..

இந்த பங்ஷனுக்கு சிஎம் ஸ்டாலின், கனிமொழி எல்லாம் போயிருந்தாங்க.. அந்த நேரத்துல ப.சிதம்பரமும் அங்க வந்தாரு.. எல்லோரும் ஒன்னா நின்னுபோட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு கலகலப்பா பேசிகிட்டு இருந்தாங்க..
அப்படியே ஸ்டாலின்- கனிமொழி- ப.சிதம்பரம் மூணுபேரும் தனியாக ஒதுங்கி நின்னுகிட்டு சூப் குடிச்சபடியே சீரியஸ் டிஸ்கஷன் நடத்தினாங்க..
ஸ்டாலின் முதல்ல ப.சிதம்பரத்தை பார்த்து, “இன்னைக்குள்ள தகவல் சொல்றேன்னு சொன்னீங்களே.. ஏதாவது தகவல் வந்ததா?”னு கேட்டாரு…

இதுக்கு ப.சிதம்பரம், “நிச்சயம் நல்ல தகவல் வரும்.. 30 சீட் வேணும் அப்படிங்கிறதுல ஹைகமாண்ட் உறுதியா இருக்கு” என்றார்.
அப்ப ஸ்டாலின் ஒரு கால்குலேஷன் சொன்னார்.. “நீங்க 30 சீட் வேணும்னு சொல்றீங்க.. மொத்தம் 234 சீட் இருக்கு.. உங்களுக்கு 30 சீட் கொடுக்கிறோம்னு இருக்கட்டும்.. நாங்க 170 தொகுதிகளில்ல போட்டியிடனும் நினைக்கிறோம்.. அப்ப கூட்டணி கட்சிகள் அத்தனைக்கும் சேர்த்து மொத்தமே 34 சீட்தானே கொடுக்க முடியும்? அப்படி கொடுக்கவும் முடியாதுதானே”ன்னு விலாவாரியா சொன்னாரு ஸ்டாலின்.
விடாமல் பேசிய ப.சிதம்பரம், ”நீங்க நினைச்சா அட்ஜஸ் செய்ய முடியும்.. நீங்க செய்யலாம்” என்று சொன்னார்.
இதுக்கு ஸ்டாலின், “சரி.. உங்க பேச்சுவார்த்தை குழுவை நாளைக்கு (இன்று) அறிவாலயத்துக்கு வர சொல்லிடுங்க.. நான் எங்க குழுவுக்கு என்ன இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்கனுமோ கொடுத்துடறேன்”ன்னு சொல்லிட்டாரு.
இந்த டிஸ்கஷன் முடிஞ்சு ஸ்டாலின், கனிமொழி கிளம்புன பிறகு செல்வப்பெருந்தகையை ப.சிதம்பரம் கூப்பிட்டு பேசுனாரு.. அப்ப, “பேச்சுவார்த்தை குழுவை அறிவாலயத்துக்கு காலையில வர சொல்லி இருக்காரு ஸ்டாலின்.. பேச்சுவார்த்தை குழுகிட்ட இப்ப வரைக்கும் என்ன நடந்துருக்கு.. திமுகவோட பதில் என்ன எல்லாத்தையும் அப்டேட் செஞ்சு சொல்லிடுங்க.. காலையில போய் பேசிடுங்க”ன்னு ‘மகிழ்ச்சியா’கவே சொன்னார் ப.சிதம்பரம்..

இதுக்க்கு அப்புறமா, ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக டிகேஎஸ் இளங்கோவனும் அறிவாலயத்துக்கு காங்கிரஸ் குழு பேச வருதுன்னு நேத்து நைட்டே அறிவிச்சுட்டாரு..
30 தொகுதிகளில் வந்து நிற்கும் காங்கிரஸுக்கு 29 தொகுதிகளை திமுக கொடுக்கும்னு எதிர்பார்க்கிறாங்க.. பேச்சுவார்த்தை குழுவுல இருக்கிற கிரிஷ் சோடங்கர் இன்னும் சென்னைக்கு ப்ளைட் டிக்கெட் போடலை.. அவரு இல்லாமலேயே பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்கவும் வாய்ப்பிருக்கிறதுன்னு சொல்றாங்க என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
