டிஜிட்டல் திண்ணை: திடீர் உத்தரவால் திணறும் திமுக உறுப்பினர் சேர்க்கை! – புதுச்சேரியில் ‘முதல்வர்’ ஸ்டிரைக்!

Published On:

| By christopher

Digital thinnai : oraniyil tn hampered by sudden order!

வைஃபை ஆன் செய்ததும் ‘ரொம்பவே கறாராக’ இருக்கிறதே கட்சித் தலைமை என்ற பூடகமாக பேசியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

எந்த கட்சி தலைமை ‘ஸ்கூல் ஹெட்மாஸ்டர்’ போல ஸ்டிரிக்ட்டாக இருக்கிறதாம்?

ADVERTISEMENT

திமுகதான்… ‘ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தின் கீழ் உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில்தான் ரொம்ப கண்டிப்பு காட்டுகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ முழக்கத்தின் கீழ் ஜூலை 1-ந் தேதி முதல் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களில் 30% பேரை புதிய உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்து இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திமுகவின் இந்த உறுப்பினர் சேர்க்கைக்கான தனி செயலியை (App) ‘மாப்பிள்ளை’ சபரீசனின் PEN டீம் உருவாக்கி இருந்தது.

ADVERTISEMENT

இந்த App மூலமாக உறுப்பினர் சேர்க்கை, அரசின் திட்டங்கள் குறித்த மக்கள் மனநிலை ஆகியவற்றை PEN டீம் செய்யலாம் என முதல்வர் ஸ்டாலினிடம் சபரீசன் கூறியிருந்தார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலின்தான், அப்படி வேண்டாம்.. திமுகவினரே இந்த App மூலம் அனைத்தையும் செய்யட்டும் என சொல்லி இருக்கிறார். இதன் பின்னர்தான் திமுகவினருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு களமிறக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த App மூலமான உறுப்பினர் சேர்க்கை விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

‘ஓரணியில் தமிழ்நாடு’ தொடர்பாக அண்மையில் ஆய்வு செய்த திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ரொம்பவே உற்சாகமாக இருந்தார். பெரும்பாலான இடங்களில் 30% என்ற இலக்கு எட்டப்பட்டு வந்ததால் 40% புதிய உறுப்பினர் சேர்க்கை என இலக்கும் உயர்த்தப்பட்டது.

அதேநேரத்தில் ஒரே OTP மூலம் நிறைய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சராகவும் மா.செ.வுமாக இருக்கும் ஒருவரை முதல்வர் ஸ்டாலினே நேரடியாக கண்டிக்க, அவரும் “தவறுகளை சரி செய்கிறோம் தலைவரே” என ஒப்புக் கொண்ட சம்பவமும் நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை விவரங்களை நுட்பமாக ஆய்வு செய்த சபரீசனின் PEN டீம், ரொம்பவே ஜெர்க் ஆகிப் போனதாம். ஒரே OTP மூலம் பல உறுப்பினர்கள் அதிகமான பூத்துகளில் சேர்க்கப்பட்டிருந்தனராம். இதை முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றது சபரீசனின் PEN டீம்.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் அல்லவா? அப்போது, இந்த ஒரே OTP மூலம் பல உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட விவரத்தை சுட்டிக்காட்டி, “இது சரியான முறை அல்ல.. அதனால் எந்தெந்த பூத்துகளில் இப்படி அதிகமான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்களோ அங்கே எல்லாம் மீண்டும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும்; எந்தெந்த பூத்துகள் என்ற விவரம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்” எனவும் சொல்லி இருந்தார்.

இதனையடுத்து அறிவாலயத்தில் இருந்து ஜூலை 27-ந் தேதி காலை முதல், ஆர்.எஸ். பாரதி, அன்பகம் கலை இருவரும் ஒவ்வொரு தொகுதி மா.செ மற்றும் மண்டல பொறுப்பாளர்களிடம் எந்தெந்த பூத்துகளில் மறுபடியும் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற விவரத்தை தெரிவித்த கையோடு அந்த பட்டியலையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இப்படி திருப்பி அனுப்பப்பட்ட பட்டியலில், மண்டல பொறுப்பாளர் பெயர், திமுகவின் கட்சி மாவட்டம் எது? சட்டமன்ற தொகுதி எது? மொத்தம் உள்ள பாகங்கள் எத்தனை? Reset செய்யப்படும் பாகங்கள் எண்ணிக்கை எத்தனை? இதுவரை இணைக்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? Reset செய்வதால் இழக்கக் கூடிய உறுப்பினர்கள் எண்ணிக்கை என்ன? புதியதாக மீண்டும் உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டிய பாகங்கள் எவை எவை? என தெள்ளத் தெளிவான புள்ளி விவரங்களுடனான பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த App மூலமாக ஏற்கனவே சேர்க்கப்பட்ட உறுப்பினர் விவரங்கள் ஜீரோவாக்கப்பட்டுவிட்டன.

இந்த பட்டியலைப் பார்த்த நிர்வாகிகள் ரொம்பவே மலைத்துப் போனார்களாம்.. சரி கட்சித் தலைமை கட்டளை என ஏற்றுக் கொண்டு மீண்டும் பூத்துகளுக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்க சென்றால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு OTP வரவில்லையாம். இந்த தகவல் அறிவாலயத்துக்கு தெரிவிக்கப்பட, ‘கொஞ்சம் பொறுங்க.. டெக்னிக்கல் அப்டேட் செய்யப்படுகிறது.. அதன் பின்னர் எளிதாக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கலாம்.. ஆனால் ஒரு செல்போன் எண்ணுக்கு 2 OTP மட்டும்தான் அக்செப்ட் ஆகும்.. அதனையும் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள் என மீண்டும் அட்வைஸ் செய்திருக்கின்றனர்

தேர்தல் பிரசாரத்தை ஜரூராக தொடங்கிவிட்டதாக பேசிக் கொண்டிருந்த திமுக நிர்வாகிகள், ‘டெக்னிக்கல்’ விவகாரங்களில் கசக்கி பிழியப்படுகிறோமோ என வியர்த்துக் கொண்டும் இருக்கின்றனராம்.

ஓஹோ.. புதுச்சேரியில் சப்தம் ஓவராக கேட்கிறதே?

புதுச்சேரி அரசியலில் சூறாவளி காற்று அதிகமாகவே வீசிக் கொண்டிருக்கிறதுதான்.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் பாஜகவுக்கும் இடையேயான முட்டல் மோதல் அதி உச்சமாகிவிட்டது.

அப்படி என்ன நடந்துவிட்டது?

2021-ல் புதுச்சேரியில் ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் போதே துணை முதல்வர் பதவியை கேட்டது பாஜக. இதனை ஏற்க மறுத்த ரங்கசாமி, வலுவான ‘அமைச்சர்’ பதவிகளை வாரிக் கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக உரசல், ஊடல் இருந்த போதும் ஓராண்டாகத்தான் நிலவரம் கலவரமாகிவிட்டதாம்.

துணை நிலை ஆளுநராக கைலேஷ்நாதன் நியமிக்கப்பட்ட பின்னர், முதல்வர் ரங்கசாமியின் கோபம் ரொம்பவே அதிகமாகிவிட்டதாம். 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி துணைநிலை ஆளுநராக கைலேஷ் நாதன் பதவியேற்றார். அங்கிருந்துதான் பிரச்சனை ஆரம்பமாம்.

அண்மையில் சுகாதாரத்துறை இயக்குநராக ஆனந்த லட்சுமி என்பவரை நியமிக்க பரிந்துரைத்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. ஆனால் துணை நிலை ஆளுநரோ இதனை புறக்கணித்துவிட்டு சீனியராட்டி, மெரிட் அடிப்படையில் செவ்வேல் என்பவரை நியமித்துவிட்டார்.

துணை நிலை ஆளுநரால் கடுப்பாகிப் போன முதல்வர் ரங்கசாமி, ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லாமல் இருப்பது’ என்ற போராட்டத்தை கையில் எடுக்க டெல்லி பாஜக ஆடித்தான் போனதாம்.

புதுச்சேரிக்கு உடனடியாக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா அனுப்பி வைக்கப்பட்டார். முதல்வர் ரங்கசாமியை நிர்மல்குமார் சந்தித்து பேசிய போது, அடக்கி வைத்த குமுறலை மொத்தமாகவே கொட்டித் தீர்த்துவிட்டாராம். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் நிலையில் இந்த துணை நிலை ஆளுநரை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது; அதனால் துணை நிலை ஆளுநரை உடனே மாற்றித்தான் ஆகனும் என்பதில் விடாப்பிடியாகவே இருந்தார் ரங்கசாமி.

அத்துடன் நிற்காமல், தேர்தல் நடைபெறும் வரை, துணை நிலை ஆளுநராக புதியவரை ஒருவர் நியமிக்க வேண்டும்; அல்லது முன்னர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு துணை நிலை ஆளுநராக இருந்தது போல ஒருவரை நியமித்துவிடுங்கள் எனவும் அழுத்தம் கொடுத்தாராம் ரங்கசாமி.

மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை, பொறுப்பு துணை நிலை ஆளுநராக நியமித்தால் சுமூகமாக செயல்பட முடியும் எனவும் சொல்லி இருக்கிறார் ரங்கசாமி.

அத்தனையையும் கேட்டுக் கொண்ட நிர்மல்குமார் சுரானா, பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் உங்களிடம் பேசுவார் என உறுதியளித்தார்.

இதன்படியே, ரங்கசாமியை தொடர்பு பிஎல் சந்தோஷ் பேசியிருக்கிறார். அவரிடமும் ரங்கசாமி, தமது குமுறல்களை வெளிப்படுத்த, அடுத்த மாதம் எல்லாமும் நடக்கும் என உறுதி தந்தாராம் சந்தோஷ்.

தற்போதைக்கு முதல்வர் ரங்கசாமி, சாந்தமடைந்திருந்தாலும் பாஜகவினர் ஆடும் ஆட்டங்களால் களநிலவரமே தலைகீழாக மாறலாம்.. ரங்கசாமி ஏற்கனவே தவெக விஜய்க்கு ஆஸ்தான குரு என பேசப்படுகிறது.. அதிமுகவுடனும் நல்ல புரிதலில் இருக்கிறார்.. அதனால் புதுச்சேரி அரசியலில் புதிய பூகம்பம் தாக்கினாலும் ஆச்சரியமில்லை போல என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share