வைஃபை ஆன் செய்ததும், “திறக்கும் வரை தட்டுங்கள்.. கிடைக்கும் வரை கேளுங்கள்” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. புதுசா தினுசா ஒரு மொழியில பேசுறீரு?
என்னப்பா செய்ய.. நடப்புகளும் புதுசா தினுசா இருந்தா நாமளும் அதே பாணியில போக வேண்டியதுதானே..
ஓபிஎஸ் மூவ்களைத்தான் சொல்றேன்..
ஆமாய்யா.. எந்த கூட்டணிக்குதான் போகப் போறாரு ஓபிஎஸ்?
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரைக்கும் எப்படியாவது எடப்பாடிகிட்ட பேசி அதிமுகவுல தன்னை பாஜக சேர்த்துவிடும்னு மலைபோல நம்பிகிட்டு இருந்தாரு… எடப்பாடியோ, ”டிடிவி தினகரனை கூட்டணியில சேர்த்துக்கலாம்.. ஆனா ஓபிஎஸ்ஸை சேர்க்கவே கூடாது”ன்னு அமித்ஷாகிட்ட அழுத்தமாகவே சொல்லிட்டாரு..
”ஓபிஎஸ்ஸை கட்சியில சேர்த்தாலும் கூட்டணிக்குள்ள கொண்டு வந்தாலும் என்னை தோற்கடிக்கனும்னு நினைச்சு கூட்டணிக்கு எதிராகத்தான் வேலை செய்யுவாரு.. திமுகவோட சேர்ந்துகிட்டு சதி செய்யுறவரு.. 2021 தேர்தல்ல அப்படித்தான் செஞ்சாரு.. அதனால அவரை சேர்க்கவே கூடாது”ன்னு ‘அனுபவங்கள்’ அடிப்படையில் எடப்பாடி தெளிவாகவே சொல்லிட்டாரு..
அதுக்கு பிறகு டிடிவி தினகரன் இப்ப அதிமுக- பாஜக கூட்டணிக்குள்ள வந்துட்டாரு..
இன்னொரு பக்கம் திமுககூட ஓபிஎஸ் ஏற்கனவே பேசினாரு.. இப்பவும் பேச்சுவார்த்தை நடத்துறாரு..
இதை பத்தி திமுக தரப்புல விசாரிச்சப்ப, “ஓபிஎஸ் கூட இருந்த பலரும் இப்ப திமுகவுக்கு வந்துட்டாங்க.. ஆனாலும் ஓபிஎஸ் பேசுகிட்டுதான் இருக்கிறாரு..
ஓபிஎஸ் என்ன சொல்றாருன்னா, ”தான் எலக்ஷனிலேயே போட்டி போடலை.. தான் சொல்ற 5 பேருக்கு மட்டும் சீட் கொடுங்க.. தென்மாவட்டங்களை நான்பார்த்துக்கிறேன்”னு சொல்றார்” என்கின்றனர்.
இதே மாதிரி தவெக பக்கமும் ஓபிஎஸ், தான் சொல்றவங்களுக்கு சீட் கேட்டு பேசிகிட்டு இருக்காருய்யா.. அதுல செங்கோட்டையன்கிட்ட பேசுன ஓபிஎஸ், “நான் உங்க கட்சிக்கே வந்தாலும் கூட முதல்வரா இருந்திருக்கேன்.. கட்சியோட ஒருங்கிணைப்பாளரா இருந்திருக்கேன். உங்களுக்கு கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவி கொடுத்த மாதிரி எனக்கு தென் மண்டல பொறுப்பாளர்ன்னு ஏதோ ஒரு பொறுப்பை மட்டும் கொடுத்துடுவாங்க.. அது எப்படி சரியா வரும்? அதனால என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்?னு விஜய்கிட்ட பேசிட்டு சொல்லுங்க”ன்னும் சொல்லியிருக்காரு. இந்த விஷயத்தை விஜய்க்கு செங்கோட்டையன் சொல்லியிருக்கிறாரு.. ஆனாலும் விஜய் கிட்ட இருந்து எந்த பதிலும் இதுவரை வரலை..
இப்படி தவெககிட்ட ஓபிஎஸ் பேசுற தகவல் ஸ்டாலினுக்கும் போக, “என்ன இப்படி பண்றாரு?”ன்னு கேட்டிருக்கிறார்.
திமுக, தவெகன்னு மட்டும் இல்லாம மூன்றாவது முயற்சியா டிடிவி தினகரன்கிட்டேயும் ஓபிஎஸ் பேசியிருக்காருங்கிறதுதான் லேட்டஸ்ட் தகவல்..
டிடிவிகிட்ட என்ன டிமாண்ட் வெச்சிருக்காராம் ஓபிஎஸ்?
இதை பத்தி டிடிவி தினகரனுக்கு நெருக்கமானவங்கிட்ட கேட்டப்ப, “ஆமா சார்.. டிடிவி சார் கிட்ட ஓபிஎஸ் பேசியிருக்காரு.. தான் உட்பட 3 பேருக்கு மட்டுமாவது சீட் கொடுங்கன்னு கேட்கிறாரு ஓபிஎஸ்.. அதுவும் இரட்டை இலை சின்னம் கூட எங்களுக்கு வேண்டாம்.. குக்கர் சின்னத்துலேயே நிற்கிறோம்.. இபிஎஸ்கிட்ட பேசுங்கன்னு சொல்லி இருக்காரு..
டிடிவி சாரும் இபிஎஸ்கிட்ட ஓபிஎஸ் சொன்ன தகவலை பாஸ் செஞ்சிருக்காரு” என்கின்றனர்.
டிடிவி தினகரன் சொன்ன தகவலை கேட்டுக் கொண்ட எடப்பாடி இதுவரை எந்த ஒரு முடிவும் சொல்லாமல் மவுனமாகவே இருக்கிறாரு..
ஓபிஎஸ்ஸோ முட்டிப் பார்த்த மூணுல ஒன்னாவது தேறுமேன்னு நம்பிக்கையா இருக்கிறார்யா என டைப் செய்தபடியே ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
