வைஃபை ஆன் செய்ததும் ‘சாட்டையை அதிவேகமாக சுழற்றிவிட்டாரே சிஎம் ஸ்டாலின்’ என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
சென்னை கேகே நகர் தனசேகரன் பேரன் விவகாரம் தானே..

அதேதான்.. சென்னை மாநகரின் திமுகவின் முகங்களில் ஒருவராக இருப்பவர் கேகே நகர் தனசேகரன்.
கட்டப்பஞ்சாயத்து தொடங்கி பல்வேறு விவகாரங்களில் தனசேகரன் பெயர் அடிபடுவது வழக்கம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கேகே நகர் தனசேகரனுக்கு இந்த காரணங்களாலேயே சீட் தரவில்லை திமுக தலைவர் ஸ்டாலின். இதனால் கோபப்பட்ட தனசேகரன், 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களைத் திரட்டி சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே போராட்டம் நடத்தினார்.
2022-ல் உள்ளாட்சித் தேர்தலின் போது சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றார். சென்னை மேயர் பதவி எஸ்சி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால் துணை மேயர் பதவிக்கு ரொம்பவே முட்டி மோதிப் பார்த்தார் தனசேகரன். ஆனால் தனசேகரனின் “நிஜமுகம்” இதற்கும் தடையாக இருந்தது.
இத்தனை தடைகளுக்குப் பின்னாலும் கேகே நகர் தொகுதியை விட்டுவிடாமல் அறக்கட்டளைகள் மூலமாகவும் இடைவிடாத கட்சிப் பணிகள் மூலமாகம் திமுக தலைமையின் குட்புக்கிங் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார் தனசேகரன். அவரது மகள் கனிமொழி, திமுக மகளிர் அணியில் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த முறை எப்படியும் விருகம்பாக்கம் தொகுதி தனசேகரனுக்குதான் கிடைக்கும் என்கிற பேச்சும் அடிபட்டு வந்த நிலையில்தான் பேரன் விவகாரம் அவருக்கு நெருக்கடியை தந்துவிட்டது.
தனசேகரன் பேரன், கொலை வழக்கில் எப்படி சிக்கினார்?
தனசேகரன் மகள் கனிமொழி சுரேஷ். இவரது ஒரே மகன் சந்துரு. இதனால் பேரன் மீது தாத்தா தனசேகரனுக்கு ரொம்பவே பாசம் அதிகம். தமது அரசியல் வாரிசாகவே சந்துருவை வளர்த்தெடுத்தும் வந்தார் தனசேகரன். இதற்காகவே சில முக்கியமான சந்திப்புகளின் போதும் சந்துருவையும் கூட அழைத்துச் செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்
தனசேகரன். அந்த சந்துருதுதான், நண்பர்களுக்காக சண்டை போடப் போய் கொலை வழக்கில் சிக்கிவிட்டார்.
சந்துரு கொலை வழக்கில் சிக்கியது எப்படியாம்?
சந்துருவின் நண்பர்களில் ஒருவர் பிரணவ். அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை வெங்கடேஷ் என்ற இளைஞரும் காதலித்துள்ளார். இதனால் பிரணவ்- வெங்கடேஷ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பிரணவ் பக்கம் சந்துருவும் அவரது நண்பர்களும் இருந்துள்ளனர்; வெங்கடேஷ் பக்கம் நிதின்சாய், அபிஷேக் உள்ளிட்ட நண்பர்களும் இருந்துள்ளனர்
இந்த நண்பர்களுக்கு இடையே பிறந்த நாள் பார்ட்டி ஒன்றில் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நிதின் சாய்யையும் அபிஷேக்கையும் சந்துரு, பிரணவ் உள்ளிட்ட நண்பர்கள் சொகுசு காரில் விரட்டி இருக்கின்றனர். அப்போபோதுதான் திருமங்கலம் பகுதியில் நிதின்சாய் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது சந்துருவும் அவரது நண்பர்களும் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியது. இதில் நிதின்சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, சந்துரு கொலை கேஸில் சிக்கிவிட்டார்.
நிதின் சாய் கல்லூரி மாணவர். சென்னை மாநகரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கொலைச் சம்பவம், அதில் கேகே நகர் தனசேகரனின் பேரனுக்கு இருக்கும் தொடர்பு குறித்த ரிப்போர்ட் இரவோடு இரவாக முழுமையாக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு போனது.
இந்த ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு, “எப்படியும் இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து பெரிதாக்க வாய்ப்பிருக்கிறது; அதனால் உடனடியாக, பேரனை சரண்டர் செய்ய சொல்லுங்க.. இல்லைன்னா தனசேகரனை கட்சியைவிட்டே நீக்கிடுவோம். இதை தனசேகரனை கூப்பிட்டே சொல்லிடுங்க” என கறாராக சொல்லி இருக்கிறார் சிஎம் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த கடும் எச்சரிக்கைக்குப் பின்னரே, தலைமறைவாக இருந்த பேரன் சந்துருவை திருமங்கலம் போலீசில் சரணடைய வைத்தாராம் தனசேகரன்.
“முதல்வர் ஸ்டாலினைப் பொறுத்தவரையில் ஆட்சியில் அமர்ந்த போது நடந்த பிரியாணி கடை தகராறு தொடங்கி தனசேகரன் பேரன் சந்துரு விவகாரம் வரை பாரபட்சமே பார்ப்பது இல்லை; சட்டம் ஒழுங்கு விஷயத்தில் ரொம்ப கண்காணிப்பாக இருப்பதால்தான் இப்போதும் தனசேகரனுக்கு வார்னிங் கொடுத்தார் சிஎம் ஸ்டாலின்” என்கின்றனர் திமுக நிர்வாகிகள்.
சரி.. நெல்லை கவின் ஜாதி ஆணவப் படுகொலையில் தென் மாவட்டங்கள் தகிக்குதே?
நெல்லை ஐடி ஊழியர் கவின்குமார் ஜாதி ஆணவப் படுகொலைதான் தென் மாவட்டங்களை ரொம்பவே கொந்தளிக்க வைத்திருக்கிறது.. ஜாதி ஆணவக் கொலையை இனியும் சும்மா வேடிக்கை பார்க்காமல் கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்க வேண்டிய நெருக்கடியை ‘திராவிட மாடல்’ திமுக அரசுக்கு உருவாக்கி இருக்கிறது. இதற்கான குரல்களும் வலுத்து வருகிறது.
வழக்கம் போல இந்த படுகொலை சம்பவத்தை முன்வைத்தும் அரசியல் கணக்குகள் போடப்படுகிறதாமே?
திருப்புவனம் அஜித்குமார் திடீர் விசிட் அடித்தது போல, நெல்லை கவின்குமார் வீட்டுக்கும் சர்ப்ரைஸ் விசிட் அடிப்பது என முடிவு செய்திருந்தாராம் நடிகர் விஜய். ஆனால் இப்போதைக்கு நெல்லைக்கு போக வேண்டாம் என ஒரேயடியாகத் தடுத்துவிட்டாராம் ஆதவ் அர்ஜூனா.
விஜய்யை ஏன் ஆதவ் அர்ஜூனா தடுத்தாராம்?
இதுபற்றி தவெக வட்டாரங்களில் விசாரித்த போது, “ஜாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தை சந்திப்பது நல்ல அரசியல்தான். இதை ஆதவ் அர்ஜூனாவும் ஆமோதிக்கிறார். அதேநேரத்தில் அப்படி விஜய், அந்த குடும்பத்தை நேரில் பார்த்து ஆறுதல் சொன்னால் அதை அப்பகுதியைச் சேர்ந்த பிற பெரும்பான்மை ஜாதியினர் ரசிக்க மாட்டார்கள்; வெறுக்கத்தான் செய்வார்கள். எதற்கு அவர்களை பகைச்சுக்கனும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப ஆதவ் அர்ஜூனா முன்வைக்கிறார். இதனால்தான் நெல்லைக்குப் புறப்பட்ட விஜய் வண்டி ஜெர்க் ஆகி சென்னையிலேயே நிற்கிறது” என்கின்றன.
ஓஹோ.. பாஜக மீது ‘அய்யா ஓபிஎஸ்’ ஓவர் கோபத்தில் இருக்கிறாராமே?
எல்லாம் ஒருநாள் கூத்துதானே.. தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடியை எப்படியாவது சந்தித்து பேச வேண்டும் என்பதற்காக ரொம்பவே கெஞ்சிப் பார்த்தார் ஓபிஎஸ். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் கூடவே இருக்கிறவங்களும் செம்ம கடுப்பில் இருக்கிறாங்க.. இவங்களை கூல் செய்வதற்காக திடீரென மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஓபிஎஸ். இதே கோபத்துடன் பிரஸ்மீட் நடத்தவும் இருக்கிறார் என தகவல் வெளியானது.
ஓபிஎஸ்-ன் கோபத்துக்கு திரியாக இருந்து விளக்கேற்றி வைத்து கொண்டிருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், அப்படியே விஜய் பக்கம் அவரை தள்ளிக் கொண்டு போகலாம் என கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்.
இந்த கூத்துகளை எல்லாம் கவனித்த பாஜக தரப்பு, ஓபிஎஸ்ஸிடம் பேசி இருக்கிறது.. “ரொம்ப டென்ஷனாக வேண்டாம்.. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்” என சொல்ல, ஓபிஎஸ்-ம் உடனே கூல் ஆகி, “ஆஹா வெற்றி.. ஆஹா வெற்றி” என்கிறாராம்..
சென்னையில் பாஜக ‘தலைகள்’ ஜரூராக தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனரே?
அதிமுக- பாஜக கூட்டணியில் எப்போதும் பாஜக, தமக்கான தொகுதிகளை தாமே எடுத்துக் கொள்ளும்.. அப்படித்தான் இப்போதும் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் செல்வம், எஸ்ஜி சூர்யா உள்ளிட்டோர் தி.நகர், துறைமுகம், வேளச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகளை ஜரூராகவே தொடங்கிவிட்டனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புதான் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் அங்கேயும் தேர்தல் வேலைகளில் பாஜகவினர் பிஸியாகிவிட்டனர்.
துறைமுகம் தொகுதியில் மார்வாடிகள் உள்ளிட்ட வட இந்தியர்கள் கணிசமாக இருப்பதால் வினோஜ் செல்வம் நம்பிக்கையோடு இருக்கிறாராம்; பாஜகவின் அசைக்க முடியாத பிராமணர் வாக்குகளை மலைபோல நம்புகிறாராம் தமிழிசை. ஐடி ஊழியர்களின் வாக்குகளை கவர் செய்யலாம் என கணக்குப் போடுகிறாராம் எஸ்ஜி சூர்யா.
பாஜகவினர் இப்படி ஒரு கணக்குப் போட்டால் போதுமா.. இந்த தொகுதிகளுக்காகவே காத்திருக்கும் அதிமுகவினர் சும்மா இருப்பார்களா? தேர்தல் கூட்டணியே இப்பதான் செட் ஆகியிருக்கு.. அதுக்குள்ள தொகுதிகளையே அவங்களே முடிவு செஞ்சுட்டா நாங்க சும்மாவிடுவோமா? என அதிமுகவினர் ரொம்பவே கொதிப்பதைப் பார்த்தால்.. ‘ஆஹா விரைவில் ஏதோ பெருசாக நடக்கப் போவது கன்பார்ம்’ என அடித்துச் சொல்கிறார்கள் என டைப் செய்தபடியே ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.