டிஜிட்டல் திண்ணை: வாக்காளர் பட்டியல்.. ராகுல் பற்ற வைத்த நெருப்பு – மா.செ.க்களுக்கு ஸ்டாலின் ‘கறார்’ கட்டளை!

Published On:

| By Minnambalam Desk

Digital Thinnai: MK Stalin order to the MLAs on eci vote theft

வைஃபை ஆன் செய்ததும், ‘களம் 8-ல் தேர்தல் ஆணையத்தை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது’ என கமெண்ட் அடித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி அம்பலப்படுத்திய உண்மைகள் நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியும் வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டு கொண்டே இருக்கின்றன..

இப்போது திமுகவும் இந்த விவகாரத்தில் ஜரூராகவே களமிறங்கிவிட்டது. சென்னையில் இன்று ஆகஸ்ட் 13-ந் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் திமுக சட்டத்துறை செயலாளர் என்ஆர் இளங்கோ என 3 பேர் மட்டுமே பேசினர்.

அமைச்சர் டிஆர்பி ராஜா பேசும் போது, “இளைஞர்கள் ஆதரவு திமுகவுக்கு இல்லை என சொல்கின்றனர்.. ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியை முழுவீச்சாக நடத்தியதே இளைஞர்கள்தான். எங்க டீம் எடுத்த சர்வேயில், முதல் முறை வாக்காளர்களில் பெரும்பாலானோர் நமக்குதான் ஓட்டு போடுவோம் என சொல்லி இருக்கின்றனர். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் போது முதல் 3 நாட்கள்தான் கொஞ்சம் சிரமப்பட்டாங்க.. அதற்கப்புறம் வேகமாக வேலை நடந்தது.. OTP பிரச்சனையில் சின்ன தொய்வு வந்தது.. அதற்கு பிறகு அதிலும் சிக்கல் தீர்ந்த பின்னர் முழுமையாக செய்து முடித்திருக்கிறோம்.. நம்ம முதல்வர் அறிவித்த அத்தனை திட்டங்களுமே மக்களை செம்மையாக ரீச் ஆகியிருக்கிறது” என்றார்.

ADVERTISEMENT

சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ, வாக்காளர் பட்டியல் விவகாரத்தைத்தான் முழுமையாக பேசினார். “இனி வரும் நாட்களில் ரொம்பவே கவனமாக இருக்கனும்.. குறிப்பாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் போது உன்னிப்பாக கவனிக்கனும்.. வட இந்திய தொழிலாளர்களை பல்க்காக ஒரே அட்ரஸில் சேர்க்கக் கூடும்.. ஒரே ஒரு நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட் இருந்தா போதும்.. அதை செஞ்சுடுவாங்க.. இதை எல்லாம் கவனமாக பார்த்து தடுக்கனும்.. ஒரு பூத்துக்கு இப்படி 10 ஓட்டு அவங்களுக்கு கிடைச்சாலும் நமக்கு இழப்புதான்.. பீகாரைச் சேர்ந்தவங்க மட்டும் இன்னைக்கு 8 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருக்காங்க.. வட இந்தியர்கள்னு மொத்தமாக கணக்கெடுத்தா 80 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருக்காங்க.. வடக்கே, 100 நாள் வேலை திட்டத்துக்கு போகாமலேயே இவங்க வீட்டுக்கு பணம் போகுது.. நாமதான் ஒழுங்காக வேலைக்கு வர்றாங்களா இல்லையா? போகஸ் இருக்கா?ன்னு செக் செய்யறோம்.. வடக்கே அப்படி எல்லாம் எந்த கெடுபிடியும் இல்லை.. மத்தியில் ஆளும் பாஜக செம்ம பிளான் பண்ணி வாக்காளர்களாக மாற்றுது.. அதனாலதான் இனி வரும் வாக்காளர் பட்டியல் நீக்கம், சேர்ப்பு, திருத்தம் இதில் ரொம்ப முழு கவனமாக இருக்கனும்” என தீவிரமாக அட்வைஸ் செய்தார்.

இன்றைய மா.செ.க்கள் கூட்டத்தில் உற்சாகமாக இருந்த முதல்வர் ஸ்டாலின், ரொம்பவே உருக்கமாக பேசினார்..

“என்னை பார்க்கிற நீங்க எல்லோரும் உடம்பை பார்த்துக்குங்க என சொல்றீங்க.. ஏன் ஓய்வெடுப்பதில்லைன்னு பலரும் கேட்கிறீங்க. நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, “உங்களை எல்லாம் அதிகமாகவே வேலை வாங்குறேன்னு நினைக்கிறேன்.. நம்ம எதிரிகள் பலமாக இருக்கிறாங்க.. நாம கஷ்டப்பட்டாதான் ஜெயிக்க முடியும்.. என உணர்வுப்பூர்வமாக பேசினார் சிஎம் ஸ்டாலின்.

அதேபோல “ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியை ரொம்பவே திருப்தியாக எல்லோரும் செஞ்சுட்டீங்க.. சில ஊர்களில் டவர் கிடைக்கிற பிரச்சனை இருக்கு.. அங்க எல்லாம் படிவம் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை நடத்துங்க.. ” என மாற்று ஐடியாவும் கொடுத்தார் ஸ்டாலின்.

இன்றைய மா.செ.க்கள் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் விவகாரம் பற்றி ரொம்பவே சீரியசாக அட்வைஸ் மட்டுமல்ல கட்டளையும் பிறப்பித்தார் ஸ்டாலின்.

“தேர்தல் ஆணையத்தின் மூலம் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த சட்டம் மூலம் என்னென்ன அடடூழியங்களை பீகாரில் மத்திய அரசு செஞ்சுகிட்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.. கழகத்தின் பாக முகவர்கள் அமைப்பு மிக வலுவாக இருப்பது கட்டாயம். இதில் தனி கவனம் செலுத்தனும்..

BLCகளை நியமியுங்கள் . இப்பணிகளை நானே நேரடியாகக் கண்காணிக்கிறேன். BLA 2, BDA நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிக் கூட்டங்கள் நடத்தியாச்சு.. BLC (BOOTH LEVEL COMMITTE ) அமைத்து உறுப்பினர்களை நியமிக்கனும்.. 100 வாக்காளர்களுக்கு ஒரு 1 BLC உறுப்பினர் என்ற விகிதத்தில் நிர்வாகிகள் நியமிக்கனும்..

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரும் போது BLA2 முகவர்கள் கவனமாக இருக்கனும்.. நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட்டை இப்ப தேர்தல் ஆணையம் கேட்குது.. இதை நாமே ஏற்பாடு செஞ்சு வாங்கி கொடுத்து ஒரு வாக்கை கூட விட்டு வைக்காமல் முழுமையாக சேர்த்துவிடனும்” என வகுப்பெடுத்தாராம்.

இந்த மா.செ.க்கள் கூட்டத்தில் ரொம்ப காட்டமாகவே, “நம்ம கவுன்சிலர்கள் மீது ரொம்பவே புகார் அதிகமாக இருக்கிறது.. கவுன்சிலர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கனும்” என கண்டிப்புடன் பேசினார் முதல்வர்.

அப்படியே வெளிநாட்டு பயணத்தையும் மா.செ.க்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

“வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய், சிங்கபூர் , ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்காவுக்கு பயணம் போய்ட்டு வந்தேன்.. அதே போல வருகிற செப்டம்பர் மாதமும் வெளிநாடு செல்கிறேன்..ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர போகிறேன்” என்றார் ஸ்டாலின்.

இன்றைய மா.செக்கள் கூட்டத்துக்குப் பின்னர், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற தேர்தல் ஆணையம் நடத்தப் போகிற அக்னி பரீட்சை எவ்வளவு முக்கியம்; கட்சிக்கும் நமக்கும் எவ்வளவு சவாலாக இருக்கப் போகிறதோ? என்கிற பதற்றத்தை திமுக மா.செக்களிடம் பார்க்க முடிந்தது என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share