வைஃபை ஆன் செய்ததும் “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
ஆகஸ்ட் 7-ந் தேதி ‘கலைஞர்’ 7-வது ஆண்டு நினைவு நாள் அல்லவா?
ஆமாம்.. கலைஞரின் நினைவு நாள் என்பது ஏதோ ‘சடங்காக’ இருந்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறதாம்.

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினருக்கு கடிதம் எழுதியிருந்த முதல்வர் ஸ்டாலின், “ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் சென்னை அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் – உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைகள்தோறும் தலைவர் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். இந்நிகழ்வுகளில் கழக நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்றிட வேண்டும்” என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்பை முழு வீச்சில் செயல்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கறார் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றனர்.

கடலூர் கிழக்கு மா.செ.வான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன் மூலமாகவும் ஜூம் மீட்டிங் மூலமாகவும் கடலூர், புவனிகிரி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்கிறார். சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “அனைத்து நிர்வாகிகளும், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களிலும்’கலைஞர்’ படத்தை வைத்து நினைவு நாள் ‘படையல் போட்டு’ கடைபிடிக்க வேண்டும். கிராமங்களில் இருக்கும் அனைத்து நிர்வாகிகளும் இதில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார்.
இதேபோல கடலூர் மேற்கு மா.செ. அமைச்சர் கணேசன், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி மற்றும் திட்டக்குடி தொகுதி நிர்வாகிகளை அழைத்து பேசியிருக்கிறார்.
தருமபுரி மா.செ. பழனியப்பன், திமுக நிர்வாகிகளிடம் பேசுகையில், “இந்த முறை கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சிகளை முழுமையாக செய்ய வேண்டும். கிராமங்களில் நிர்வாகிகள் மட்டுமல்ல.. பொதுமக்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த நினைவு நாளை பயன்படுத்த வேண்டும்” என கூறியிருக்கிறார்.
இதேபோல ஒவ்வொரு மா.செ.வும், கட்சியின் 23 அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீடுகள் இருக்கும் வீதிகளில் கலைஞர் நினைவு நாளை கடைபிடித்து வீடியோ- போட்டோக்களை அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனராம்.
இதுபற்றி திமுக வட்டாரங்களில் பேசுகையில், ஒவ்வொரு சிறு நிகழ்வையும் கலைஞர், கவனமாக கையாள்வார்; தன் வயப்படுத்தக் கூடியவர். அப்படியான ஆற்றல் வாய்ந்த தலைவர் கலைஞரின் நினைவு நாளையும் தேர்தல் காலம் என்பதால் மிக கவனமாக முழு வீச்சில் கடைபிடிக்க வேண்டும் என்பது தலைமையின் விருப்பம். ஏனெனில் கடந்த காலங்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவு நாட்கள் சில ஆண்டுகள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு பின்னர் மெல்ல மெல்ல ஏதோ நடத்துகிறோம் என்ற அளவுக்கு சுருங்கிப் போய்விட்டது.. அப்படி எல்லாம் இருந்துவிடாமல் ‘கலைஞர்’ என்பதுதான் நமக்கு பேராயுதம்.. அவரை எப்போதும் கைகளில் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வை திமுகவினருக்கு உணர்த்தும் வகையில் இப்படியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய தலைமையே உத்தரவிட்டுள்ளது” என்கின்றனர்.
மதுரை மாநாட்டு தேதியை திடீரென விஜய் மாற்றி வைத்துவிட்டாரே?
மதுரையில் ஆகஸ்ட் 25-ந் தேதி தவெகவின் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்திருந்தார். இதற்காக பிரம்மான்டமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த தருணத்தில் போலீசார் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பை முன்வைத்து தந்த அறிவுறுத்தலின் படி ஆகஸ்ட் 25-க்கு முன்னதாக ஆகஸ்ட் 21-ந் தேதி மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார்.

மதுரை மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேரை திரட்டி செம்ம மாஸ் காட்ட வேண்டும் என நினைக்கிறாராம் விஜய். அதே நேரத்தில், ‘நல்லா செலவும் செய்ய வேண்டும்’ எனவும் சொல்லப்பட, விஜய்யோ, “நம்மால செய்ய முடியாது.. வசூல் செய்து செலவழிக்கலாம்” என்றாராம்
இதனையடுத்தே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் என அக்கட்சியின் மூத்த ‘தலைகள்’ வசூலில் மும்முரமாக இறங்கி, ‘மாஸ் காட்டுவதே’ இலக்கு என பம்பரமாக சுழலுகின்றனராம்.
மதுரை மாநாட்டுக்கு 5 லட்சம் பேர் வரனும் என விஜய் இலக்கு வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம்.. இதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன் முதல் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வரை அனைவரிடமும் ஜனவரி மாதம் வரை பொறுங்க என்பதுதான் விஜய் தந்த பதில். இப்போது மதுரையில் மாநாடு நடத்தி பலத்தைக் காட்டினால், இனி எந்த கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் மதுரை மாநாட்டின் மாஸ் காண்பித்தே பேசலாம் என கணக்குப் போடுகிறாராம் விஜய்
ஓஹோ..
சிஎம் ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி சந்தித்துள்ளனரே?
மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் வந்த பின்னர் திமுக கூட்டணியில் இல்லாத தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து திமுக அணியில் இல்லாத ஓபிஎஸ் சந்தித்தார். பின்னர்தான் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.
தற்போது சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்களான சண்முகம், முத்தரசன் மற்றும் திருமாவளவன் மூவரும் ஒருசேர ஸ்டாலினை இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மூவரும் கையெழுத்திட்டு கொடுத்த மனுவும் மூவரும் கூட்டாக அளித்த பேட்டியும்தான் ரொம்பவே உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.

நெல்லை கவின் கொலையைத் தொடர்ந்து ஆணவ கொலை தடுப்பு சட்டம் பற்றி தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. நமது மின்னம்பலத்திலும் இந்த சட்டத்தின் தேவை பற்றி பேராசிரியர் ராஜன்குறை விரிவாகவே எழுதி இருந்தார். இதன் பின்னர் திமுக கூட்டணியில் உள்ள விசிக, இந்த சட்டத்தை நிறைவேற்ற கோரி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில்தான் ஸ்டாலினுடனான இந்த சந்திப்பு நடந்தது.
ஸ்டாலினிடம் கொடுத்த மனுவில், ஆணவக் கொலை தடுப்பு சட்டம் பற்றி உச்சநீதிமன்றம், சட்ட ஆணையம்- பெண்கள் ஆணையம் என்ன சொல்லி இருக்கிறது; ராஜஸ்தானில் எப்படி செயல்படுகிறது என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளனவாம். முதல்வரிடம் பேசும் போதும் இதனை சுட்டிக்காட்டி மூவரும் பேசியிருக்கின்றனர்.
இதற்கு பதில் தந்த முதல்வர் ஸ்டாலின், பரிசீலனை செய்து முடிவெடுப்போம் என உறுதி தந்தாராம்.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலை தடுப்பு சட்டம் வரப்போகிறதோ?
ஆகஸ்ட் 14-ந் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் இந்த சட்டம் பற்றி விவாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறதாம்.
ஆனால் திமுகவின் சீனியர் அமைச்சர்கள் சிலரோ, “தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரத்தான் வேண்டுமா? ஒரு சில ஜாதிகளின் வாக்குகள் மொத்தமாக நம்மை விட்டு போய்விடாதா?” என சந்தேகமும் எழுப்புகின்றனராம்.. இதனால் இந்த சட்டம் ‘வரும்.. ஆனால் வருமா என தெரியாது” என்பதே நிலை
என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.