வைஃபை ஆன் செய்ததும் ‘பாஜகவில் இப்பவும் அண்ணாமலையின் ஆதிக்கம்தான் போல’ என தலைப்புச் செய்தியுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Annamalai Nainar Nagenthiran BJP
சென்னை பெரியார் திடலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, “மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் மதுரைக்கு வந்தார். அங்கு பேசிய அமித்ஷா, டெல்லியைப் பிடித்துவிட்டோம்; ஹரியானாவைப் பிடித்துவிட்டோம்; மகாராஷ்டிராவைப் பிடித்துவிட்டோம்; அடுத்து தமிழ்நாடுதான் என்கிறார். முட்டாள்.. முட்டாள்” என பேசியிருந்தார். ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை திமுக மண்டல பொறுப்பாளரான ஆ.ராசாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து சென்னையில் உள்ள பாஜகவின் 7 கட்சி மாவட்டங்களின் சார்பாக நேற்று ஜூலை 1-ந் தேதி பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போலீசாரின் அனுமதி இல்லாமல் போராட்டங்கள் நடந்ததால் 1000 பாஜகவினர் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

போலீசாரால் தடுத்து வைக்கப்பட்ட திருமண மண்டபங்களிலும், சமூக நல கூடங்களிலும் பாஜகவினர் சும்மா இருக்காமல், கந்த சஷ்டி கவசத்தை கோரஷாக பாடினார்கள்.
இந்த திருமண மண்டபங்களில் பாஜக நிர்வாகிகள் பரிமாறிக் கொண்ட அரசியல் விஷயங்களும் கவனம் பெற்றுள்ளன.

பாஜகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் ஆ.ராசா. அதனால் அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என சில பாஜக நிர்வாகிகள் நமட்டாக சொல்லி சிரித்தனர்.
அத்துடன், ஆ.ராசாவுக்கு எதிரான இந்த போராட்டங்களை நடத்துவதற்கு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விருப்பமில்லாமல் இருந்தாராம். ஆனால் அண்ணாமலைதான், மத்திய அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொண்டு விவரங்களை சொல்லி போராட்டம் நடத்துவோம் என்றாராம். அவரும் ஓகே சொன்ன நிலையில், டெல்லி மேலிடமும் நயினார் நாகேந்திரனை அழைத்து போராட்டம் தொடர்பாக பேசியதாம்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவை இப்படி விமர்சித்த ஆ.ராசாவுக்கு எதிராக கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனமே தெரிவிக்காமல் இருப்பது எப்படி சரியாகும்? என்கிற கோபத்தையும் சில நிர்வாகிகள் வெளிப்படுத்தினராம்.

இப்படி திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்ட பாஜகவினரால் அதிகமாக பேசப்பட்ட ஒரு விவகாரம், கட்சியின் மாநில நிர்வாகிகள் நியமனம்தான். தமிழக பாஜகவின் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை தயாரித்துக் கொண்டு அண்ணாமலையை பார்க்கப் போயிருக்கிறார் நயினார் நாகேந்திரன். அண்ணாமலையிடம் இந்த பட்டியலை கொடுத்து, “நீங்க கொஞ்சம் பாருங்க” என நயினார் சொல்ல, அவரோ, பட்டியல் பேப்பரை கையில் கூட வாங்க மறுத்துவிட்டாராம்.
இதற்கு காரணம், அண்ணாமலை ஏற்கனவே டெல்லி பாஜக மேலிடத்திடம், ஏற்கனவே பணியாற்றும் தமிழக நிர்வாகிகளில் 80% பேரை மாற்ற வேண்டாம்; புதிய தலைவர் என்பதால் நயினார் நாகேந்திரன் பரிந்துரைக்கும் நபர்களில் 20% பேரை மட்டும் நியமிக்கலாம் என சொல்லிவிட்டாராம். அண்ணாமலை இந்த விவகாரத்தில் ‘ரொம்பவே கறார்’ காட்டுவதால்தான் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்னமும் வெளியாகவில்லையாம்.. இந்த தகவல் நயினாருக்கும் போயிருப்பதால் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் என்கிற தகவலையும் பகிர்ந்து கொண்டனராம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.