வைஃபை ஆன் செய்ததும், “மலையிலதான் தீப்பிடிக்கிது ராசா” என்ற பாடலை நெக்குருகி கேட்டபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். digital thinnai eps ready to thugs to annamalai
சரி.. இப்ப எங்க தீப்பிடிக்குது ராசா?
அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததாக அறிவித்த நாள் முதலே நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டே இருக்கிறார் தமிழக பாஜக மாஜி தலைவர் அண்ணாமலை. தற்போது, ஈரான் மீது இஸ்ரேல் சரமாரியாக தாக்குதலை நடத்தியது போல கூட்டணி ஆட்சி விவகாரத்தில் அதிமுகவினரை பல்லைக் கடிக்க வைத்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று ஒவ்வொரு முறையும் திட்டவட்டமாகவே அமித்ஷா கூறி வருகிறார்; பத்திரிகைகளுக்கான சிறப்பு பேட்டிகளிலும் இதனையே வலியுறுத்தி வருகிறார்.

அமித்ஷாவின் பேட்டி வெளியான உடனேயே அதிமுக தரப்பில் இருந்து, தனித்தே நாங்கள் ஆட்சி அமைப்போம்; கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்று பதிலுக்கு லாவணி பாடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக- பாஜக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்; அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் இந்த நம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் வகையில், சென்னையில் இன்று ஜூலை 17-ல் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் எதையும் பேசவில்லை. அமித்ஷா பேசியதைத்தான் இங்கே நான் முன்வைக்கிறேன். இல்லை.. இல்லை.. இதை எல்லாம் தேர்தல் நேரத்தில் பார்க்கலாம் என்றால் என்னுடைய தலைவரையே டிபெண்ட் செய்ய முடியாத நான் ஏன் அரசியல் கட்சியில் இருக்க வேண்டும்?” என்றெல்லாம் ரொம்பவே கொந்தளித்திருந்தார்.
இது பற்றி பாஜக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டிருந்தாலும் அமித்ஷாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகத்தான் இருக்கிறார். நயினார் நாகேந்திரனுக்கு இணையாக முழுமையாக அண்ணாமலைக்கு டெல்லி பாஜக மேலிடம் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறது. நயினார் நாகேந்திரன், பாஜக மாநில தலைவராக இருப்பதால் சற்று வாய்ஸை அடக்கித்தான் பேச வேண்டும்; ஆனால் அண்ணாமலை எந்த பொறுப்பிலும் இல்லாததால் பாஜகவின் மேலிடம் தொடங்கி கடைசி தொண்டன் வரையிலான அத்தனை பேரின் ‘மனசாட்சியாக’ எரிமலையாக வெடிக்கிறார்.. இதைத்தான் டெல்லி மேலிடமும் விரும்புகிறது” என்கின்றனர்.
சரி.. அண்ணா திமுகவின் ரியாக்ஷன் என்னவோ?
இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுக சீனியர்கள், அண்ணாமலையின் இந்த பேச்சை எல்லாம் நாங்கள் ரசிக்கவில்லைதான்.. ஆனாலும் டெல்லி மேலிடத்துடனான இணக்கத்தால் அமைதியாக இருக்கிறோம்.. இருந்தாலும் அண்ணாமலைக்கு பதில் சொல்லி ‘கணக்கு’ தீர்த்துதான் ஆக வேண்டும். இதனால் அண்ணாமலைக்கு சூடான பதிலடி ரெடியாகிறது” என்கின்றனர்.
களம் 8-ல் ஆட்டம் அதிரிபுதிரிதான் போல!

தைலாபுரம் தோட்டத்துக்குள் போலீஸ் நுழைந்துவிட்டதாமே?
அப்பா ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான அக்கப்போரின் உச்சமாகத்தான் ஒட்டு கேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரம் அம்பலமானது.
இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தரப்பு, விழுப்புரம் எஸ்பி சரவணன் மற்றும் கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசிடம் புகார் கொடுத்திருந்ததையும், இந்த பிரச்சனையில் முடிவெடுத்து சொல்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதையும் நாம் எழுதி இருந்தோம்.
இந்த பின்னணியில், கடலூர், மயிலாடுதுறை பயணங்களை முடித்துவிட்டு வந்த முதல்வர் ஸ்டாலின் தரப்பு, டாக்டர் ராமதாஸ் விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளது. அப்போது, வியாழக்கிழமையன்று வழக்கமாக பத்திரிகையாளர்களை ராமதாஸ் சந்திக்கப் போகிறார்.. இந்த சந்திப்பில், புகார் கொடுத்தும் அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என கடுமையாக விமர்சிக்க இருக்கிறார் என தைலாபுரம் வட்டாரத்து தகவலும் பகிரப்பட்டதாம்.
இதனையடுத்தே தற்போது அரசு தரப்பு முந்திக் கொண்டது. தைலாபுரத்தில் இன்று ஜூலை 17-ந் தேதி செய்தியாளர்களை ராமதாஸ் சந்திப்பதற்கு முன்னதாகவே, கிளியனூர் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையிலான 3 பேர் கொண்ட டீம் தோட்டத்துக்குள் நுழைந்தது. தோட்டத்தின் அமைப்புகளை முழுமையாக ஆராய்ந்தது; இந்த தோட்ட வீட்டுக்குள் நுழையக் கூடிய பாதைகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தது.
இதன் பின்னர் தோட்டத்தில் பணிசெய்து வந்த 5 பேரை விசாரணை வளையத்துக்குள்ளும் இன்ஸ்பெக்டர் கலையரசி டீம் கொண்டு வந்தது. அதற்குள், செய்தியாளர்களை ராமதாஸ் சந்திக்க தொடங்கிவிட்டார் என்கிற தகவல் வர விசாரணையை அப்படியே நிறுத்தியது போலீஸ் டீம்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பின்னர், கைப்பற்றப்பட்ட ஒட்டுக் கேட்பு கருவி எங்கே என போலீஸ் டீம் கேட்க, தனியார் ஏஜென்சியிடம் கொடுத்துள்ளோம் என பதில் வந்துள்ளது.
தைலாபுரம் தோட்டத்தின் இந்த பதில் போலீசாரை அப்செட் ஆக்கிவிட்டதாம். இவ்வளவு பெரிய சம்பவத்தின் மிக முக்கியமான சாட்சி ஆவணமே இந்த ஒட்டுக் கேட்பு கருவிதான். தனியார் ஏஜென்சியிடம் போய்விட்ட நிலையில் என்னதான் நம்மிடம் ஒப்படைத்தாலும் நம்பகமான சாட்சியமாக அந்த கருவியை எப்படி ஏற்பது? போலீசார் விசாரணை செய்ய புகார் கொடுத்துவிட்டு ஒட்டு கேட்பு கருவி தனியாரிடம் இருக்கிறது என்று சொன்னால் எப்படி? என்கின்றனராம் போலீஸ் வட்டாரங்கள்.
ஒட்டு கேட்பு கருவி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் 5 பணியாளர்களிடமும் விசாரணை நடத்த இருக்கும் போலீஸ் டீம் அடுத்ததாக டாக்டர் ராமதாஸிடமும் விசாரிக்க இருக்கிறதாம்.
போலீஸ் தரப்பைப் பொறுத்தவரையில், தைலாபுரம் தோட்டம் முழுவதுமாக ஒத்துழைப்பு தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம். இதனை உறுதிப்படுத்தும் வகையில் டாக்டர் ராமதாஸும், அடுத்த 2 நாட்களில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது யார்? பின்னணி யார்? என்பது தெரிந்துவிடும் என கூறியிருந்தார்.
தைலாபுரம் தோட்டத்தின் ஒவ்வொரு நகர்வுகளையும் வைத்த கண் வாங்காமல் கண்காணித்து வரும் அன்புமணி தரப்புக்கு பதற்றம் குறையவே இல்லையாம்.. அடுத்த அம்பு எங்கிட்டு இருந்து வருமோ என வியர்த்துபோன படியே ‘அறிக்கைகளில்’ ரொம்ப பிசியாக இருக்கிறதாம் அன்புமணியின் பனையூர் பங்களா

திமுகவின் அறிவாலயம் ‘அகம் மகிழ்ந்து’ இருக்கிறதாமே..
ஆமாம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஜூலை 17-ந் தேதி திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை காணொலி மூலம் நடத்தினார். இந்தக் கூட்டம் முழுவதுமே ஸ்டாலின் ரொம்பவே உற்சாகமாக இருந்தாராம்.
இன்றைய மா.செ. கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய திமுகவினர், “ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி ரொம்பவே வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதால் முதல்வர் ஸ்டாலினும் ரொம்ப சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். 30% வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்ற இலக்கை மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி டீம் தாண்டிவிட்டது. பெரும்பாலான மாவட்டங்கள் 30%- இலக்கை நெருங்கிவிட்டன. சில மாவட்டங்களில்தான் தொய்வு இருக்கிறது. இதனை எல்லாம் இன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், 30% உறுப்பினர் சேர்க்கை இலக்கு என்பதை 15 நாட்களிலேயே பெரும்பாலான மாவட்டங்கள் எட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் 40% வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது என அறிவிப்பை சிஎம் வெளியிட்டார்” என்றனர்.
அதேநேரத்தில் கூட்டம் முடிந்ததும் சில மா.செக்கள் ‘சகாக்களை’ தொடர்பு கொண்டு, “போற போக்கைப் பார்த்தால் வாக்காளர்களில் 50% பேரை திமுகவின் உறுப்பினர்களாக சேர்த்தாக வேண்டும் என்ற உத்தரவை மேலிடம் பிறப்பித்தாலும் ஆச்சரியமில்லையப்பா” என கலக்கத்துடன் பகிர்ந்து கொண்டதாக என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.