டிஜிட்டல் திண்ணை: பிறந்தநாள் பரிசு… உருவாகிறது எடப்பாடி பேரவை!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் இன்பாக்சில் ஒரு மெசேஜ் வந்தது. ‘நீங்கள் எடப்பாடியார் பேரவையில் இணைய விருப்பமா? அப்படியென்றால்… தங்களது பெயர், வயது, முகவரி, படிப்பு, தொழில், அலைபேசி எண், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, புகைப்படம் ஆகிய விவரங்களுடன் ….. என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டுகிறோம்” என்றது அந்த மெசேஜ்.

என்ன ஏதென வாட்ஸப் உடனடியாக விசாரித்து அதன் பின் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

”அதிமுகவில் ஏற்கனவே அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெயலலிதா பேரவை ஆகியவை கட்சியின் அதிகாரப்பூர்வ துணை அமைப்புகளாக உள்ளன.

இந்த வரிசையில் விரைவில், ‘புரட்சித் தமிழர் எடப்பாடியார் பேரவை’ என்ற அமைப்பு உதயமாக இருக்கிறது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது என்றும், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளாவிட்டால் அதிமுகவை உடைக்க பாஜக முயற்சிக்கிறது என்றும் சமீப நாட்களாக பரபரப்பான செய்திகள் உலா வருகின்றன.

ஆனால் எடப்பாடியோ, ‘அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள் மூக்குடைந்து போவார்கள். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. ஜனநாயக ரீதியான இயக்கம் அதிமுக’ என்று சொல்லி வருகிறார். குறிப்பாக இன்றைக்கு (மார்ச் 23) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை 100 சதவிகிதம் கட்சியில் மீண்டும் சேர்க்க மாட்டோம்’ என்று பதிலளித்தார்.

இந்நிலையில் அதிமுகவில் எடப்பாடியின் ஆதிக்கத்தை மேலும் அதிகமாக்குகிற வகையில்  புரட்சித் தமிழர் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை கட்டியெழுப்பும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கான வேலைகளை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆதனூர் வீரமணி என்ற இளைஞர் சத்தமில்லாமல்  செய்து வருகிறார்.

தகவல் அறிந்து அவரிடமே அலைபேசி செய்து விசாரித்தபோது, ‘இப்போதைக்கு ஒன்றும் சொல்லக் கூடாதுங்க. விரைவில் அதிகாரபூர்வமாக சொல்றோம்’ என்றார்.

ஆனால், இதுகுறித்து சேலம் அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது,

‘உண்மைதான். கட்சியில் எடப்பாடி பழனிசாமி பெயரில் புரட்சித் தமிழர் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.  இதுவரை எந்த கட்சியிலும் இணையாத ஒரு லட்சம் படித்த இளைஞர்கள் புரட்சித் தமிழர் எடப்பாடி பேரவையில் ஆர்வமாக சேர்ந்துள்ளனர்.

2026ல் எடப்பாடி பழனிசாமியை  முதல்வராக்க எவ்வித பிரதிபலனும் பாராமல் உழைக்கும் வகையில், அன்று எப்படி ஜெயலலிதாவுக்கு தன்னெழுச்சியாக  உருவான ஜெயலலிதா பேரவையைப் போன்று எடப்பாடி மீது தனிப்பட்ட முறையில் பேரன்பு கொண்ட இளைஞர்களை உருவாக்குவது தான் இந்த பேரவையின் நோக்கம்.

மே 12-ல் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளில முறையாக பேரவை துவங்கப்பட்டு தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிக்க உள்ளோம். Edappadi Palanisamy Peravai emerge

இதற்காக சாதி, மதம், இனம், கட்சிகள் கடந்த இளைஞர்களை ஒன்று திரட்டி வருகிறோம். உரிய தகுதியும், வாய்ப்பும் உடையவர்களை மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்புகளில் நியமிக்க தேர்வு நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் ஆர்வமுடன் இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். இதன் ஒரே நோக்கம் எந்தக் கட்சியிலும் சேராத இளைஞர்கள்  ஒன்று கூடி 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க தீவிரமாகப் பணியாற்றுவது மட்டுமே.

இந்த பேரவை விஷயமெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். விரைவில் எம்ஜிஆர் மன்றம், ஜெ பேரவை போல எடப்பாடி பேரவையும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ துணை அமைப்புகளில் ஒன்றாக மாறும்’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share