டிஜிட்டல் திண்ணை: விட்டு விடாத திமுக.. விடாப்பிடியாக தேமுதிக.. பதற்றத்தில் பாஜக.. அதிமுகவில் ‘அதிருப்தி’?

Published On:

| By Mathi

DT DMDK DMK AIADMK

வைஃபை ஆன் செய்ததும், இனி இன்றைய தேர்தல் கள நிலவரம்’ என்றுதான் செய்தி அறிக்கை வாசிக்கனும் போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

அதுசரி.. இன்றைய கள நிலவரம் என்னப்பா?

ADVERTISEMENT

உமக்கும் கிண்டல்தான்யா.. தேர்தல் தேதியே அறிவிக்கப் போறாங்க.. ஆனால் இன்னமும் கூட்டணிகள் பைனலாகாமலேயே இழுபறியா இருக்கு..

இந்த முறை ஏன் இப்படி இழுபறின்னு திமுக தரப்புல நாம கேட்டப்ப, “போன 2021 தேர்தலைவிட இந்த முறை ரொம்பத்தான் இழுபறி.. எங்க கூட்டணியில போன முறை, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொமதேக, வேல்முருகன் தவாக, பார்வார்டு பிளாக், ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சின்னு அத்தனை பேருகிட்டயும் சபரீசன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாரு.. அப்ப ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை சீட்டுன்னு ‘நம்பர்ஸ்’ ஓரளவுக்கு பைனலாகிட்டாங்க.. அதுக்கு அப்புறமா பிப்ரவரி 21,2021-ல் 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைச்சு எந்தெந்த தொகுதிகள்னு பைனல் செஞ்சோம்..

ADVERTISEMENT

அதே பார்முலாவில்தான் இப்பவும் மூவ் செய்யுறோம்.. ஆனா காங்கிரஸ்தான், ”முதல்ல குழுவை அமையுங்க.. அங்க நம்பர்ஸ், தொகுதி எல்லாம் பேசிக்கலாம்னு” சொல்றாங்க.. இத்தனைக்கும் சபரீசன் ஏற்கனவே டெல்லியில கார்கேவை சந்தித்து 25 முதல் 28 சீட் வரைன்னும் பேசிட்டும் வந்தாரு.. ஆனாலும் குழு அமைச்சாதான் ஆச்சுன்னு காங்கிரஸ் ஒத்தக்காலில் நிக்குது..

ஏன்னா, பேச்சுவார்த்தை குழுவுல உட்கார்ந்து 60 சீட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்னு காங்கிரஸ் ‘ஸ்கெட்ச்’ போட்டிருக்குன்னு சொல்றாங்க..

ADVERTISEMENT

இதை எல்லாம் தெரிஞ்சுகிட்டுதான் நம்பர்ஸை முடிவு செஞ்சுட்டு குழுவை அமைப்போம்னு சிஎம் ஸ்டாலின் இருக்கிறாரு..” என இழுபறிக்கான காரணத்தை சொல்கின்றனர்.

சரிய்யா.. தேமுதிகவோட ‘இன்றைய’ நிலவரம் என்னய்யா?

தேமுதிகவோட திமுகவும் தீவிரமா பேசிகிட்டு இருக்கு.. அமைச்சர் எ.வ.வேலுதான் இந்த பேச்சுவார்த்தையை நடத்துறாரு..

தேமுதிகவுக்கு 9+1 சீட் கொடுக்கலாம்னு சிஎம் ஸ்டாலின் முடிவு செஞ்சிருக்காருன்னு சொன்னோம் இல்லையா? தேமுதிகவோ அதிமுக கூட்டணியில அன்புமணி பாமகவுக்கு 18+1 கொடுக்கிறாங்க.. அதே நம்பர்ஸ்தான் எங்களுக்கும் வேணும்னு பிடிவாதமாக கேட்கிறாங்களாம்..

“ஆமா சார்… தேமுதிக 18+1-ன்னு ஆரம்பிச்சு 14+1-ல் வந்திருக்காங்க.. ஆனா சிஎம் 9+1 வரைக்கும் ஓகே சொல்லியிருந்தாரு.. அதுக்கே கூட்டணி கட்சிகள்கிட்ட பேசிதான் அவங்க சீட்டை குறைச்சுதான் இவங்களுக்கு கொடுக்கனுங்க்லிற நிலைமைதான்..

தேமுதிக ரொம்பவே பிடிவாதமா இருக்கிறதால 10+1 ன்னு சிஎம்கிட்ட பேசி கன்வீன்ஸ் செய்ய முடியுமான்னு பார்ப்போம்னு தேமுதிககிட்ட சொல்லி இருக்காங்க.. இருந்தாலும் இன்னமும் பிடிகொடுக்காமலேயே பிரேமலதா இருக்காங்க.” என்கின்றன அறிவாலய தகவல்கள்.

தேமுதிகவோட திமுக பேச்சுவார்த்தை ரொம்பவே சீரியஸா போறதால பாஜக ரொம்பவே பதறுது.. எப்படியாவது தேமுதிகவை கூட்டணிக்குள்ள கொண்டு வரனும்னு துடியா துடிக்குது.. அதிமுகவும் எப்படியாவது தேமுதிகவை கொண்டுவரனும்னு தீவிரமா முயற்சிக்குது.. திமுகவுல எ.வ.வேலு, காலையில தேமுதிககிட்ட பேசுனா மாலையில அதிமுக எஸ்.பி. வேலுமணி தேமுதிகவோட பேச்சுவார்த்தை நடத்துறாரு..

அதிமுக சீனியர்கள்கிட்ட நாம பேசுனப்ப, “தேமுதிகவை கூட்டணிக்குள்ள கொண்டுவரனும்னுதான் போராடுறோம்.. ஏற்கனவே பாமக அன்புமணி எங்க கூட வந்துட்டாரு.. பாமகவைப் போல வட மாவட்டத்துல கணிசமான ஓட்டு வெச்சிருக்கு தேமுதிக.. அவங்களும் எங்க கூட வந்துட்டா எங்களோட வெற்றி நிச்சயம்னு பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிசாமி) சொல்றாரு.. அதனாலதான் தேமுதிகவை கொண்டு வந்துடனும்னு நாங்களும் பேசுறோம்.. ” என்றனர்.

அத்துடன், “டெல்லிக்கு போய் அமித்ஷாவை பொதுச்செயலாளர் சந்திச்சப்ப சில கணக்குகள் சொன்னாரு.. அதாவது, அதிமுகவுக்கு 28% ஓட்டு இருக்கு.. திமுக எதிர்ப்பு ஓட்டு 6% + கூட்டணி கட்சிகள் ஓட்டு 6%.. மொத்தமா 40% ஓட்டு ஈஸியா வாங்கிடலாம்.. ஆட்சி அமைச்சுடலாம்னு அமித்ஷாகிட்ட அசால்ட்டா சொன்னாரு பொதுச்செயலாளர்..

ஆனா அமித்ஷாவோ, அப்படி எல்லாம் இல்லை.. நீங்க சொல்றது Wrong Data.. 2024 லோக்சபா எலக்‌ஷனில அதிமுக தனியாதானே நின்னுச்சு.. அப்ப வாங்குனது 20.46% மட்டும்தான்.. எங்களுக்கு வந்துருக்கிற ரிப்போர்ட் இப்ப இருக்கிற நிலைமையில எலக்‌ஷன் நடந்தா அதிமுகவுக்கு 80 சீட் மட்டும்தான் கிடைக்கும்.. அதனால டிடிவி, ஓபிஎஸ், தேமுதிக எல்லாத்தையும் கொண்டு வந்துடுங்க.. அப்பதான் ஈஸியா ஜெயிக்க முடியும்னு அழுத்தமாகவே சொன்னாரு அமித்ஷா.

அதுக்கு அப்புறம்தான் ஒருவழியா டிடிவி தினகரனை கூட்டணியில சேர்க்க ஓகே சொன்னாரு எங்க பொதுச்செயலாளர்.. இப்ப தேமுதிகவையும் விட்டுவிடாம பேச்சுவார்த்தை நடத்திகிட்டு இருக்கோம்..” என்கின்றனர்.

அதோட, அதிமுகவுக்குள்ள சலசலப்பு முணுமுணுப்பு எல்லாம் கிளம்பியிருக்கிற தகவலையும் ஷேர் செஞ்சாங்க அந்த சீனியர்ஸ்.. “எங்களோட[ பொதுச்செயலாளர்(எடப்பாடி) இப்பவே முதல்வராகிட்ட மாதிரியே நடந்துக்கிறாரு.. எங்களை மாதிரி சீனியர்ஸ்கிட்ட எந்த ஒரு டிஸ்கஷனும் வெச்சுக்கிறதே இல்லை.. கம்ப்ளீட்டா குடும்பத்தை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கிறாரு.. மா.செ.க்கள் கூட்டத்துல கூட ‘உங்களை எல்லாம் எம்.எல்.ஏ, அமைச்சராக்கனும்னு நினைக்கிறேன்.. எனக்கு என்ன நான் முதலமைச்சர் பதவி எல்லாம் பார்த்துட்டேன்னு எங்ககிட்ட இருந்து ரொம்பவே விலகி நிற்கிறமாதிரியே பேசுறாரு.. ரொம்ப வருத்தமா இருக்கு சார்” என சொல்வதாக டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share