வைஃபை ஆன் செய்ததும், ”எத்தனை சூறாவளிதான் வீசுமோ?” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்
என்னய்யா.. கோடையில சூறாவளியை பத்தி பேசுறீரு?
அரசியல் சூறாவளியை பத்தி சொல்றேன்யா.. அசெம்பிளி எலக்ஷன் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவே ராஜ்யசபா தேர்தல் மார்ச் 16-ந் தேதி நடக்குதே..
ராஜ்யசபா தேர்தலுக்கு மார்ச் 5-ந் தேதிதான் நாமினேஷன் தாக்கல் செய்ய லாஸ்ட் டே.. அதனால எல்லா கட்சிகள் கவனமும் இப்ப ராஜ்யசபா எலக்ஷன் பக்கம் திரும்பியிருக்கு..
தமிழ்நாட்டுல 6 ராஜ்யசபா எம்பிக்களோட பதவி காலியாகுது.. திமுகவுல திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவுல தம்பிதுரை, அதிமுக கோட்டாவுல ஜிகே வாசன் பதவி காலம் முடியுறதால தேர்தல் நடக்குது..
திமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்.பி. இடம் இருக்கு.. இதுல ஒன்னு காங்கிரஸுக்கு கன்ஃபார்ம் ஆகிடுச்சு… அதேபோல தேமுதிகவுக்கும் ஒரு சீட் கொடுக்குது திமுக..
இந்த 2 சீட் போக 2 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் திமுகவுல யாருக்குன்னு என பரபரக்கும் டிபேட் நடந்துகிட்டு இருக்கு..
திருச்சி சிவாவைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப சீனியர்.. திமுகவில் 1970களில் இருந்து தீவிரமாக செயல்படுகிறவரு திருச்சி சிவா, இப்ப கட்சியோட துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார் .. 1976-ல் எமர்ஜென்சியில மிசா சட்டத்தின் கீழ் ஒரு வருஷம் ஜெயில்ல இருந்தாரு..
1996-ல் புதுக்கோட்டை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அப்புறமா 4 முறை அதாவது 2000, 2007, 2014, 2020-ல் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தாரு.. அங்கே திமுகவோட கொள்கைகளை ‘இடிமுழக்கமாக’ முழங்கியவர் திருச்சி சிவா..
5-வது முறையாக மறுபடியும் ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பு கொடுங்கன்னு ஸ்டாலினிடம் திருச்சி சிவா கேட்டுப் பார்த்தார்.. ஆனால் திருச்சி சிவாவுக்கு மீண்டும் ‘சான்ஸ்’ இல்லை என ஸ்டாலின் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.
ஓஹோ.. என்.ஆர். இளங்கோவுக்கு மீண்டும் சான்ஸ் இருக்கா?
என்.ஆர். இளங்கோ, திமுகவின் சட்டத்துறை செயலாளராகவும் இருக்கிறாரு.. 2014-ல் அரக்கோணம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கலை.. 2020-ல ராஜ்யசபா எம்.பி.யானார். மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவியை கேட்டுப் பார்த்தார் என்.ஆர். இளங்கோ.. ஆனால் அசெம்பிளி எலக்ஷன்ல போட்டியிடுங்க என ஸ்டாலின் சொல்லி இருக்கிறார்… எலக்ஷனிலேயே போட்டியிட விருப்பம் இல்லை என என்.ஆர். இளங்கோ சொல்லி இருக்கிறார்.. அதனால திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது என்.ஆர் .இளங்கோவுக்கு அட்வகேட் ஜெனரல் பதவிக்கான சான்ஸ் இருக்குன்னு சொல்றாங்கய்யா..
அதேபோல கனிமொழி சோமு.. ‘பரம்பரை திமுக’ குடும்பத்தை சேர்ந்தவங்க.. 3-வது ஜெனரேஷன் திமுக.. திமுகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருத்தரான என்.வி. நடராசனின் பேத்தி. கனிமொழியின் அப்பா என்.வி.என்.சோமு திமுகவின் சீனியர் லீடரா இருந்தாரு.. எம்.எல்.ஏ.வாக பின்னர் எம்.பி.யாகவும் இருந்தார்.. மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். அவரு மத்திய அமைச்சரா இருந்தப்ப, அருணாச்சலப் பிரதேசத்துல ஹெலிகாப்டர் விபத்துல இறந்து போனாரு..
என்.வி.என். சோமு மறைவுக்கு பிறகு கனிமொழிக்கு 2011-ல் மாதவரம் தொகுதியிலும் 2016-ல் தி.நகர் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு தந்தார் ஸ்டாலின். ஆனால் கனிமொழி சோமு ஜெயிக்கலை. அதனால 2021-ல் ராஜ்யசபா எம்.பியானார்.
கனிமொழி சோமுவுக்கு 2-வது முறையாக ராஜ்யசாபா எம்.பி. சீட் இல்லை என ஸ்டாலின் சொல்லிட்டாராம்.. அதனால அசெம்பிளி தேர்தலில் மறுபடியும் போட்டியிட வாய்ப்பு கேட்கிறார் கனிமொழி சோமு..
மற்றொருவரான அந்தியூர் செல்வராஜூக்கும் மீண்டும் எம்.பி. பதவி இல்லை என சொல்லிட்டாங்களாம்.. அவரும் ஓகேன்னு சொல்லி இருக்காரு..

சரி அப்ப யாருக்குதான் அந்த 2 எம்.பி. சீட்?
இதை பத்தி விசாரிச்சப்ப, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யா இருந்த புதுக்கோட்டை அப்துல்லா பெயரை முதலில் சொல்றாங்க.. 2021-25-ல் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து திமுகவுக்கே உரித்தான ஆணித்தரமான வாதங்களை வைச்சவரு.. அவரு பேரு லிஸ்ட்டுல இருக்காம்..

இன்னொரு இடத்துக்கு திமுக இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் பெயர் அடிபடுது.. சட்டசபைத் தேர்தலில் எனக்கு சீட் கொடுங்கன்னு கேட்டுகிட்டு இருக்கிறாரு ஜோயல். ஆனால் அவருக்கு தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் நல்ல பெயர் இல்லை; அதனால சீட் தராதீங்கன்னு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணனும் கீதா ஜீவனும் எதிர்க்கிறாங்க..
சரின்னு தூத்துக்குடி மேயர் பதவியாவது கொடுங்கன்னு கேட்டுப் பார்க்கிறார் ஜோயல்.. இதுக்கும் சிக்னல் கிடைக்கலையாம்.. இப்ப ஜோயல் பேரும் ராஜ்யசபா எம்.பி. லிஸ்ட்டுல இருக்கிறதாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
