வைஃபை ஆன் செய்ததுமே, ‘கப்பு முக்கியம்னு காட்டிட்டியே பிகிலு’ என கமெண்ட் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். TVK Vijay AIADMK DMK
ஆமாம்.. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிதான் ‘அரசியல் டவுனில்’ ஒரே டாக்..
“அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக” என்ற பாதையில்தான் தொடக்கம் முதல் தொடர்ந்து விஜய்யின் தவெக பயணித்துக் கொண்டிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் தவெகவின் மூத்த நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர், ‘பாஜகவை விட்டு அதிமுக விலகினால் அதிமுகவுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கலாம்’ என்ற கருத்தை சொல்லி வந்தனர். ஆனால் ஜான் ஆரோக்கியசாமி மட்டும், ‘அதிமுகவை விட நமக்கு ஓட்டு வங்கி அதிகம். விஜய் ஒரு முறை டூர் போய்விட்டு வந்தால் இன்னும் ஓட்டு வங்கி அதிகமாகும்.. இனி தமிழ்நாட்டில் திமுக vs தவெக என்ற நிலைதான்’ என்ற கருத்தை விஜய்யிடம் கூறியிருந்தார்.
இன்னொரு பக்கம், பாஜகவோ தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என இடைவிடாமல் அழைப்பு விடுத்து வந்தது.
இப்படியான சூழ்நிலையில் தவெகவின் செயற்குழு ஜூலை 4-ந் தேதி வெள்ளிக்கிழமையன்று கூடும் என அறிவிக்கப்பட்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தையே அனைத்து ‘அரசியல் கண்களும்’ உற்று நோக்கியபடியே இருந்தன.
தவெக நிர்வாகிகள், தொண்டர்களும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கியமான அறிவிப்பு வெளியாகப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் காலை முதலே குவிந்திருந்தனர்.
தவெக செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தாமதமாகத்தான் தொடங்கியது. ஏற்கனவே, பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அத்தனை பேரின் பல்ஸையும் ரொம்பவே கூட்டித்தான் விட்டது இந்த தாமதம்.

இந்த தாமதத்துக்கு காரணம் என்ன என்பது, சரவெடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதுதான் எல்லோருக்குமே புரியவும் தொடங்கியது.
தவெக செயற்குழுக் கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது? எந்தெந்த பிரச்சனைகளை முன்வைப்பது உள்ளிட்ட கருத்துகள் நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டன. பின்னர் பேசிய விஜய், “வீட்டுக்கு ஒருவரை கட்சியில் சேர்க்க வேண்டும்; தெருவுக்கு இரண்டு பேர் நிர்வாகியாக இருக்க வேண்டும்” என்ற புதிய முழக்கத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து ‘முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்கிற அந்த ‘சிறப்பு தீர்மானத்தை’ ஒரு பெண் முன்மொழிய 2 பெண்கள் வழிமொழிய கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்து போனது; பனையூரில் அரங்கம் அதிர்ந்த அதே நேரத்தில் ஒட்டுமொத்த அரசியல் களமும் தீப்பிடிக்க தொடங்கியது.. இப்போதும் அனல் பறந்து கொண்டிருக்கிறது.
“2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் தலைவர் விஜய்” என்கிற அந்த சிறப்பு தீர்மானம்தான் அரசியல் கட்சிகளின் ‘பல பல’ கனவுகளை தவிடு பொடியாக்கி ‘தந்தனத்தா’ எனப் பாட்டுப்பாட வைத்துக் கொண்டிருக்கிறது.
2-வது தீர்மானத்தை வாசித்தபடியே பேசிய விஜய், “திமுக- பாஜகவுடன் எப்போதும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணியே கிடையாது” என அழுத்தம் திருத்தமாக பிரகடனமாகவே வாசித்தார். பொதுவாக பாஜகவின் பெயரை அவ்வப்போது குறிப்பிட்டு விமர்சிக்கும் விஜய் இந்த முறை அழுத்தம் திருத்தமாக பாஜகவை விளாசித் தள்ளிவிட்டார்.
விஜய்யின் இந்த பேச்சு, ‘என்றேனும் ஒருநாள் பனையூர் (விஜய்) காற்று நம் பக்கம் வீசாமலா போகும்’ என வழிமேல் விழிவைத்தது போல காத்திருந்த பாஜக முகங்களுக்கு ‘சுளீர’ வலியை தந்துவிட்டதுதான்.
தவெகவின் இந்த தீர்மானங்களால் ரொம்பவே அப்செட் ஆகிப் போயிருப்பது அதிமுகதானாம். இது குறித்து நம்மிடம் பேசிய அதிமுகவின் மூத்த தலைவர்கள், “எப்படியும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி கடைசி நேரத்திலாவது வெளியே வந்துவிடுவார்.. அப்போது விஜய்யின் தவெகவுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துவிடுவோம்.. 2026 தேர்தல் சரித்திரம் படைத்துவிடும் என மலைபோல நம்பிக் கொண்டிருந்தோம்.. அத்தனையும் மண்ணோடு போயிருச்சே.. இப்படித்தான் நாங்க புலம்ப முடியும்” என ரொம்பவே ஆதங்கத்தைக் கொட்டினர்.
அதே நேரத்தில் திமுகவின் மூத்த தலைவர்களோ, “ஆஹா.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. அதிமுக + தவெக இணைந்து கூட்டணி அமைத்திருந்தால் தேர்தல் களம் இறுதி நேரங்களில் ரொம்பவே கடுமையாகத்தான் இருந்திருக்கும். திமுக கூட்டணிக்கு டப் ஃபைட் கொடுத்திருக்கும் அந்த கூட்டணி. இப்போ விஜய் தெள்ளத் தெளிவாக தாமே முதல்வர் வேட்பாளர் என அறிவித்து அதிமுகவுடனான கூட்டணிக் கதவை படாரென சாத்திவிட்டதுதான் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி.. நிம்மதியாகவும் இருக்கு” என பூரிப்புடன் பகிர்ந்து கொண்டனர்.
தவெக நிர்வாகிகளும், “இப்போது தலைவர் ரூட்டை கிளியர் செய்து கொடுத்துவிட்டார்.. இனி இறங்கி ஆடி கப்பை ‘பிகிலு’விடம் (விஜய்யிடம்) கொடுக்கிறதுதான் நம்ம வேலை” என சொல்கின்றனர். அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெட்ட சில தவெக தலைமை நிர்வாகிகளும் கூட அப்செட்தான் என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆப்லைனுக்குள் அடைக்கலமானது வாட்ஸ் அப்.