டிஜிட்டல் திண்ணை: அன்புமணி செயல் தலைவர் பதவி ‘அம்போ’.. இனி ராமதாஸுக்கு ‘வானளாவிய அதிகாரம்’!

Published On:

| By vanangamudi

Digital Thinnai PMK Ramadoss

வைஃபை ஆன் செய்ததும், ‘குடுபத்தோடு கேக் வெட்டி கொண்டாடுவதும் எல்லாம் சுகமே சுகம்’ என லயித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

தைலாபுரத்தில் கேக் வெட்டியதுதானே?

ADVERTISEMENT

ஆமாம்.. டாக்டர் ராமதாஸின் மனைவி சரஸ்வதி அம்மையாரின் 77-வது பிறந்த நாள் நேற்று (ஆக.15). தைலாபுரம் தோட்டத்தில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அன்புமணி குடும்பத்தோடு கலந்து கொண்டார்.

அப்ப பாமகவில் பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சோ?

ADVERTISEMENT

அப்படித்தான் போட்டோக்களை பார்த்த உடனே நாமும் நினைச்சோம்.. ஆனால் நடந்ததே வேறயாம்..

என்னதான் நடந்ததாம்?

ADVERTISEMENT

தைலாபுரம் தோட்டத்துக்கு மனைவி சவுமியா, மகள்கள், பேரக் குழந்தைகளுடன் அன்புமணி ஆஜரானார். ராமதாஸின் மகள்கள் ஶ்ரீ காந்தி, கவிதாவும் அங்கே இருந்தனர்.

கேக் வெட்டுவதற்கு முன்னதாக, ‘மாமனார்’ ராமதாஸிடம் மருமகள் சவுமியா, “இதுவரைக்கும் என்ன நடந்திருந்தாலும் என்ன பேசியிருந்தாலும் எல்லாம் போகட்டும்.. எங்களை மன்னிச்சிடுங்க” என ‘எக்ஸ்ட்ரீமாக’ இறங்கி போய் மன்னிப்புக் கேட்டாராம். சவுமியா இப்படி பேசுவதைக் கேட்டு ஶ்ரீகாந்தியும் கவிதாவும் பூரித்து நின்றனராம். ஆனால் ராமதாஸிடம் இருந்து நோ ரியாக்‌ஷனாம். எந்த பதிலுமே சொல்லவில்லையாம் டாக்டர்.

அப்பாவுக்கு வணக்கம் வைக்க அன்புமணி, மகனுக்கு பதில் வணக்கம் வைத்திருக்கிறார் அப்பா. அவ்வளவுதானாம்.. இருவரிடையே பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லையாம்.

கேக் வெட்டி முடித்த பின்னர் விரிவாக பேசலாம் என அன்புமணி குடும்பம் காத்திருந்ததாம்.. ராமதாஸோ, கேக் வெட்டிய கையோடு அறைக்கு போய் கதவை சாத்தியவர்தானாம்.. திறக்கவே இல்லையாம்..

தைலாபுரம் தோட்டத்தில் சுமார் 1.45 மணிநேரம் அன்புமணி தமது குடும்பத்தினருடன் காத்திருந்து பார்த்தும் ‘கதவு’ திறக்கப்படவே இல்லையாம். இதனால் தைலாபுரம் வீட்டில்
‘சாப்பிடாமலேயே’ வருத்தத்துடன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் அன்புமணி.

அப்ப போட்டோக்கள் ரிலீஸ் செய்தது யாராம்?

இது பற்றி தைலாபுரம் வட்டாரங்களிடம் பேசிய போது, அன்புமணி குடும்பம்தான் கேக் வெட்டிய போட்டோக்களை ரிலீஸ் செய்தது.. பாமகவின் சிறப்பு பொதுக் குழு ஆகஸ்ட் 17-ந் தேதி நடக்க இருக்கிறது. அந்த பொதுக் குழுவில் ராமதாஸ் அதிரடியான முடிவுகளை அறிவிக்கப் போகிறார்..

அதாவது பாமகவின் செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற இருக்கிறது.

அத்துடன் பாமகவில் இனி அனைத்து அதிகாரமும் நிறுவனராகிய டாக்டர் ராமதாஸுக்கு மட்டும்தான் என்கிற வகையில் , பாமகவின் கட்சி சட்ட விதிகளிலேயே திருத்தமும் கொண்டுவரப்பட இருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் சமாதானம் பேசுவதற்காக அன்புமணி குடும்பத்துடன் வந்தார். சவுமியாவும் ரொம்பவே உருகிப் பேசிப் பார்த்தார்.. ஆனால் டாக்டர் அய்யாவால் எதையும் ஏற்க முடியலை.. அதனால் அவர் அமைதியாக அறைக்குப் போய்விட்டார் என்கின்றனர்.

பாமக சிறப்பு பொதுக்குழுவில் வேறு என்ன வெடிக்க போகிறதாம்?

தைலாபுரத்தில் ஒட்டுக் கேட்பு கருவி வைக்கப்பட்டது பற்றிய புகார் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை; தனிச்செயலாளர் சாமிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது என பல விஷயங்களை கையில் வைத்துக் கொண்டு எரிமலையாக ராமதாஸ் வெடிக்கப் போகிறார்.. விடியும் வரை காத்திருங்கள் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share