வைஃபை ஆன் செய்ததும், “அலையடிச்சா ஓயும்தானே! புயலடிச்சா போகும்தானே! ஓயலையே.. போகலையே..” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா ‘அழுத்தம்’ அதிகமாகிடுச்சா? ‘புலம்பல்’ பயங்கரமா இருக்கே?
நமக்கு என்னய்யா அழுத்தம்.. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாதிரி இப்ப அரசியலிலும்…
ஓஹோ.. விஜய் பேச்சை வைச்சு ஆரம்பிக்கிறீரா? சொல்லுமய்யா.. சொல்லும்..
மாமல்லபுரத்துல விஜய் நேத்து பேசும் போது, ”அழுத்தம் இருக்கு.. அழுத்தத்துக்கு எல்லாம் பயப்படற ஆளா நானு? இந்த மூஞ்சியை பார்த்தா அப்படியா தெரியுது?”ன்னு ரொம்பவே ஆவேசமா சொல்லி இருந்தாரு.. அப்புறமா ‘மக்களுக்கு அழுத்தம்’ இருக்குன்னும் டக்கு மாத்தியிருந்தாரு..

தான் அனுபவிக்கிற ’டெல்லி அழுத்தங்களை’தான் அப்படி பட்டவர்த்தமான போட்டுடைச்சுட்டார் விஜய்.. டெல்லி பிரஷர் பத்தி நாம ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.. இப்ப ஓப்பனா விஜய் பேசுற அளவுக்கு என்ன நெருக்கடி?ன்னு டெல்லி சோர்ஸ்களிடம் பேசுனப்ப, “அமித்ஷாவுக்கு வேண்டிய அதிகாரிகள் தொடர்ந்தும் விஜய்கிட்ட பேசிகிட்டே இருக்காங்க.. கூட்டணிக்கு வந்துதான் ஆகனும்னு டெல்லி முடிவோட இருக்கு சார்.. விஜய்தான் பிடிகொடுக்காமலேயே இருக்கிறாரு.. ” என்கின்றனர்.
”ஐஆர்எஸ் அருண்ராஜ் மூலமாகத்தான் அமித்ஷா தரப்பு அதிகாரிகள் விடாம பேசிகிட்டு இருக்காங்க..
இன்னொரு பக்கம் விஜய்க்கு ’பெர்சனலா’ ”ரொம்ப ரொம்ப வேண்டியவங்க” மூலமாகவும் டெல்லி தரப்பு பேச வைச்சிருக்கு..
இந்த நிலையில சனிக்கிழமையன்னைக்கு அருண்ராஜ்கிட்ட பேசுன விஜய், “ராகுல் காந்தி என்கிட்ட பேசுகிட்டுதான் இருக்காரு.. இனிமேல் நீங்க டெல்லி பாஜக ஆட்கள் போனடிச்சாலும் எடுக்காதீங்க.. போனை கூட சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வேற நம்பரை யூஸ் பண்ணுங்க.. டெல்லி ஆட்கள் யார்கிட்டேயும் நீங்க எதுவுமே பேசவே வேண்டாம்”னு கட் அண்ட் ரைட்டாக சொல்லிட்டார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை செயல்வீரர்கள் கூட்டத்துல பேச ஆரம்பிக்கும் போதே, இதை எல்லாம் மனசுல வெச்சுகிட்டுதான் “அழுத்தம் அதிகமாக இருக்கு.. இதுக்கு எல்லாம் பயப்படுற ஆளா நானு?”ன்னு ஓப்பனாகவே உடைச்சு பேசிட்டாரு விஜய்” என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஓஹோ.. அதிமுகவையும் அட்டாக் செஞ்சு பேசியிருக்காரே விஜய்?
ஆமாய்யா.. பாஜக கூட்டணிக்கு போகவே போறது இல்லைன்னு முடிவோட இருக்கிறார் விஜய்.. இதை பத்தி விஜய் நடத்துன டிஸ்கஷனில கூட, ”இப்படி நெருக்கடி தர்றாங்களே.. இனியாவது பாஜக- அதிமுக கூட்டணியை வெளிப்படையாகவே விமர்சிப்போம்”னு விஜய் கூட இருக்கிறவங்க சொல்லி இருக்காங்க.. அப்ப, “ஒவ்வொரு ஸ்டெப்பா போவோம்.. முதல்ல அதிமுகவை பேசுவோம்.. அடுத்து பாஜகவை பத்தி பேசுவோம்’னு விஜய் சொல்லிட்டுதான், ”அதிமுக ஊழல் கட்சி; டெல்லிக்கு அடிமையா இருக்கிற கட்சி.. அண்ணாவையே மறந்துட்ட கட்சி”ன்னு விளாசிட்டாரு..
விஜய் இப்படி பேசி முடிச்சதுல இருந்து இப்ப வரைக்கும் தவெக- அதிமுக இடையே சரமாரியாக சோசியல் மீடியாவுல சண்டை நடக்குதுய்யா..
விஜய் ’நின்னு நிதானமா அடிக்கிறாரோ’.. ஆதவ் அர்ஜூனா பேசுனதும் பெரும் கொந்தளிப்பாகிடுச்சே..
ம்ம்.. மாமல்லபுரம் மீட்டிங்குல விசிகவை வெறும் ‘20 பேர் கட்சி’ன்னு தெள்ள தெளிவாக விமர்சிச்சு பேசினாரு ஆதவ் அர்ஜூனா.. அவ்வளவுதான் ’சுயமரியாதை’ சிறுத்தைகள் சும்மா இருப்பாங்க.. ரொம்பவே சீறிட்டாங்க..
இதனால நான், “விசிகவுல 20 பேர் திமுக ஆதரவாளர்கள் இருக்காங்க.. அவங்களைத்தான் சொல்ல வந்தேன்”ன்னு ஆதவ் நீட்டி முழக்கி விளக்கம் கொடுத்தாரு… ஆனா, “பேசுன வீடியோவுல தெளிவா இருக்கே.. எங்களை 20 பேர் கொண்ட கட்சின்னு சொல்லிட்டு இப்ப என்னதுக்கு பல்டி.. நாவை அடக்கி பேசலைன்னா நடமாடவே முடியாது.. பிரசாரத்துக்கு இறங்கவே முடியாது..”ன்னு ‘பொளந்துகட்டு’றது விசிக மட்டுமல்ல.. திமுக, பெரியாரிஸ்டுகளும் சேர்ந்து ஆதவ்வை கும்மி எடுக்கிறாங்கப்பா..

ஜனநாயகன் கேஸில நாளைக்கு ஜனவரி 27-ந் தேதிதான் தீர்ப்பு.. புரொக்டஷன்ஸ் கம்பெனி போட்ட அப்பீல் மனு மீது ஹைகோர்ட் தலைமை நீதிபதி பெஞ்ச் தீர்ப்பளிக்க இருக்குது..
இந்த தீர்ப்பு எப்படி இருக்கும்? தீர்ப்பு நெகட்டிவ்வா வந்தா சுப்ரீம் கோர்ட்டுல எப்படி மூவ் பண்றதுன்னு விஜய் இன்னொரு பக்கம் ரொம்ப சீரியஸா பேசிகிட்டு இருக்கிறாரு..
சீனியர் லாயர்ஸ்கிட்ட விஜய் டிஸ்கஷன் நடத்துனப்ப, ஒருவேளை தலைமை நீதிபதியும் 2-வது நீதிபதியும் Split Verdict கொடுத்துட்டா என்ன பண்ணலாம்னும் பேசியிருக்காங்க.. அதாவது 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை கொடுத்தா 3-வது நீதிபதி உள்ளே வந்து தீர்ப்பை பைனல் செய்யனும்.. அப்படிங்கிறப்ப இன்னும் லேட்டாகும்.. அப்படின்னா சுப்ரீம் கோர்ட் போக முடியுமா?ன்னும் டிஸ்கஷன் நடந்துருக்கு..
அதோட விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி டெல்லிக்கு போய் சீனியர் லாயர்ஸ்கிட்ட இதை பத்தி பேசியிருக்காரு..
இந்த மாதிரி ரொம்ப சீரியசா பேசிகிட்டு இருக்கும் போது ‘நெகிழ்ச்சியான’ சம்பவமும் நடந்திருக்குய்யா..
‘ஜனநாயகன்’ படத்தை எப்படியாவது ரிலீஸ் செஞ்சிடனும்னு விஜய் ரொம்பவே தீவிரமா இருக்கிறதை பார்த்த புரடொக்ஷன்ஸ் நிறுவனம், ” சார் நீங்க உங்க பொலிட்டிக்கல் ஸ்டேண்ட் என்னவோ அதுல உறுதியா இருங்க.. எங்களுக்காக எல்லாம் மாத்திக்காதீங்க.. என்ன நடந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம்.. நீங்க கவலைப்படாதீங்க.. நிச்சயம் ஹைகோர்ட்டுல நல்ல தீர்ப்பு வரும் சார்.. பிப்ரவரி 6-ந் தேதி நாம படத்தை ரிலீஸ் செஞ்சுடுவோம்.. நல்லதே நடக்கும்சார்”னு ஆறுதலா பேச பேச விஜய் அவங்களை கட்டி பிடிச்சு நன்றி தெரிவிச்சிருக்கார்..
இப்ப எல்லா கண்களுமே ‘நாளைய தீர்ப்பு’க்காக காத்திருக்கிறதுய்யா..

டெல்லியில பார்லிமெண்ட் கூடுதே.. விசேஷம் இருக்காய்யா?
ஆமாய்யா.. முக்கியமான விஷயம் இருக்கு.. நாளை மறுநாள் ஜன.28-ல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குது.. இதை ஒட்டி சிஎம் ஸ்டாலின்கிட்ட திமுக எம்.பிக்கள் பேசுனாங்க..
அப்ப சீனியர் எம்.பிக்கள், “நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தொடர்ந்தும் அப்படியேதான் பேசிகிட்டு இருக்காரு.. இப்ப கூட சென்னையில நடந்த பங்ஷன்ல, “எனக்கு நாலரை வருஷம் பதவி இருக்கு.. அதுக்குள்ள தகுதி நீக்கம் செஞ்சுட மாட்டாங்க’ன்னு கிண்டலடிச்சு பேசியிருக்காரு.. அதே மாதிரி ”சனாதன தர்மம் நிலைக்கனும்னு” ஓபனா பேசியும் இருக்காரு.. அவருக்கு எதிரா நாம இந்த முறையாவது இம்பீச்மெண்ட் தீர்மானத்தை கொண்டுவர வைக்கனும்.. “ன்னு சொல்லி இருக்காங்க..
ஆனால் சில எம்.பிக்கள், “இம்பீச்மெண்ட் நோட்டீஸ் கொடுத்துட்டோமே.. அதுவே போதாதா? நம்ம தீர்மானம் தோற்கத்தானே போகுது.. அதுக்கு ஏன் இவ்வளவு மெனக்கெடனும்?”னும் சொல்லி இருக்காங்க..
ஆனாலும் சீனியர்ஸோ, “இம்பீச்மெண்ட் தோற்கும்னு தெரிஞ்சுதானே இந்த வேலையை செஞ்சிருக்கோம்.. முழுசாவே இறங்கிடுவோம்.. ரிசல்ட்டை பத்தி எதுக்கு கவலைப்படனும்.. ஜிஆர் சுவாமிநாதனை விட்டுவிடக் கூடாதுன்னு”ம் சீரியசாகவே பேசியிருக்காங்க என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
