ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனிடம் அமித்ஷா சொன்ன ‘அந்த விஷயம்’- அதிமுகவை ‘பந்தாடும்’ நிர்மலா சீதாராமன்

Published On:

| By Minnambalam Desk

Digital thinnai : amit shah turn the sengottaiyan against eps and admk

வைஃபை ஆன் செய்ததும், ‘ஏ குழப்பமே.. உன் பெயர்தான் அண்ணா திமுகவா?’ என டிரோல் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

எந்த காலத்தில்தான் அதிமுகவில் குழப்பம் இல்லாமல் இருந்தது?

ADVERTISEMENT

செங்கோட்டையன் செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசினார் அல்லவா? அன்றைய தினமே நமது மின்னம்பலத்தில், “டிஜிட்டல் திண்ணை: சசிகலாவின் ‘செங்ஸ்’ ஆபரேஷன்- எடப்பாடிக்கு எதிராக ’10 தலைகள்’? அமித்ஷாவுடன் சந்திப்பு? திகுதிகு அதிமுக!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறாராம்.. அதேபோல ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வரும் 10, 11-ந் தேதி எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் வருகிறார்.. இதில் செங்கோட்டையன் கலந்துகொள்ள மாட்டார்” என எழுதி இருந்தோம்.

தற்போது நாம் சொன்னபடியே அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.

ADVERTISEMENT

ஆமாம்.. ஹரித்வார் செல்வதாக பேட்டி கொடுத்துவிட்டு திடீரென டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்திக்கிறார் என திருக்கோவிலூர் தொகுதி டி.கீரனூரில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு போய்க் கொண்டிருந்த எடப்பாடிக்கு தகவல் கிடைக்க செம்ம அப்செட்.. ஏற்கனவே ஓபிஎஸ் இப்படி சந்திக்க முயற்சி செய்த போது நம்மால தடுக்க முடிந்தது.. இப்ப செங்கோட்டையன், அமித்ஷாவை சந்திப்பதை தடுக்க முடியவில்லையே என்கிற விரக்தி இன்னொரு பக்கம்..

ADVERTISEMENT

இந்த டென்ஷனுடன் டி.கீரனூர் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சேலம் ரிட்டர்ன் ஆனார் எடப்பாடி. இந்த பயணத்தின் போது அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு குறித்து செல்போனில் அழைத்தவர்களிடம் பேசிக் கொண்டே இருந்தார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

சரி.. டெல்லியில் அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பில் என்ன நடந்தது?

டெல்லியில் அமித்ஷா வீட்டுக்கு செங்கோட்டையன் போனதே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன்தான். அவரது காரில்தான் செங்கோட்டையன், அமித்ஷா வீட்டுக்கு போனார்.

ஓஹோ.. அவங்களுமா? என்ன சொன்னாராம் அமித்ஷா?

செங்கோட்டையனிடம் பேசிய அமித்ஷா, “எல்லோரும் ஒன்றிணைந்தால் அதிமுக- பாஜக கூட்டணி எளிதாக ஜெயிக்க முடியும்.. ஆனால் அதிமுகவில் இருந்து வெளியே போனவங்களை மீண்டும் சேர்க்கவே முடியாதுன்னு உறுதியாக சொல்றாரு எடப்பாடி.. சரி… உங்களுக்கு ஆதரவாக இதேபோல வெளியே இருப்பவங்களை அதிமுகவில் சேர்க்கனும்னு சொல்றவங்க எத்தனை பேரு?” என கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “கட்சியில சீனியர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இதை ஆதரிக்கிறாங்க.. இப்படி எல்லாரையும் ஒருங்கிணைச்சாதான் ஜெயிக்க முடியும் என அவங்களும் நினைக்கிறாங்க.. வேலுமணி, தங்கமணி போன்றவங்க எல்லாம் இதை முழுமையாக ஆதரிக்கிறாங்க” என விவரித்தார் செங்கோட்டையன்.

இந்த தகவல்களை எல்லாம் ரொம்பவே உன்னிப்பாக கேட்டுக் கொண்ட அமித்ஷா, “நீங்க சொல்றது எல்லாமே சரி.. ஏத்துக்கலாம்.. அடுத்து என்னன்னு பார்க்கலாம்” என சொல்லி இருக்கிறார்.

அமித்ஷா சந்திப்பு பற்றி செங்கோட்டையன் என்ன நினைக்கிறாராம்?

அமித்ஷாவுடனான 30 நிமிட சந்திப்பு குறித்து செங்கோட்டையனுக்கு ரொம்ப ஹேப்பியாம்.. “நம்ம சொன்ன அத்தனை விஷயங்களையும் ஏற்றுக் கொண்டார் அமித்ஷா.. நாம நினைச்சதுதான் சீக்கிரமாக நடக்கும்” என நம்பிக்கையோடு தமக்கு நெருக்கமானவர்களிட, சொல்லி மகிழ்ந்துள்ளார் செங்ஸ். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போதும் நாம் மேலே சொன்ன விவரங்களைத்தான் செங்கோட்டையன் கூறினார்.

டெல்லியில் இன்றும் முகாமிட்டு பிரதமர் மோடியையும் சந்திக்க திட்டமிட்டாராம் செங்கோட்டையன். ஆனால் பஞ்சாப் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பிரதமர் மோடி செல்வதால், இன்னொரு நாள் அந்த சந்திப்பும் நடக்கப் போகிறதாம்

எல்லாம் சரி.. செங்கோட்டையன் விவகாரத்தில் பாஜக, நிர்மலா சீதாராமன் மேடம் எப்படி உள்ளே வந்தாங்கய்யா?

அது ரொம்ப முக்கியமாச்சே.. சுவாரசியமும் நிறைய இருக்கே..

ஒவ்வொன்றாக சொல்லுமய்யா..

பாஜக கூட்டணிக்கு வர முடியாதுன்னு எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் பிடித்து கொண்டிருந்த போதுதான் செங்கோட்டையன் பிரச்சனை உருவாகிறது. எடப்பாடிக்கு விவசாயிகள் நடத்துன பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதில் இருந்து செங்கோட்டையன் விவகாரம் தொடங்குது..

இந்த விவகாரத்தை பேசுவதற்கு முன்னர் செங்கோட்டையன் போன இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். அங்கே செங்கோட்டையனுடன் இருந்தது பாஜகவில் உள்ள பிரபல ஜோதிடர் ஷெல்வின் மற்றும் அவரது நண்பர் ஶ்ரீதர். நாமக்கல் கோவிலில் பூஜை போட்டுதான் செங்கோட்டையன், எடப்பாடிக்கு எதிரான பிரளயத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அந்த பூஜைதான் எடப்பாடியை பாஜக பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அதனால செங்கோட்டையனை டெல்லி பாஜக மேலிடம் ரொம்பவே அர்வணைக்கிறது..

சரி.. நிர்மலா மேடத்தின் ரோல் என்ன?

தமிழக பாஜக விவகாரங்களில் அறிவிக்கப்படாத மேலிடப் பொறுப்ப்பாளராக நிர்மலா சீதாராமன் செயல்பட்டு வருகிறார்.. இதனால்தான் அவ்வப்போது முக்கியமான நேரங்களில் டெல்லியே நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

பாஜக கூட்டணிக்குள் எடப்பாடி வருவதற்கு முன்னர் நிர்மலா சீதாராமனை ஏற்கனவே பலமுறை செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து செங்கோட்டையன் போர்க்கொடி தூக்க எடப்பாடி பாஜக கூட்டணிக்குள் வந்துவிட்டார்..

இதன் பின்னர் அண்மையில் சென்னைக்கு வந்திருந்த போது நிர்மலா மேடத்தை சந்திக்க நேரம் கேட்டிருந்தார் செங்கோட்டையன் .ஆனால் மேடம், நேரம் தரவில்லை.

இதுல செங்கோட்டையன் ரொம்ப வருத்தமாகிட்டாராம்.. அப்போது, “இவங்களை நம்பி நாம களத்துல கால் வைச்சுட்டோம்.. இதனால ஈரோடு மாவட்டத்துல நம்மை முழுசா காலி செய்றாரு எடப்பாடி.. இவங்க நம்மை சந்திக்க மறுக்கிறாங்களே” என தமது சகாக்களிடம் செங்ஸ் புலம்பியிருக்கிறார். இதனையே நிர்மலா மேடம் காதுகளுக்கும் கொண்டு போகச் செய்தார் செங்ஸ்

இதற்கு, “சென்னையில் உங்களை சந்திச்சு பேசுனா அதுக்கு எடப்பாடி எப்படியும் முட்டுக்கட்டை போட்டுவிடுவாரு.. அது ரொம்ப அதிகமாக பேசப்பட்டுவிடும்.. அதனால நீங்க டெல்லிக்கு வாங்க எல்லாத்தையும் பேசிக்கலாம்” என கிரீன் சிக்னல் காட்டினாராம் நிர்மலா மேடம்.

இதனையடுத்துதான் செப்டம்பர் 5-ந் தேதி மவுனம் கலைக்கிறேன் என அறிவித்தார் செங்ஸ். இந்த செப்டம்பர் 5-ந் தேதி செங்ஸ் ஜாதகத்துக்கு- அவரது கடக ராசிக்கு ‘ராஜயோகம்’ கிடைக்கும் என சொல்லி ஜோதிடர்கள்தான் குறிச்சும் கொடுத்தாங்களாம்..

செப்டம்பர் 5-ந் தேதி திட்டமிட்டபடியே, அதிமுகவில் பகிரங்கமாக கலகக் குரலை வெளிப்படுத்தினார் செங்கோட்டையன். இதனால் அவருடைய கட்சி பதவி மட்டுமல்ல.. அவரது ஆதரவாளர்கள் பதவியும் பறிக்கப்பட்டு அதிமுகவில் உச்சகட்ட குழப்பம் உருவாகிடுச்சு..

இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா? என்பதைப் போல, செங்கோட்டையனை டெல்லிக்கு நிர்மலா சீதாராமன் அழைத்தார். இப்ப அவருடனேயே போய், அமித்ஷாவை சந்தித்து பேசிய கையோடு, “எங்களை நம்பி வந்த யாரையும் நாங்க கைவிடமாட்டோம்.. இடையில கொஞ்சம் மிஸ் கம்யூனிகேஷனாகிடுச்சு.. இனி அது எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என செங்கோட்டையனிடம் நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார்.

ஓ.. இந்த ஆபரேஷனில் வேறு யாரும் இருக்காங்களா?

ஆமாம்.. “செங்கோட்டையனைத் தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி அழைக்க இருக்கிறதாம்.. நாள் நேரம் குறிச்ச உடன், டெல்லியில் இருந்து ஓலை வரும்.. தினகரன் போவாராம்.

அப்ப அடுத்து எடப்பாடிக்கு சம்மனா?

இதுபற்றி பாஜக வட்டாரங்களில் நாம் பேசிய போது, செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனையும் அமித்ஷா அழைத்துப் பேச இருக்கிறாராம். இந்த சந்திப்புகளுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு அழைத்து, “பிரிந்து சென்றவர்கள் விவகாரத்தில் இறுதி முடிவு என்னதான் எடுக்கப் போறீங்க?” என கேள்வி கேட்கும் பாஜக. அப்போதும், இதேபோல எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டினால்.. ‘நடக்க வேண்டிய அத்தனையும் நடக்கும்'” என்கின்றனர்.

அப்படி என்ன நடக்குமாம்?

வழக்கம் போல அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு ஒரு சிக்கல் வரலாம்.. அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக ஒருவர் உரிமை கோரலாம்.. இதெல்லாம் பாஜகவுக்குதான் கை வந்த கலையாச்சே.. தங்களது வழிக்கு எடப்பாடி பழனிசாமி வராமல் போனால் அதிமுகவை அதகளப்படுத்திவிட்டுதான் டெல்லி ஓயும்” என அலாரம் அடித்தபடியே சென்ட் பட்டனைத் தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share