டிஜிட்டல் திண்ணை: விஸ்வரூபமான அஜித்குமார் லாக்கப் மரணம்-யார் அந்த எஸ்.பி ‘சார்’?

Published On:

| By Minnambalam Desk

Lockup Death SP

வைஃபை ஆன் செய்ததும் திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண விவகாரம் சர்ச்சைக்கு காரணமே அந்த எஸ்பி சார்தானா? என்ற கேள்வியுடன் டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Ajithkumar lock up death

திருப்புவனம் அஜித்குமார் மரணத்தின் பின்னணி என்ன?

சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலுக்கு ஜூன் 27-ந் தேதியன்று மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மூதாட்டி 76 வயது சிவகாமி, மகள் மருத்துவர் நிகிதாவுடன் சாமி தரிசனம் செய்ய காரில் வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோவில் காவலாளி அஜித்குமார், வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது காரை பார்க் செய்ய அஜித்குமாரிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் தமக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால் வேறொருவர் உதவியுடன் காரை பார்க்கிங் செய்துள்ளார்.

சிவகாமியும் அவரது டாக்டர் மகளும் சாமி தரிசனம் முடித்துவிட்டு காரில் அமர்ந்த போது, காரின் பின் சீட்டில் கட்டைப்பையில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என கூறியிருக்கின்றனர். இது தொடர்பாக காவலாளி அஜித்குமாரையும் விசாரித்திருக்கின்றனர். இதனையடுத்து திருப்புவனம் போலீசில் சிவகாமியும் அவரது மகளும் புகார் கொடுத்தனர். இந்த நகை திருட்டு புகாரை விசாரித்த போதுதான் போலீசார் தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம்தான் தற்போது பெரும் புயலை கிளப்பி தமிழக அரசுக்கும் நெருக்கடியை தந்துவிட்டது.

தமிழக அரசுக்கு இவ்வளவு நெருக்கடி தருவதற்கு காரணமே தற்போது காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சிவகங்கை எஸ்பி ஆஷிஸ் ராவத் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.

யார் இந்த எஸ்பி ஆஷிஸ் ராவத்?

2014-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ஆஷிஸ் ராவத், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். சேரன்மகாதேவியில் துணை கண்காணிப்பாளர் (ASP) ஆக பணியாற்றினார். பின்னர் புதுடெல்லி பட்டாலியன் பிரிவில் கண்காணிப்பாளராக (SP) ஆக பணிபுரிந்தார். இதனையடுத்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்த ஆஷிஸ் ராவத், நீலகிரி மற்றும் தஞ்சாவூரில் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார். கடந்த ஜனவரி மாதம்தான் சிவகங்கை எஸ்பியாக பொறுப்பேற்றார்.

சரி பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் அளவுக்கு எஸ்பி ஆஷிஸ் ராவத் என்னதான் செய்தார்?

அஜித்குமார் இறந்த தகவல் தெரிந்த உடனேயே கான்ஸ்டபிள்களை தொடர்பு கொண்டு மேலதிகாரிகள் விசாரித்த போது, “நகை திருட்டு தொடர்பாக அந்த டாக்டரம்மா (சிவகாமி மகள் டாக்டர் நிகிதா) சோசியல் மீடியாவில் பேசப் போறேன்னு சொல்றாங்கப்பா.. அதனால் நல்லா விசாரியுங்க” என டிஎஸ்பி சொன்னதால்தான் அஜித்குமாரை விசாரித்தோம் என்று சொல்லி இருக்கின்றனர்.


=இதனையடுத்து டிஎஸ்பி சண்முக சுந்தரத்திடம் மேலதிகாரிகள் கேட்ட போதும், “சோசியல் மீடியாவில் பேசுவேன் என டாக்டர் சொன்னதால்தான் விசாரிக்க சொன்னேன்” என தயங்கியபடியே சொல்லி இருக்கிறார்.

சரி.. சம்பவம் நடந்துவிட்டது.. அதனால் கான்ஸ்டபிள்கள் மீது நடவடிக்கை எடுங்க என எஸ்பி ஆஷிஸ் ராவத்திடம் மேலதிகாரிகள் சொல்ல, ‘அது எப்படி நம்ம போலீஸ் மீது நாமே ஆக்‌ஷன் எடுப்பது? அது எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.. என எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டாராம். ஆனாலும் தொடர்ச்சியாக மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியே இல்லாமல் முதலில், 1 ஹெட் கான்ஸ்டபிள், 4 கான்ஸ்டபிள்கள் மற்றும் டிரைவர் என 6 பேரை சஸ்பெண்ட் செய்தாராம் ஆஷிஸ் ராவத்.

இதன் பின்னர் பிரச்சனையும் பெரிதாகி, பிரேத பரிசோதனை அறிக்கையும் வர வேறுவழியே இல்லாமல் டிரைவர் தவிர இதர 5 போலீசாரும் கைது செய்யப்பட்டனர். அப்போதும் டிஎஸ்பி சண்முக சுந்தரத்தை சஸ்பெண்ட் செய்யுங்க என ஆஷிஸ் ராவத்திடம் மேலதிகாரிகள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் கேட்பதாக இல்லையாம்.

இப்படி ஓவராக முரண்டு பிடித்த ஆஷிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் டிஎஸ்பி சண்முகசுந்தரமும் சஸ்பெண்ட் செய்யபட்டுவிட்டார்.

ஆனாலும் இந்த விஷயத்தில் எஸ்பி ஆஷிஸ் ராவத் ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருந்தார்? ஒருவேளை எஸ்பி ஆஷிஸ் ராவத் சொல்லிதான் அஜித்குமாரை டிஎஸ்பி மற்றும் கான்ஸ்டபிள்கள் கடுமையாக விசாரித்திருப்பார்களோ? அல்லது ஆஷிஸ் ராவத்துக்கு வேறு யாரேனும் நெருக்கடி கொடுத்தார்களா? என்கிற விசாரணையையும் மேலதிகரிகள் நடத்தி வருவதாக டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share