வைஃபை ஆன் செய்ததும், ‘பூனைக் குட்டி வெளியே வந்தது.. டும்.. டும்” என டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Ajithkumar Nikitha
தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் லாக்கப் மரணம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்ககு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.
அஜித்குமாரின் வீட்டுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி வரும் நிலையில் இந்த வழக்கில் புகார் கொடுத்த ‘நிகிதா’ பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
யார் அந்த நிகிதா?
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமியின் மகள் நிகிதா. இருவரும் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்ற போது 10 பவுன் நகை காணவில்லை என புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கோவில் காவலாளி அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி விசாரிக்க அவர் உயிரிழந்தார்.
அஜித்குமார் மரண விவகாரத்தில் நகைகளை காணவில்லை என புகார் கொடுத்த நிகிதா, ஒரு டாக்டர் என கூறப்பட்டது. அஜித்குமார் மரண சம்பவத்தை விசாரித்த போலீஸ் உயர் அதிகாரிகளிடமும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கான்ஸ்டபிள்கள் நிகிதா ஒரு டாக்டர் என்றே சொல்லி இருந்தனர்.
இன்னொரு பக்கம், நிகிதாவின் உறவினர் ஒருவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்கிற தகவலும் சொல்லப்பட்டது; அதேபோல நிகிதாவின் உறவினர் ஒரு காவல்துறை உயர் அதிகாரி; அவர்தான் எஸ்பிக்கு தெரியாமல், டிஎஸ்பிக்கு தொடர்பு கொண்டு, அஜித்குமாரை விசாரிக்க அழுத்தம் கொடுத்தார். இதனடிப்படையில்தான் திருப்புவனம் போலீசார் அஜித்தை கடுமையாக விசாரித்தனர் என்கிற தகவலும் வெளியானது.
ஆனால் இவை அனைத்தையுமே நிகிதா திட்டவட்டமாக மறுத்துள்ளார். பத்திரிகையாளர்களுக்கு நிகிதா அளித்த பேட்டியில், தாம் டாக்டர் அல்ல. முனைவர் பட்டம் பெற்றவர். (திண்டுக்கல்) அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறேன். எனக்கு எந்த உயர் அதிகாரியையுமே தெரியாது.
திருமங்கலத்தில் எங்கள் வீட்டில் ஹால் கட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் திமுக ஒன்றியச் செயலாளர் பெரியசாமியின் மகன் மூவேந்திரன் என்பவரிடம் நாங்கள்தான் ரூ2 லட்சம் கொடுத்து ஏமாந்திருக்கிறோம். இந்த மோசடி பற்றி சிஎம் செல்லுக்கும் புகார் கொடுத்தோம்; துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் புகார் கொடுத்தோம். எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த பின்னணியில் தற்போது நிகிதா குறித்து அதிர்ச்சி தகவல்கள் ஆதாரங்களுடன் வெளியாகி உள்ளன. பேராசிரியரான நிகிதா, 2011-ம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ16 லட்சம் மோசடி செய்ததாக மதுரை திருமங்கலம் காவல்நிலையத்தில் ராஜாங்கம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை FIR பதிவாகி இருக்கிறது. இந்த FIR நகலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சரி நிகிதா பற்றி FIR-ல் என்னதான் கூறப்பட்டுள்ளது?
இந்த FIR-ல் “2010-ம் ஆண்டு அப்போது துணை முதல்வராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் நேர்முக உதவியாளர் தமக்கு உறவினர் என்றும் அவர் மூலமாக தம்மால் ஆசிரியர் பணி, விஏஓ பணி ஆகியவற்றை வாங்கித் தர முடியும் எனவும் கூறி ராஜாங்கம் என்பவரிடம் பகுதி பகுதியாக மொத்தம் ரூ16 லட்சம் வசூல் செய்துள்ளார் நிகிதா. ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அரசு பணி வாங்கித் தராமல் நிகிதா ஏமாற்றி உள்ளார். இதனால் கொடுத்த பணத்தை ராஜாங்கம் திருப்பிக் கேட்ட போது நிகிதா குடும்பமே ராஜாங்கத்தை மிரட்டியிருக்கிறது. ஒருகட்டத்தில் நிகிதா குடும்பம் தலைமறைவாகிவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நிகிதாவின் தாயார் சிவகாமி, ஜெயபெருமாள், கவியரசு, சபாதேவி, நிகிதா என மொத்தம் 6 பேர் மீது 420 -வது பிரிவின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகவல்கள் தற்போது விரிவாக ஊடகங்களில் வெளியான நிலையில், நிகிதா உண்மையிலேயே 10 சவரன் நகையை பறிகொடுத்தாரா? 10 சவரன் நகையை தொலைத்தவர் ஏன் எழுத்துப்பூர்வமாக போலீசில் புகார் கொடுக்கவில்லை? நிகிதாவிடம் எழுத்துப்பூர்வமாக புகாரைப் பெறாமல் ‘தனிப்படை’ டீமே அஜித்குமாரை டார்கெட் செய்து விசாரிக்க வேண்டிய அவசியமும் அழுத்தமும் ஏன்? யாரால் வந்தது? நிகிதாவின் தாயார் சிவகாமிக்கு வீல் சேர் கொடுத்ததற்காக அஜித்குமார் ரூ.500 கேட்டதாலேயே அவர் மீது திருட்டு புகாரை சுமத்தினாரா நிகிதா? என விடைதெரியாத கேள்விகள் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.