வைஃபை ஆன் செய்ததும், ‘எங்க திரும்பினாலும் அதிருப்தி குரலா இருக்கே’ என டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் கோபம், அதிமுகவில் மீண்டும் செங்கோட்டையன் கலகக் குரல்.. இதைத்தானய்யா சொல்றீங்க?
ஆமாம்பா.. முதல்ல சூடாக செங்கோட்டையன் மேட்டரில் இருந்து சொல்றேன்..
அதிமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான
செங்கோட்டையன் செப்டம்பர் 5-ந் தேதி முக்கிய முடிவை எடுக்கப் போறார் என நேற்று நள்ளிரவு முதலே வலம் வந்த செய்திகள் பரபரப்பை கிளப்பிவிட்டன.
இன்றைக்கும் கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் வீடு முன்பாக அவரது ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் திரண்டுவிட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “செப்டம்பர் 5-ந் தேதியன்று கட்சி அலுவலகத்தில் மனம் திறந்து பேசப் போகிறேன்.. அதுவரை பொறுமையாக இருங்க” என ஓப்பனாகவே அறிவிக்க, அதிமுகவின் ‘அத்தனை’ வட்டாரங்களும் மட்டுமல்ல பாஜகவும் இப்போது பரபரத்துக் கொண்டிருக்கிறது.
செங்கோட்டையன் மீண்டும் போர்க் கொடியை ஏன் தூக்குறாராம்?
இதுபற்றி செங்கோட்டையன் ஆதரவாளர்களிடம் நாம் பேசிய போது, அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 30-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்துச்சு.. அந்த கூட்டத்தில் செங்கோட்டையனும் கலந்து கொண்டார்.
அப்போ, செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி முகம் கூட கொடுத்து ஒரு வார்த்தை கூட, ஜஸ்ட் நல்லா இருக்கீங்களான்னுகூட கேட்கலை.. அண்ணன்ன் செங்கோட்டையனை ஒரு பொருட்டாகவே எடப்பாடி மதிக்காமதான் நடந்துகிட்டாரு..
ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தாலும் மீண்டும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில எடப்பாடி தம்மை கண்டுக்காமல் இருந்தது அண்ணனை ரொம்பவே காயப்படுத்தியிருச்சு… இதனால “என்கிட்ட மட்டும் ஏன் எடப்பாடி இவ்வளவு வெறுப்பை காட்டுறாரு?” என எங்களிடம் வேதனைபட்டார் அண்ணன்.
இதுமட்டுமல்ல.. 2026 சட்டமன்ற தேர்தலில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அண்ணனுக்கு சீட் தரவே கூடாதுன்னு நினைக்கிறாராம் எடப்பாடி.. “செங்கோட்டையனுக்கு போட்டியாக ஒருத்தரை இறக்கியே ஆகனும்… இல்லைன்னா தொகுதியை பாஜகவுக்கு தள்ளிவிடனும்” என சொல்லியே ஆட்களை வலைவீசி தேடிகிட்டு இருக்கார் எடப்பாடி.. இந்த தகவலும் அண்ணனுக்கு வந்தது..
‘தலைவர் எம்ஜிஆர் காலத்துல இருந்து இருக்கிற கட்சி நல்லா இருக்கனும்னு நாம நினைக்கிறோம்.. ஆனா எடப்பாடி நம்மை எப்படியாவது காலி செய்யனும்னு நினைக்கிறாரே’ என எங்களிடம் வெறுப்பாக சொன்ன கையோடுதான், “செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து சில விஷயங்களைப் பேசப் போகிறேன்” என பிரஸ் மீட்டில் அறிவிச்சுருக்கிறார் என்கின்றனர்.
செங்கோட்டையன் மீண்டும் வெடிக்கப் போகிறார் என்கிற தகவல் வெளியான உடனே நேற்று இரவு முதலே, சசிகலா தொடங்கி அத்தனை எடப்பாடி எதிர்ப்பாளர்களும் அவரை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனராம்.
சரி.. டிடிவி தினகரன் நேற்று திடீர்னு கொந்தளிச்சு பேட்டி தர என்ன காரணம்னு இப்ப சொல்லுங்க
டிடிவி தினகரன் நேற்று பேட்டி தருவதற்கு முன்னதாக கடந்த சில நாட்களாகவே, “பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக புறக்கணிப்பா? அமமுக தொண்டர்கள் அதிருப்தி- விஜய் கட்சி கூட்டணியில் டிடிவி தினகரன் சேருகிறாரா?” என ஊடகங்கள் பிரேக்கிங் நியூஸ் போட்டு வேட்டு வெடித்து கொண்டிருந்தன.
இந்த பரபரப்புக்கு நடுவேதான், ” 2026 தேர்தலில் யாருக்கும் நிபந்தனையற்ற ஆதரவு எல்லாம் கிடையாது.. தேர்தல் கூட்டணி பற்றி டிசம்பரில்தான் முடிவெடுப்போம்” என திடீரென நேற்று பாஜக கூட்டணிக்குள் வெடிகுண்டு வீசினார் டிடிவி தினகரன்.
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில்தான் தாம் இருப்பதாக சொல்லி வந்த தினகரன், நேற்று ‘டோனை’ தலைகீழாக மாற்றி பேச பாஜக தலைவர்கள் ரொம்ப ஷாக்கிட்டாங்க..
தினகரனின் இந்த ‘ஆவேசமான’ நிலைப்பாட்டுக்கு வேறு யாரும் காரணமில்லையாம்.. சாட்சாத் எடப்பாடி பழனிசாமிதான் முழு காரணமாம்.
அப்படி என்ன ‘சம்பவம்’ செய்தாராம் எடப்பாடி?
பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரான ஜிகே வாசன், சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் கூட்டணி தலைவர்களை ஒருங்கிணைக்க நினைச்சார்.. இதற்காக தந்தை ஜிகே மூப்பனாரின் 24-வது நினைவு நாள் நிகழ்ச்சியை பயன்படுத்த திட்டமிட்டார்..
இந்த நிகழ்ச்சியில்தான் ஆகஸ்ட் 30-ந் தேதி நிர்மலா சீதாராமன், எடப்பாடி, அண்ணாமலை எல்லாம் கலந்துகிட்டாங்க..
ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சிக்காக எடப்பாடியை அழைக்க ஜிகே வாசன் போயிருந்தார். அப்போது ஜிகே வாசனிடம், “மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருவதாக சொல்றீங்க.. அய்யா மேல (ஜிகே மூப்பனார்) எனக்கு ரொம்ப மரியாதை உண்டு.. நான் அவசியம் வருவேன்.. இந்த நிகழ்ச்சியில வேற யாரெல்லாம் கலந்துக்கிறாங்க?” என வெளிப்படையாகவே கேட்டுள்ளார் எடப்பாடி.
இதற்கு, “டிடிவி தினகரன், தேமுதிக சுதீஷ்னு எல்லோரையும் அழைச்சிருக்கோம்” என சொல்லியிருக்கிறார் ஜிகே வாசன்.
உடனே முகம் மாறிப் போன எடப்பாடி பழனிசாமி, ” தினகரன் எல்லாம் வந்தா சரியாக இருக்காதே” என அதிருப்தியைக் காட்டி இருக்கிறார். ஜிகே வாசனும் இதை புரிந்து கொண்டு எடப்பாடி கருத்துக்கு ஓகே சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
இந்த சந்திப்புக்கு பின், டிடிவி தினகரனை தொடர்பு கொண்ட ஜிகே வாசன், எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்கிறார் என தகவலை பாஸ் செய்ய செம்ம அப்செட் ஆகிட்டாராம். தமது அமமுகவினரிடம் இது பற்றி பேசும்போதெல்லாம், டிடிவி தினகரன் ரொம்ப கோபத்தை காட்டிகிட்டே இருந்தாராம். இதற்கு அப்புறம்தான், “பாஜக கூட்டணிக்கு அமமுக குட்பை?” என்கிற செய்திகள் எல்லாம் வெளியாகி, டிடிவி தினகரனும், டிசம்பரில்தான் கூட்டணி பற்றிய முடிவை சொல்வோம் என்கிற அறிவிப்பை வெளியிட்டாராம்.
செங்கோட்டையன், தினகரன் வரிசையில் இன்னொரு சம்பவத்தையும் செஞ்சுருக்கார் எடப்பாடியார்.
அது என்னவாம்?
ஜிகே மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சி தொடர்பாக ஜிகே வாசன், யார் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் பாஜக மாஜி மாநிலத் தலைவர் அண்ணாமலை பெயரே இல்லை.
அந்த அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அ.இ.அ.தி.மு.க-வின் மாநில பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி. பழனிச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் M.L.A., மற்றும் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும் அண்ணாமலை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால ஊடகங்களில், “அண்ணாமலைதான் பாஜக அதிமுக கூட்டணியை ஒற்றுமைப்படுத்துகிறார்; ஒருங்கிணைக்கிறார் என அவரை மையமாக்கியே செய்திகள் அடுத்தடுத்து வந்தன. இன்னொரு பக்கம், ” அந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் சுதீஷை அவமானப்படுத்திவிட்டார் இபிஎஸ்” என எடப்பாடிக்கு எதிராகவும் சில ஊடகங்கள் வீடியோ போட்டு விமர்சித்தன.
ஜிகே வாசன் அழைத்த நிகழ்ச்சிக்கு போய் அண்ணாமலைக்கு பாசிட்டிவ்வாகவும் தமக்கு நெகட்டிவ்வாகவும் செய்திகள் வெளியானதில் கடுப்பாகிவிட்டார் எடப்பாடி. இதனால், “இதுக்குதான் அண்ணாமலையை அழைக்கவே வேண்டாம்னு சொன்னேன்.. இப்ப என்ன நடந்துருச்சு பாருங்க..” என்கிற குமுறலை ஜிகே வாசனுக்கு சிலர் மூலமாக பாஸ் செய்தாராம் எடப்பாடி.
ஓ.. செங்கோட்டையன், தினகரன், ஓபிஎஸ், சசிகலா என அத்தனை பேருடனும் எடப்பாடி ‘மல்லுக்கட்டிக் கொண்டே’ இருப்பதற்கு வலுவான பின்னணி இருக்கனுமே?
நிச்சயமாக.. இது பற்றி டிடிவி தினகரன் வட்டாரங்களில் பேசிய போது, “அதிமுக- பாஜக கூட்டணியில் எங்க அமமுக இடம் பெறுவதை எடப்பாடி விரும்பவே இல்லை.. ஏன்னா டிடிவி தினகரனின் காலில் விழுந்து வணங்கி பதவி வாங்கியவங்க இன்றைக்கும் அதிமுகவில் சீனியர்களாக முக்கிய பதவிகளில் இருக்கிறாங்க.. ஒருவேளை டிடிவி அதிமுக கூட்டணிக்குள்ளே வந்துட்டால், அந்த மாதிரி தினகரனால் அதிமுகவில் மேலே வந்தவங்க ஸ்லீப்பர் செல்லாக மாறிடுவாங்க.. குரூப் பாலிட்டிக்ஸை தினகரனே வளர்த்துவிடுவாருங்கிற பயம் எடப்பாடிக்கு ரொம்பவே அதிகம்..
ஏன்னா எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்கனும் என்கிற ஆசை, விருப்பத்தை எல்லாம் விட, 2026 தேர்தலுக்குப் பின்னரும் அதிமுக என்கிற கட்சி ‘நம்ம கண்ட்ரோலிலேயே இருக்கனும்.. நமக்கு எதிராக பேசக் கூடியவங்க இல்லாத கட்சியாக அதிமுக நம்ம பிடியில்தான் இருக்கனும்.. ‘ அப்படிங்கிறதுலதான் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றால் பலரும் பல திசைகளில் தப்பி போகக் கூடும் என்பது அவருக்கே தெரியுங்கிறதால ரொம்ப முன்ஜாக்கிரதையாகவே இருக்கிறார் எடப்பாடி” என்கின்றனர்.
திரும்பிய பக்கம் எல்லாம் எடப்பாடிக்கு ஏக பயம்.. இந்த பயம் செஞ்ச வேலைதான், செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா என அத்தனை ‘எதிரிகளை’யும் ஒன்று சேர்க்க போகுது.. இனி வரும் நாட்களில் அதிமுகவில் ஒவ்வொரு நாளும் பிரளயமாகத்தான் இருக்கும் போல என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.