வைஃபை ஆன் செய்ததும், “அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கும்” என்கிற அரிச்சுவடியை படித்தபடியே டைப் செய்ய தொடங்க தொடங்கியது வாட்ஸ் அப்.
ஓபிஎஸ் டீம்தான் இப்போ ரொம்ப தீவிரமான ஆலோசனையில் இருக்கிறதாமே?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்தார். தமிழக பாஜக தலைவர்களுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றம்தான்.
சென்னைக்கு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் வருவதற்கு முன்னரே ஓபிஎஸ்ஸை அண்ணாமலை தொடர்பு கொண்டிருந்தார். அப்போது பிஎல் சந்தோஷை சந்திக்க ஓபிஎஸ்ஸை அண்ணாமலை போனில் அழைத்தார்; ஆனால் ஓபிஎஸ் பிடி கொடுக்காமல் பதில் சொல்லி இருந்தார் என்பதை நாம் மின்னம்பலத்தில் எழுதி இருந்தோம்.

சென்னைக்கு பிஎல் சந்தோஷ் வந்த போது, பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர்கள் 14 பேர் கொண்ட மையக் குழு கூட்டத்தை நடத்தினார். அதில், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற ஓபிஎஸ் அவசியம்; ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டதையும் நாம் சொல்லி இருந்தோம். இதற்கு பிஎல் சந்தோஷ் ரியாக்ஷன் காட்டவில்லை என்ற தகவல் ஓபிஎஸ்-க்கு போயிருக்கிறது.
ஆனால் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, “ஓபிஎஸ்ஸை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள்தான் சமாதானப்படுத்த வேண்டும்.. ஆனால் இதுவரை அவரிடம் யாரும் பேசவில்லை. இதைத்தான் என்னிடம் ஓபிஎஸ் சொன்னார். இதுவரை அவரை யாரும் தொடர்பு கொண்டதாகவும் எனக்கும் தெரியவில்லை என்றார்.
இதுபற்றி ஓபிஎஸ் வட்டாரங்களில் நாம் பேசிய போது, “பாஜகவில் அண்ணாமலைக்கு ஏதாவது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா? அவரை எப்படி பாஜக சார்பாக பேசுகிறார் என நாம எடுத்துக் கொள்ள முடியும்? பாஜகவில் பொறுப்பில் உள்ள தலைவர்கள்தானே ஓபிஎஸ்ஸிடம் பேசியிருக்க வேண்டும்.. அப்படி பேசியிருந்தால்தானே பாஜக அழைத்தது என சொல்லவே முடியும்” என்கின்றனர்.
மேலும், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் போன்றவர்கள், “மீண்டும் பாஜக பக்கமே போக வேண்டாம்.. அவங்க நமக்கு கொடுத்த “மரியாதை” எல்லாம் போதும்.. இதுக்கு மேலயும் அவங்களோட போய் அசிங்கப்படனுமா? அப்படியே பாஜக மூலமாக அதிமுகவுக்கே போனாலும் கூட எடப்பாடி பழனிசாமி நமக்கு முக்கியத்தும் தருவாரா? என்பதும் சந்தேகம்தான். ஒருவேளை அதிமுக ஆட்சியே அமைத்தாலும் நமக்கு அமைச்சர் பதவி எல்லாம் நமக்கு எடப்பாடி கொடுப்பாரா? என்பதும் சந்தேகம்தான். அப்படி இருக்கும் போது ஏன் இன்னமும் பாஜக பற்றி நாம யோசிக்கனும்னு கொந்தளிப்பா கேட்கிறாங்க” என்கின்றனர்.

அத்துடன், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், திமுகவில் சபரீசனுடன் பேசி வருகிறார்.. அதேபோல மனோஜ் பாண்டியனும் திமுக தரப்புடன் பேசிக் கொண்டிருக்கிறாராம். ஓபிஎஸ் டீமில் இருக்கிற எல்லோருடைய சாய்ஸும் இப்போதைக்கு திமுகவாகத்தான் இருக்கு.. திமுகவுடன் இணைந்து செயல்படுவதுதான் எல்லோருக்கும் நல்லதுன்னு எல்லோருமே சொல்றாங்க.. அதனால கூடிய சீக்கிரம் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், உசிலம்பட்டி ஐயப்பன் ஆகிய மூவருமாக சேர்ந்து சந்திக்கப் போகிறார்கள்.. தங்களது தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த பட்டியலுடன் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது என்கின்றன ஓபிஎஸ் தரப்பு வட்டாரங்கள்.
அப்ப ஓபிஎஸ் அணியில் இருக்கும் வைத்திலிங்கம்?
வைத்திலிங்கத்தைப் பொறுத்தவரை, திமுகவுடன் இணைந்து செயல்படுவதில் விருப்பமில்லையாம். வைத்திலிங்கம் தனக்கும் மகனுக்கும் நல்ல பதவியை கொடுத்துவிட்டால் அதிமுகவுக்கே திரும்பி வந்துவிடுகிறோம் என எடப்பாடி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.. அதாவது 4 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஓபிஎஸ் அணியில் இருந்து வைத்திலிங்கம் கழன்று கொள்ள போகிறார் என டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.