வைஃபை ஆன் செய்ததும், ‘ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கய்யா’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
தேர்தல் வந்துவிட்டாலே சில விஷயங்களும் தீவிரமாகத்தான் இருக்கும்..
அப்படித்தான்.. திமுகவின் சீனியர் அமைச்சரான திண்டுக்கல் ஐ. பெரியசாமியை குறிவைத்து அமலாக்கத்துறை களமிறங்கியிருக்கிறது. அதுவும் 2006-2011-ல் தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படையில்தான் இந்த ரெய்டு.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் ஐ.பெரியசாமி வீடு, சென்னை பசுமைவழிச் சாலை வீடு, திண்டுக்கல் சீலப்பாடியில் ஐபி செந்தில்குமார் வீடு, மதுரை சிவாஜி நகரில் மகள் இந்திரா வீடு, ஒட்டுப்பட்டியில் மகள் இந்திராவின் மில்கள், வத்தலகுண்டுவில் மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ.வின் நிறுவனம், சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் செந்தில்குமாரின் அறை என பல இடங்களில் ரெய்டு நடத்தி இருக்கின்றனர்.
இப்ப நடக்கிற ரெய்டுகளில் சிக்கும் டாக்குமெண்ட்ஸை வைத்து பழைய கேஸை புதுப்பிக்க போகிறதாம் ஈடி.
ஓஹோ.. ஈடியின் இந்த திடீர் ரெய்டின் பின்னணியில் ‘நெல்லை விருந்து’ அடிபடுகிறதே?
ஆமாம்.. நெல்லையில் தமது வீட்டில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்களுக்கு பிரம்மாண்டமான விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் பாஜக தலைவர்களும் பங்கேற்றனர்.
ஒரு பக்கம் விருந்து நடக்க, முதல் மாடியில் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமியும் முக்கிய ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். சுமார் ஒன்றரை மணிநேரம் இருவரும் பேசியிருக்கின்றனர்.
இதுபற்றி நம்மிடம் விவரித்த சோர்ஸ்கள், நெல்லை விருந்தின் போது நயினாரும் எடப்பாடியும் பல முக்கிய விஷயங்களை ஷேர் செய்திருக்காங்க.. அதில், “திமுகவினர் ரொம்பவே வேகமாக தேர்தல் பணிகளில் இறங்கிட்டாங்க.. இந்தளவு எலக்ஷன் வேலைகளில் இறங்கியிருக்கும் திமுகவை ஜெர்க் ஆக்கனும்னா அமைச்சர்களின் பண பலத்தை முடக்கனும்.. அதுக்கு ஒரே வழி ரெய்டுகள்தான்.. அப்பதான் அவங்களால செயல்பட முடியாத அளவுக்கு நெருக்கடி வரும்” என இருவரும் பேசியிருக்கின்றனர்.
இந்த பேச்சில் தென் மாவட்டத்தின் திண்டுக்கல் ஐ.பெரியசாமி மற்றும் 4 அமைச்சர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு இவங்க ‘சிக்கிட்டாலே’ திமுகவின் ஓட்டமும் குறைஞ்சிடும்.. நாம ப்ரீயாக வேலை பார்க்கலாம் எனவும் பேசியிருக்கின்றனர்.
நெல்லையில் நடந்த இந்த விருந்து, ஆலோசனைகளுக்குப் பின்னர்தான் அமலாக்கத்துறை திடீரென களத்தில் குதித்து இருக்கிறது என்கின்றன.
ஆக அடுத்து 4 அமைச்சர்கள் வீடுகளுக்கு அமலாக்கத்துறை படையெடுக்கப் போகிறதோ? என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.