மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்றது.
அப்போது மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தை ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அதோடு எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் தனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று கூறினார். மேலும் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் மறைமுகமாக விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, “நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ’அவரே வரல, இவர் எங்கே வரப்போகிறார்’ என ஜோசியம் சொன்னார்கள். கட்சியின் பெயர் அறிவித்த பிறகு, ’பெயர் தானே அறிவிச்சிக்காரு, மக்கள் கிட்ட பெயர் வாங்கனும்ல, அதெல்லாம் முடியாது’ என்றார்கள்.
அதன்பின்னர், ’மாநாடெல்லாம் எவ்வளவு பெரிய விசயம். ஒத்தையாளா புஸ்ஸி ஆனந்தை வச்சிக்கிட்டு எப்படி நடத்த முடியும்?’ என்றார்கள். ஆனால் அதன்பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்.
இப்போது புதிதாக ஒன்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். ’ஆட்சியை பிடிப்பது எல்லாம் அவ்வளவு எளிதான விசயம் இல்ல. இவரு நேரா சூட்டிங்கில் இருந்து வருவாராம். ஆட்சியை பிடிப்பாராம். அது எப்படி முடியும்? அவராலேயே முடியல, இவருக்கு இத்தனை வருசம் ஆச்சி’னு ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், ’கூட்டம் எல்லாம் ஓகே தான். அதெப்படி ஓட்டாக மாறும்’ என்று கேட்கிறார்கள்.
இந்த அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வது ஒன்று மட்டும் தான். இந்த கூட்டம். வெறும் ஓட்டாக மட்டும் இல்லை, அது ஆட்சிக்கு கொண்டுப் போகும் ரூட்டாகவும் மாறும்.
நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. மக்கள் ஆதரவு எனும் படைக்கலத்துடன் அரசியலுக்கு வந்திருக்கிறேன். கட்சியை ஆரம்பித்த பிறகு தான், மக்கள் மனதில் இடம் தேடி செல்வார்கள். ஆனால் நான் ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகு தான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்” என கூறினார்.
விஜய்யின் இந்த பேச்சு, அரசியலுக்கு வருவேன் வருவேன் எனக்கூறி கடைசியில் கட்சியை ஆரம்பித்து, அதன்பின்னர் பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்தையும், மார்கெட் இல்லாமல் அடைக்கலம் தேடி வந்தவர் என கூறியது நடிகர் கமல்ஹாசனையும் குறிப்பிட்டு பேசியுள்ளதாக என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
