நான் தனித்து நின்றாலும் நிற்பேன்; தவிர வேறு இடங்களுக்குச் செல்வது என்பது எனது மனசாட்சிக்கு ஒத்து வராது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று (ஜனவரி 27) காலை செய்தியாளர்களிடம் பேசிய தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எங்களுடன் வர வேண்டும் என நினைத்தார். ஒவ்வொரு நாளும் ஒரு நிலை எடுக்கிறார்கள். அவர் ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார். எங்கு சென்றாலும் வாழ்க” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “நான் தவெகவிற்கு கூட்டணிக்கு வர வேண்டும் என செங்கோட்டையன் விருப்பப்பட்டார். நான் வருவேன் என அவர் நம்பினார். செங்கோட்டையன் என்னை அழைத்தபோது, நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “நான் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே இருக்கிறேன். அம்மாவின் கூட்டணியில் செல்வதைத் தவிர வேறு முடிவு எடுக்க முடியாது. நாம் அரசியலுக்காக அம்மாவிடம் வரவில்லை. அம்மாவால் அரசியலுக்கு வந்தவன் நான். தீரன் சின்னமலை சிலைக்கு மாலை போட்டபோதே இதைத் தெரிவித்தேன்.
தனித்து நின்றாலும் நிற்பேன்; தவிர வேறு இடங்களுக்குச் செல்வது என்பது எனது மனசாட்சிக்கு ஒத்து வராது” என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
