இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் விமானங்கள், ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகள் உண்மை அல்ல என்று மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. U.S. India Iran?
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அமெரிக்காவின் இந்த தாக்குதலால் தங்களது அணுசக்தி நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஈரான் விளக்கம் அளித்தது.
இதனிடையே ஈரான் மீதான தாக்குதலுக்கு இந்தியாவின் வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்தியது; அமெரிக்கா மேற்கொண்ட இந்த Operation Mid-Night Hammer நடவடிக்கைக்கு இந்திய வான்வெளியைப் பயன்படுத்த மத்திய அரசு எப்படி அனுமதிக்கலாம்? என்பது போன்ற கருத்துகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பி-2 பாம்பர்ஸ் விமானங்கள் மேற்கு பசிபிக் பகுதியில் இருந்து புறப்பட்டு அந்தமான் மற்றும் இந்தியாவின் மத்திய பகுதி வழியாக சென்று ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த பதிவுகளில் பதிவிடப்பட்டிருந்தது; இது குறித்து மத்திய அரசு மவுனமாக இருக்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம், இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது உண்மை அல்ல; பொய்யான தகவல்கள் என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.