நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ் (RSS) நிறுவனரான ஹெட்கேவர் சிறைக்கு போனதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, சுதந்திரப் போராட்டத்துக்கு ஹெட்கேவரும் பங்களிப்பு செய்தார்; சிறைக்கு போனார்; சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். அடைக்கலம் கொடுத்தது என கூறியிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. மோடியின் பேச்சு பொய் என குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாட்டை பிளவுபடுத்தும் அமைப்பு. சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் யாரும் பங்கேற்கவும் இல்லை; சிறைக்குப் போகவும் இல்லை. ஆங்கிலேயர்களால் அந்த இயக்கம் தடை செய்யப்படவும் இல்லை.
1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கம் நடைபெற்ற போது ஒட்டுமொத்த தேசத்தின் மக்களும் சிறைகளை நிரப்பினர்; ஆனால் மக்களின் இந்த எழுச்சியை ஒடுக்குவதற்குதான் ஆர்.எஸ்.எஸ். , அன்று ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்தது” என தெரிவித்துள்ளது.